வலிகளைச் சுமக்கும் உறவுகளுடன் ‘கண்ணாமூச்சி’ விளையாடும் அரசு “இழப்பீடாக இரண்டு இலட்சம் அல்ல…எடையளவு தங்கம் தந்தாலும் ஏற்கமாட்டோம்” என்பதில் வட,கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் உறுதியாக உள்ளன

Published By: Digital Desk 5

16 Oct, 2022 | 03:07 PM
image

-ஆர்.ராம்

போரை முடிவுக்கு கொண்டுவந்திருந்த அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2010 மேயில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபித்தார். ஆணைக்குழு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சாட்சியங்களை திரட்டியது. பின்னர் இறுதி அறிக்கை மஹிந்தவிடம் கையளிக்கப்பட்டதும் பரிந்துரைகளை மட்டுமன்றி ஒட்டுமொத்த அறிக்கையையும் கைகழுவினார். 

தொடர்ந்து 2012இல் ஜெனிவாவில் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேறவும், உள்நாட்டில் போராட்டங்கள் வலுக்கவும், அதே மஹிந்த ராஜபக்ஷ 2013 ஆகஸ்டில் முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.

இந்த ஆணைக்குழுவும் களவிஜயங்களைச் செய்தது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடத்தில் சாட்சியங்களை பதிவு செய்தது. ஒருபடி மேல்சென்று உறவுகளைத் தொலைத்தவர்களிடத்தில் ஆடு,கோழிவளர்ப்பு உள்ளிட்ட செயற்றிட்டங்களையும், மரணச்சான்றிதழையும் திணிப்பதற்கு தீவிரமாக முயற்சித்தது. அந்த முயற்சிகளும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் பொருட்டாக கொள்ளப்படவில்லை. 

இந்தப்பின்னணியில் 2015இல் பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் கூட்டரசு அரசியல் சாணக்கியரான மறைந்த மங்கள சமரவீரவை, ஜெனிவாவுக்கு அனுப்பியது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியது. கூடவே, நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தது. 

உண்மையில், உள்நாட்டில் போர் முடிவின் பின்னரான காலத்தை நிலைமாறுகாலம் என்று கொள்ள முடியுமா என்பதில் பல்வேறு வாதங்கள் தற்போதும் உள்ளன. அதனைவிட, பரிகார நீதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் பகிரங்கமாக அறிவித்தும் இருந்தனர். 

இருப்பினும், மேற்குலத்தின் திணிப்பில், இலங்கை அரசாங்கமும், அரசாங்கத்தின் திணிப்பில் அதனோடு ஒட்டிஉறவாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை முதற்கட்டமாக ஏற்றுக்கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடத்தில் வலிந்து திணிப்பதற்கு பிரயத்தனங்களைச் செய்திருந்தன. 

அதன்விளைவாகவே, 2016ஆம் ஆண்டு 14ஆம் இலக்கச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டு இருவருடங்களின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம்அலுவலகமும் ஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் இழப்பீட்டு பணியகத்திற்கான சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டது. எனினும் அது செயல்வடிவம் பெறவில்லை.

காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகமும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக, உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் வழங்குவதற்கும், ‘காணாமலாக்கப்பட்டவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தற்காலிக சான்றிதழ்’ ஒன்றை வழங்குவதற்கும் பிரயத்தனம் செய்தது. 

இந்த முயற்சியால், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறித்த அலுவலகத்தினையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் மனோநிலைக்குத் தள்ளப்பட்டனர். அதுமட்டுமன்றி, ஆகக்குறைந்தது காணாமலாக்கப்பட்ட ஒரு சம்பவத்தையாவது விசாரணைக்கு உட்படுத்தி நடந்ததை வெளிப்படுத்துமாறும் உறவுகள் அலுவலகத்திடம் சாவால் விடுத்தனர். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. 

இந்நிலையில் தான், 2019இல் கோட்டாபய ஆட்சிப்பீடம் ஏறியவுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தமது போராட்டங்களை தீவிரப்படுத்தினர்கள். கோட்டாபயவே நடந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டியவர் என்பதை அழுத்தமாகக் கூறினார்கள். கோட்டாபயவுக்கு இந்த விடயம் தொடர் தலைவலியாகவே இருந்தது. 

இதனால் நீதி அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரியைப் பயன்படுத்தி ஒரு இலட்சம் ரூபா இழப்பீடும், காணாமலாக்கப்பட்டோருக்கான சான்றிதழையும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இருப்பினும், அந்தச் செயற்பாடு வெற்றியளித்திருக்கவில்லை.

இந்தநிலையில் தான் “காணாமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பகிரங்கமாகக் கூறிய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தலைமையிலான அமைச்சரவை, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கவும் காணாமல் போனமைக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்கவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி அளித்திருக்கின்றது. 

அதேநேரம், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை ஏற்றுக்கொண்டுள்ள ரணில் விக்கிரசிங்க அப்பொறிமுறையின் படிநிலைகளான உண்மை கண்டறிதல், நீதி நிலைநாட்டல், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிவற்றில்; எந்தவொன்றையும் முன்னெடுக்காது நேரடியாக இழப்பீடை வழங்க முனைகிறார். இதன்மூலம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலைச் செய்ய முடியாது என்பதை பட்டவர்த்தனமான வெளிப்படுத்துகின்றது அவர் தலைமையிலான அரசாங்கம். 

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டையும், இழப்பீட்டையும், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக போராடிக்கொண்டிருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றால் ஒருபோதும் இல்லை என்பதே பதிலாகின்றது. 

