முடியாட்சியின் எதிர்காலம் : சில கேள்விகளும் சந்தேகங்களும்

Published By: Digital Desk 5

09 Oct, 2022 | 06:52 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

பிரித்தானியா மக்கள் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் இல்லாத சாம்ராஜ்யத்தில் வாழப் பழகி வருகிறார்கள். கடந்த ஏழு தசாப்தங்களாக, பிரித்தானியா பெருமையாகத் திகழ்ந்த ஆளுமை. வாழ்வுடன் இரண்டறக் கலந்து விட்ட பிம்பம்.

மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரேளிங் பவுண்கள் இல்லாமல் கொடுக்கல் வாங்கல்களோ, முத்திரைகள் இல்லாமல் தபால்களை அனுப்பவோ முடியாதிருந்த தேசம்.

தற்போது மகாராணியாரின் மூத்த மகன் மூன்றாவது சார்ள்ஸை படிப்படியாக ஏற்றுக் கொள்வது போன்றதொரு தோற்றப்பாடு காணப்படுகிறது. இந்த தோற்றப்பாட்டுக்கு மத்தியில் மெலிதாக தோற்றம் பெற்று படிப்படியாக வளர்ந்து வரும் குரலொன்றும் வலுவான கேள்வியை முன்னிறுத்துகிறது.

முடியாட்சி தேவையா? அது இனிமேலும் தொடர வேண்டுமா? என்பது சிக்கலான கேள்வியின் எளிமையான சாராம்சம். சிலர் வேண்டும் என்கிறார்கள். சிலர் போதும் என்று கூறுகிறார்கள். கேள்விகளுக்கு காரணம் இருப்பதைப் போல, இந்தக் கருத்துக்களுக்கும் காரணங்கள் உள்ளன.

பிரித்தானியாவின் பழைய தலைமுறையைப் பொறுத்தவரையில், முடியாட்சி என்றால் மகாராணியார் தான். அவரைத் தாண்டி சிந்திப்பது கடினம். அவர் எம்மவர். எமது சொத்து என்ற உணர்வு பெரும்பாலான பிரித்தானிய மக்களுக்கு இருக்கிறது. அவர்கள் மகாராணியை நெருக்கமாக உணர்வார்கள்.

மகாராணியின் குடும்பம் என்று வருகையில், ஒரு அந்நியத்தன்மை. பொதுமக்களுடன் ஒட்டாத வாழ்வு ஒரு காரணமாக இருக்கலாம். இது தவிர இராணி என்ற மையப்புள்ளி, அரசாட்சியின் பெருமிதம் என்றால், அவரைச் சூழவுள்ள குடும்பத்திற்குள் எத்தனையோ சர்ச்சைகள். பிரச்சினைகள்.

இவை மக்கள் இளவரசி டயானாவின் மரணம் முதற்கொண்டு, அவரது இளைய மகன் ஹரி அரச குடும்பத்தில் இருந்து விலகி அமெரிக்கா சென்றது வரையில் நீளும். அரச குடும்பம் எமது பெருமை என்பதைத் தாண்டி சுமையெனக் கூறும் தரப்பு, முடியாட்சியை மறுத்துரைக்க சர்ச்சைகளைக் காரணம் காட்டுகிறது.

இதில் யார் அதிகம்? முடியாட்சி வேண்டும் என்கின்றவர்களா, வேண்டாம் என்கின்றவர்களா என்று கேட்டால் விஞ்ஞானபூர்வமாக பதில் சொல்ல முடியாது. ஊடக நிறுவனங்கள் கருத்துக் கணிப்புக்களை நாடுகின்றன. 1998இல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், முடியாட்சி தொடர வேண்டுமென பெரும்பாலான மக்கள் கூறினார்கள்.

மகாராணியாரின் மரணத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், சார்ள்ஸ் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதைப் போல தென்படுகிறது. கருத்துக்கணிப்பில் வாக்களித்தவர்களில், 63சதவீதமான மக்கள் புதிய மன்னர் சிறப்பாக செயற்படக் கூடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

‘பிரிட்டிஷ் பியூச்சர்’ என்ற நிறுவனம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை. அதில் கூறப்பட்ட விடயங்களை கவனத்திற்கொள்வது முக்கியமானது. ஸ்கொட்லாந்திலும், பிரித்தானியாவில் வாழும் சிறுபான்மையினர் மத்தியிலும், 18-24என்ற வயதெல்லைக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் மத்தியிலும் அரச குடும்பத்திற்கான ஆதரவு குறைந்துள்ளது.

அரச குடும்பமும், சொத்துக்களும் பிரித்தானியாவைச் சேர்ந்த மக்களின் வரிப்பணத்தால் பராமரிக்கப்படுகின்றன. இதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவையும் அடங்கும். 

கொரோனா பெருந்தொற்றின் விளைவுகள், ரஷ்ய - உக்ரேனிய யுத்தம் உள்ளிட்ட காரணிகளால் இன்று ஐரோப்பாவிலும் கூட பொருளாதார சிக்கல்கள். இதில் இருந்து ஐக்கிய இராச்சிய மக்களும் தப்பவில்லை.

பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகையில், அதிக பணம் செலவழித்து அரச குடும்பத்தை பேணிப் பாதுகாக்க வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். குறிப்பாக, இளந்தலைமுறை எதுவித பாசாங்கும் இன்றி தைரியமாகவே கேட்கிறது.

