ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சீனாவின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விஷேட குழு நாளை சீனா செல்கின்றது. புதிய  கட்சியின்  தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்கள் இந்த விஜயத்தில் கலந்துக் கொண்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார். 

நாளை சீனாவிற்கு செல்லும்  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விஷேட குழு டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும். இதன் போது அங்கு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களே சீனாவிற்கு விஜயம் செய்கின்றனர். சுமார் ஒரு வார காலம் வரை சீனாவில் தங்கியிருக்கும் குழுவினர் அந்நாட்டு அரச மட்ட தலைவர்கள் உட்பட சீன முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளனர். 

அதே போன்ற சீனாவில் வாழும் இலங்கையர்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர்கள் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். புதிய கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றை தெளிவுப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கன்னி ஊடக சந்திப்பு கடந்த  வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிலையில், புதிய கட்சியின் கன்னி விஜயமாக சீனா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர் வரும் தேர்தல்களில் புதிய கட்சியின் கீழ்  போட்டியிடுதல்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர் கொள்ளுதல் என்பன தற்போது மஹிந்த அணிக்குள்ள சவால்களாகும். இதனை கருத்தில் கொண்டே கூட்டு எதிர்கட்சியினர் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளனர். 

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் யார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் காணப்படுகின்ற நிலையில் அதன் நிழல் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றாரா ? ஏன் என்ற கேள்விற்கு இந்த சீன விஜயம் பதிலளிப்பதாகவே அமைகின்றது.