“2009 மார்ச் 25ஆம் திகதி. எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. அண்டைக்கு தான் அவனோடு கடைசியாய் பேசினான். அக்காவையும், தம்பிiயும் கூட்டிக்கொண்டு போங்கோ அம்மா நான் வந்திடுவன் எண்டு சொல்லிப் போனவன் இண்டைக்கு வரைக்கும் வரவே இல்லை. 

எண்ட மகன் ஐந்தரை முதல் ஆறடி இருப்பான். அவன்ட அளவுக்கு தங்கத்தை தந்தா கூட நான் ஏற்கப்போவதில்லை. எனக்கு எண்ட பிள்ளை தங்கத்தையும் விட மேலானது. அவனுக்கு என்ன நடந்தது எண்டது தான் தேவை” என்று 13ஆண்டுகளாக தனது மகனைத் தேடிக்கொண்டிருக்கும் யோகராசா கனகரஞ்சினி கண்ணீருடன் கூறுகின்றார். 

யோகராசா கனகரஞ்சனி, வட,கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கத்தின் தலைவியாகச் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார். 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் தற்போது வரையில் தன்னுடைய மகன் உட்பட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கண்டறிவதற்கான தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டும் உள்ளார். 

அவ்வாறானவர், அரசாங்கம் காணாமல் போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா இழப்பீட்டு தொகையை இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை மிகக்காட்டமாக எதிர்கின்றார். 

இவர் மட்டுமல்ல, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட சங்கங்களின் பிரதிநிதிகளும் இழப்பீட்டுக்காக இரண்டு இலட்சம் ரூபா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் முயற்சியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்

“நாங்கள் இறந்தவர்களை தேடவில்லை. உயிருடன் சென்றவர்களையே தேடுகின்றோம். அவர்களை அழைத்துச்சென்றவர்களும், ஒப்படைக்கப்பட்டபோது பாரமெடுத்தவர்களும் இன்னமும் படைகளில் உள்ளார்கள். அப்படினால் எங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அவர்கள் அறிவார்கள். போரை நடத்திய கோட்டாபயவும், ஏனைய தளபதிகளும் இன்னமும் நாட்டில் தான் உள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது நன்றாகவே தெரியும். அவர்கள் அதனை பகிரங்கப்படுத்த வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்துகின்றார்கள். 

“எங்களின் உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு,கிழக்கின் எட்டு மாவட்டங்களில் தொடர்ச்சியாக போராடுகின்றோம். சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்குட்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கோருகின்றோம்.

 இவை, மாறிமாறி வரும் ஆட்சியாளர்களுக்கு தலையிடியாக இருக்கின்றது போலும். அதனால் தான், கோட்டாபய பதவிக்கு வந்ததும் எமக்கு ஒரு இலட்சம் வழங்குவதற்கு முனைந்தார். இப்போது ரணில் அப்பதவியில் இருந்து கொண்டு இரண்டு இலட்சம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுகின்றார்” என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“எங்கள் உறவுகளின் பெறுமதி இரண்டு இலட்சமா? எத்தனை கோடி கொடுத்தாலும் ஏற்கப்போவதில்லை. பணத்தினை கொடுத்து வாயடைத்துவிடலாம் என்று கருதுகின்றது அரசாங்கம். எங்களுக்கு நிதி அல்ல பிரச்சினை. கூழோ கஞ்சியோ குடித்தாலும், எங்களுக்கான நீதி வழங்கப்பட வேண்டும். எம்மவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு காரணமானவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும்” என்றும் அவர்கள் ஆணித்தனமாக கூறுகின்றார்கள். 

இவ்வாறிருக்கையில், தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க முடியுமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

ஏனென்றால், நாட்டின் தாற்போதைய நிலைமைகளின்படி நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி செப்டெம்பர் மாத பணவீக்கம் 69.8 வீதமாக உள்ளதோடு உணவுப் பணவீக்கம் 94.9சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் 70சதவீதமான  மக்கள் தமது உணவு கொள்வனவை, உணவு நுகர்வை குறைத்துக் கொண்டிருப்பதோடு, 23  இலட்சம் சிறுவர்கள் உட்பட 57 இலட்சம் மக்களுக்கு அவசரமாக உணவு ஆதரவு தேவைப்படுகிறது. ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 15.7சதவீதமானோர் சத்துணவுப் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்பட்ட மக்ஸ்வெல் பரணகம விசாரணைகளின் இறுதியில் 19,000 பேர் போர்க் காலத்தில் காணாமற்போனதாக உறுதி செய்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கூற்றப்படி இந்த எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இருப்பினும் அவர்ளிடத்திலும் முழுமையான தரவுகள் இல்லை. 

அதேநேரம் குறித்த ஆணைக்குழுவிடத்தில் 5000பாதுகாப்பு படையினரின் குடும்பங்களும், 23,586 சதாரண தமிழ் உறவுகளும் முறைப்பாடுகளை அளித்துள்ளன. மேலும், 1987-1989 ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தரவுகளற்ற நிலையில் உள்ளது. 

அதனடிப்படையில், வலிந்து காணாமலாக்கப்பட்டதாக அரசாங்கம் ஏற்றுக்கொண்ட எண்ணிக்கையான 19ஆயிரம் பேரின் உறவுகளுக்கும் தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் வழங்குவதற்கான இயலுமை அதனிடம் இல்லை என்பது வெளிப்படையானது. 

பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக சர்வதேச நாணயநிதியத்தையும் இதர நன்கொடையாளர்களையும் நாடி கையேந்திக்கொண்டிருக்கும் அரசாங்கம், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக இரண்டு அல்ல எத்தனை இலட்சங்களாக உயர்த்தினாலும், அத்தனை அறிவிப்புக்களும் உள்நாட்டு, வெளிநாட்டு தரப்புக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு தான். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13