தோல்வி குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை : அடுத்த போட்டியில் மீண்டெழுவோம் - இலங்கை அணித் தலைவர் தசுன்

Published By: Digital Desk 5

17 Oct, 2022 | 09:36 AM
image

(என்.வீ.ஏ.)

நமிபியாவுடனான தோல்வியையிட்டு கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் அப் போட்டியிலிருந்து படிப்பினைகளை விரைவாக கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வருவோம் எனவும் இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

2022 ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண எட்டாவது அத்தியாயத்தில் நமிபியாவுடனான ஆரம்பப் போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட சில கேள்விகளும் தசுன் ஷானக்க அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: உலகக்கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை. போட்டியை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? சரியாக எந்த விடயத்தில் தவறு நிகழ்ந்தது?

தசுன் ஷானக்க: 'அது முதலாவது போட்டி என்பதால் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், நாங்கள் விளையாடிய விதம்தான் கவலை தருகிறது. குறிப்பாக பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் எமது அணி இதனைவிட சிறப்பாக விளையாடக்கூடியது. அவர்கள் சரியான இலக்குகளில் முறையாக பந்துவீசினார்கள். எமது பந்துவீச்சளார்கள் அதில் தவறினர். எமது துடுப்பாட்டமும் பிரகாசிக்கவில்லை. பவர்ப்ளேயில் 3 விக்கெட்களை இழந்திருக்கக்கூடாது. அது 150 ஓட்டங்களுக்கு மேற்பட்ட வெற்றி இலக்கை அடைவதற்கு சிரமத்தைக் கொடுக்கும்' என்றார் தசுன் ஷானக்க.

கேள்வி: முதல் 15 ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் திறமையாக செயற்பட்டதால் ஒரு கட்டத்தில் நமிபியா 6 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அதன் பின்னர் என்ன நேர்ந்தது?

தசுன் ஷானக்க: 'எமது பந்துவீச்சாளர்கள் அதிகமாக ஏதேதோ முயற்சி செய்தனர். ஆனால், குறைநீள பவுண்டறிகள் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது. எமது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்கு விக்கெட் பந்துவீசியிருக்க வேண்டும். அந்த வகையில் நமிபியா பந்துவீச்சாளர்கள் அதில் சிறப்பாக செயற்பட்டனர். நமிபியாவின் 6ஆவது விக்கெட் வீழ்த்த பின்னர் அடுத்த விக்கெட்டை நாங்கள் கைப்பற்றியிருக்க வேண்டும். எமது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்கு விக்கெட் பந்துவீசாதது   அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அனுபவம் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் என்ற வகையில் அது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என நான் நினைக்கிறேன். பந்துகளை அடிக்க விடுவதை விடுத்து விக்கெட்களை வீழ்த்துவது குறித்து விரைவாக கற்றுக்கொள்ளவேண்டும்' என்றார்.

கேள்வி: முதல் சுற்றில் ஏ குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்றால் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளை இலங்கை எதிர்கொள்ளவேண்டிவராது. பதிலாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென் ஆபிரிக்க அணிகளை சந்திக்கவேண்டிவரும், அது நல்லது என கருதுகிறீர்களா?

தசுன் ஷானக்க: 'அடுத்த இரண்டு போட்டிகளில் எவ்வாறு விளையாடவேண்டும் என்பதே எமது நோக்கம். எந்த குழுவில் எந்தெந்த அணிகளுடன் விளையாடப்போகிறோம் என்பதைப் பற்றி கருத்தில் கொள்ள மாட்டோம்.. முதல் சுற்றில் எஞ்சிய இரண்டு போட்டிகள் குறித்து கவனம் செலுத்தி அடுத்த சுற்றுக்கு செல்வதை உறுதிசெய்வதே முக்கியம்' என பதிலளித்தார்.

கேள்வி: போட்டியைக் கண்டுகளித்தவர்களில் கணிசமான அளவு இலங்கையர்கள் இருந்தார்கள். அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பார்கள் என்பது வெளிப்படையான ஒன்று. நமிபியா போன்ற அணியிடம் தோல்வி அடைந்து, ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து போன்ற அணிகளுடன் விளையாடவுள்ளது குறித்து அவர்களது கரிசணை எவ்வாறாக இருக்கும்?

தசுன் ஷானக்க: வெற்றிபெறவேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்பினார்கள். நாங்கள் எங்கு சென்றாலும் எமது இரசிகர்கள் எமக்கு ஆதரவு அளிக்கின்றனர். குறிப்பாக மெல்பர்னில் இலங்கையர்கள் பெருமளவில் இருக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அவர்களை மகிழ்விக்கச் செய்யவெண்டும். அடுத்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை உறுதிசெய்வோம்.'

முதல் சுற்றில் இலங்கை தனது இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை நாளை சந்திக்கவுள்ளதுடன் நெதர்லாந்தை 20ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31