'உங்கள் உடல் உங்களுக்கே சொந்தம்' - பாதுகாப்பற்ற தொடுகை ஆபத்தானது - பகுதி - 3

Published By: Nanthini

10 Oct, 2022 | 01:07 PM
image

(மா. உஷாநந்தினி)

உறுப்புகளை உரிய பெயர்களால் இனங்காட்டுங்கள் 

வீட்டிலிருக்கும் போது பெற்றோரும், பாடசாலை வேளையில் ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு தொடுகை பற்றி சொல்லிக் கொடுக்கலாம். 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறைந்தது 6 அல்லது 7 வயது வரையிலேனும் குளிப்பாட்டுவது இயல்பானதே. அப்படி குளிக்கவைக்கும்போது பிள்ளைகளுக்கு உறுப்புகளை இனங்காட்டலாம். உறுப்புகளின் தேவைகளை பற்றி கூறலாம். 

எங்கெங்கு தொடலாம், எங்கு தொடக்கூடாது என்பதை சொல்லிப் புரிய வைக்கலாம். 

இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், உறுப்புகளை நாசூக்காக சுட்டிக்காட்டும்போது, அவற்றின் பெயர்களையும் அவற்றை குறிக்கும் சரியான சொற்களையும் தெளிவாக பிள்ளைகளுக்கு கூறுவதே நல்லது. 

ஒருவேளை பின்னாட்களில் பிள்ளை யாரேனும் ஒருவர் மூலம் தவறான தொடுகையை உணர்ந்தால், அதை பெற்றோருக்கு தெரியப்படுத்த பிள்ளைக்கு இலகுவாக இருக்கும். 

உதாரணமாக, குழந்தையின் அந்தரங்க உறுப்பை சிலர் 'கருப்பட்டி' என்று வேடிக்கையாக சொல்வதை பார்த்திருப்போம். இது, வீடுகளில் அம்மா, பாட்டி போன்றவர்கள் குழந்தையை கொஞ்சும்போது சாதாரணமாக சொல்வதுதான். 

பெற்றோர் அல்லது உறவினர்களின் இதுபோன்ற மாறுபட்ட சொற்பிரயோகங்களால் குழந்தையும் உறுப்பை அவ்வாறே இனங்காணும். 

பின்னொரு சந்தர்ப்பத்தில், யாரேனும் பிள்ளையின் உறுப்பை தகாத முறையில் தொட்டாலோ, துஷ்பிரயோகம் செய்தாலோ, அதை, பெற்றோர் அல்லாத நம்பிக்கையான ஒருவரிடம், தனக்குத் தெரிந்த பெயரில் (கருப்பட்டி) பிள்ளை கூறும். 

அவ்வாறு சொல்கிறபோது, அதை கேட்பவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகக்கூடும். பிள்ளை என்ன சொல்கிறது என்கிற தெளிவின்மை ஏற்படும். 

எனினும், இதனை பிள்ளையின் மொழியறிந்த பெற்றோரால் மட்டுமே கிரகிக்க முடியும். 

இதனால் தக்க தருணத்தில் பிள்ளையால் பிறரின் உதவியை பெற இயலாமலும் போகலாம். 

ஆகவே, பெற்றோராகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு தொடுகையை பற்றி சொல்லிக் கொடுக்கும்போது உறுப்புகளை அவற்றுக்குரிய பெயர்களால் (சரியான சொற்களால்) அடையாளம் காட்டவேண்டியது, மிக அவசியமாகும்.

வரைந்து காட்டுங்கள் 

தொடுகையை பற்றி பிள்ளைகளுக்கு கற்பிக்கும் மற்றுமொரு இலகு வழியாக வரைபடங்களை பயன்படுத்தலாம். 

ஆண், பெண் அல்லது ஆண் பிள்ளை, பெண் பிள்ளையின் உருவங்களை வரைந்து, அதன் பாகங்களை குறித்து, அதிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் காட்டி, அதன் இயக்கங்களை பிள்ளைகளுக்கு சொல்லித்தர வேண்டும். 

இது, பாடசாலைகளில் ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். அது மட்டுமல்ல, வீடுகளிலும் இவ்வரைபட முறையை பின்பற்றி பெற்றோரே கூட சொல்லித் தரலாம். 

அதிகமான பாடசாலைகளில் ஆசிரியர்கள் உறுப்புகளை கற்பிக்கும்போது பாலுறுப்புகளை பற்றி சொல்லித் தராமல், “நீங்களே படித்துக்கொள்ளுங்கள்” என்று மழுப்பிவிடுவார்கள். 

இது சிறுவர்களை சுயதேடலுக்கு தூண்டுவது மட்டுமல்ல, தவறான தகவல்களின் பக்கம் ஈர்க்கவும் செய்யும். 

வரைபடங்களைக் கொண்டு பிள்ளைகளுக்கு புரிய வைப்பது மிக எளிது. 

எழுத்தை விட, பேச்சை விட சித்திரங்கள் மிக வேகமாக ஒரு விடயத்தை உரியவர்களிடம் கொண்டு சேர்த்துவிடும். அதிலும், சிறுவர்களுக்கு, மனதில் சட்டென பதியக்கூடியவை வரைபடங்களும் சித்திரங்களுமே. 

அந்த வகையில், தொடக்கூடிய உறுப்புகள், தொடக்கூடாத உறுப்புகளை படங்களில் வட்டமிட்டும், வெவ்வேறு வர்ணங்களால் வேறுபடுத்தியும் காட்டலாம்.  

பொம்மைகளை காட்டிச் சொல்லுங்கள்

வரைபடங்களினூடாக மட்டுமன்றி, பொம்மைகளை காட்டியும் Good touch - Bad touch பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். 

ஆண் மற்றும் பெண் பொம்மைகளை கையில் பிடித்தபடி பிள்ளைகளோடு விளையாடுங்கள். பிள்ளைகளோடு ஒன்றித்து, அவர்களின் மனநிலையை அறிந்து, ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பியுங்கள். 

பொம்மையின் உறுப்புகளை விரலால் சுட்டிக் காட்டலாம். 

பொம்மையின் கையை பிடித்து, “தெரிந்த ஒருவர் உங்கள் கையை தொட்டுப் பேசினால், நீங்கள் அன்பாக சிரிப்பீர்கள்...." என தன்மையாக கூறுங்கள். 

தலை, கால், தோள், முதுகு, இடுப்பு, வயிறு, தொடை போன்ற உறுப்புகளை காட்டி, “நன்றாக தெரிந்தவராக இருந்தாலும், இந்த இடங்களில் தொடுவது உங்களுக்கு பிடிக்காவிட்டால், கையை விலக்கிவிடுங்கள்... தள்ளி நில்லுங்கள்... தொடவிடாதீர்கள்.....” என்று சொல்லுங்கள். 

அடுத்து, வாய், மார்பு, கால்களுக்கு இடைப்பட்ட பகுதி (முன்பக்கம்), பின்பக்கம் (பிட்டம்) ஆகிய உறுப்புகளை சுட்டிக்காட்டி, 

“இங்கெல்லாம் யாரும் தொடவே கூடாது.... மீறி தொட்டால், 'வேண்டாம்' என்று கத்துங்கள்.... உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்... அவரிடமிருந்து விலகி வேறிடத்துக்குச் செல்லுங்கள்.... உடனே எங்களுக்குச் சொல்லுங்கள்.... நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..” என்று திரும்பத் திரும்ப உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள், பெற்றோர்களே...! 

மருத்துவர்கள் தொடலாமா?

பெற்றோர் உடனிருக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவிதமாகவும், பெற்றோர் இல்லாத போது பிள்ளையிடம் வழமைக்கு மாறாக நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொள்ளும் விதமாகவும் சிலர் காணப்படுவர். 

அவ்வாறான சிலரே துஷ்பிரயோகிகள். 

ஆனால், சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என நாம் கருதுபவர்கள் எல்லோருமே, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்வதில்லை என்கிற உண்மையையும் நாம் முழுதாக ஏற்க வேண்டும். 

நோயை குணப்படுத்துவதற்காக மருத்துவர்களை நாடும் சிறுவர்கள், அந்த மருத்துவர்களாலேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்கள் நிறைய உள்ளன. 

தொடுகை பற்றி சிந்திக்கும் பெற்றோர்கள், சிறுவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லும்போது மிக விழிப்புடன் இருக்க வேண்டும். 

உங்கள் பிள்ளையை மருத்துவர் பரிசோதிக்கும்போதோ, மேலதிக சிகிச்சைகளை அளிக்கும்போதோ, தாய் அல்லது தந்தை மருத்துவர் அருகில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். 

நீங்கள் பிள்ளையை மருத்துவரிடம் தனியே விட்டுவிட்டு வெளியே செல்ஃபோன் பேசவோ அல்லது வேறு தேவைக்காக அவ்விடத்தை விட்டு நகரவோ கூடாது. 

நீங்கள் இல்லாத தருணத்தில் மருத்துவர் உங்கள் பிள்ளையை தவறான நோக்கத்தோடு தொட்டாலோ அல்லது எல்லை மீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாலோ, அதனால் வரக்கூடிய துன்பங்களை நீங்களும் உங்கள் பிள்ளையுமே அனுபவிக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஜாக்கிரதை! 

கடத்தல்.... கவனம்....

எது பாதுகாப்பான தொடுகை, எது பாதுகாப்பற்ற தொடுகை என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்கிற அதேவேளை சில ஆபத்தான தொடுகைகளையும் உணர்த்துங்கள். 

பிள்ளை வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருக்கிறதா, அல்லது பாடசாலைக்கு வெளியே நிற்கிறதா? கவனம்!

அப்போது மாமா, சித்தப்பா முதலிய உறவினர்கள், தெரிந்தவர்கள், அறிமுகமற்றவர்கள் என யாரேனும் அருகில் வந்து, டொஃபி, சொக்லேட் கொடுத்து, கையை பிடித்து, ஆசை வார்த்தை பேசி, முத்தம் கொடுத்து தன்னுடன் வரும்படி அழைத்தால், உடன் செல்லவே கூடாது என்பதையும் வலியுறுத்துங்கள். 

அது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். 

(தொடரும்...)

இந்த கட்டுரையின் பகுதி 1 ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்த கட்டுரையின் பகுதி 2ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்