கடந்த ஆண்டு பக்கிங்ஹாம் மாளிகை திருத்தப்பட்டது. அது அலங்கரிக்கப்பட்டது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 87மில்லியன் ரூபாவைத் தாண்டியதாக புள்ளிவிபரம் வெளியானபோது. சிலர் வாய் பிளந்து ஆச்சியப்பட்டார்கள். ஆத்திரமடைந்தார்கள்.

மறுபுறத்தில், முடியாட்சியும், அரச குடும்பமும் ஐக்கிய இராச்சியத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரும் காரணிகளாகவும் இருக்கின்றன. இரு வழிகளில் வருமானம் கிடைக்கிறது. முதலாவது அரச குடும்பத்தின் சொத்துக்கள். இரண்டாவது சுற்றுலாத்துறை.

அரச குடும்பத்திற்கு சொந்தமான காணிகள் மற்றும் உடமைகள் (ஊசழறn நுளவயவந) மூலமும், சுற்றுலாத்துறையின் மூலமும் ஐக்கிய இராச்சியத்திற்கு கிடைத்த வருமானம் 1.8பில்லியன் ஸ்ரேளிங் பவுண்கள் என்று பிரான்ட் பைனான்ஸ் நிறுவனம் கூறுகிறது.

அரசியல் ரீதியாக ஆராய்ந்தால், அரியணையில் அமர்ந்திருப்பவர் இராச்சியத்தின் தலைவராக இருப்பார். அரசர் கோலோச்சுவார். எனினும், ஆட்சி செய்வது கிடையாது. அரசியல் யாப்பிற்கமைய, அவர் அரசின் ஆலோசனையுடன் செயற்படுவார்.

பிரதமரையும், அமைச்சர்களையும் நியமித்தல், நாடாளுமன்றத்தில் புதிய அமர்வுகளை ஆரம்பித்தல், பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்களுக்கு முடியாட்சியின் சம்மதம் வழங்குதல் போன்ற சம்பிரதாயபூர்வமான கடமைகள் தான்.

அரியணையில் அமர்ந்திருப்பவர் தேசத்தின் தலைவராகவும் இருப்பார். தேசிய அடையாளத்தையும், ஐக்கியத்தையும், நாட்டின் பெருமையையும் பாதுகாத்து, ஸ்திரத்தன்மையை பேணும் கடமை அவருக்கு உண்டு.

இந்த வகையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியார் கட்சி அரசியலைத் தாண்டி இயங்கியவராக இருந்தார். அரச குடும்பத்தில் மாத்திரமன்றி, அரசியல் களத்தில் நெருக்கடிகள் ஏற்பட்ட வேளையில், அவர் நடுநிலையாக நின்று தீர்த்து வைத்தார்.

உதாரணமாக, மகாராணியார் தேசத்திற்கு ஆற்றிய உரை. ஒரு புறத்தில் அரசியல் சர்ச்சைகளாலும், மறுபுறத்தில் கொரோனா நெருக்கடியாலும் பிரித்தானிய மக்கள் திணறிக் கொண்டிருந்த வேளையில், மகாராணியாரின் உரை நம்பிக்கையை விதைத்தது.

இந்த வல்லமை மன்னர் சார்;ள்ஸிற்கு இருக்குமா என்று கேட்டால், அதற்கு அறுதியான பதிலைக் கூற முடியாது. சார்ள்ஸ் உரையாற்றலாம். அந்த உரையின் மூலம் மக்களை ஆற்றுப்படுத்தக்கூடிய தேசிய பிம்பமாக சார்ள்ஸ் இருக்கிறதா என்பது கேள்வி.

இன்று உலகம் மாறி வருகிறது. மரபுகளாலும் கலாசாராத்தாலும் பண்டைய பெருமைகளாலும் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற பேதங்கள் மறைந்து, சமத்துவத்தை வரித்துக் கொள்ளும் போக்கு நாகரீகமானதாக கருதப்படுகிறது.

இந்தப் போக்கை பிரித்தானியாவிலும் காணலாம். அரசியல், இராணுவ, மத அமைப்புக்கள் ஒன்று சேர்ந்த ஆட்சி நிர்வாகத்தின் உச்சியில் அரசாட்சி இருக்கக்கூடிய கட்டமைப்பு, ஜனநாயகமானது தானா என்ற கேள்வி.

அது தவிர, எதுவித ஆற்றல்களால் அல்லது திறமைகளால் ஈட்டப்பட்டதாக அன்றி, பிறப்பால் கிடைக்கக்கூடிய பதவியின் மூலம் கோலோச்சும் குடும்பம். இது பண்டைய பெருமையாக இருக்கலாம். சமத்துவ சமூகத்திற்கு பொருத்தமானதாக என்றும் கேள்விகள்.

பிரிட்டனைத் தாண்டி சிந்தித்தால், பிரித்தானியா முடியாட்சியை இராச்சியத்தின் தலைவராகக் கொண்டுள்ள சில பொதுநலவாய நாடுகளும், இந்த ஏற்பாட்டை மாற்றத் தலைப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

மன்னர் சார்ள்ஸோ, அவரைத்தொடர்ந்து மணிமகுடம் சூடுபவரோ தமது இராச்சியத்தின் தலைவராக இருக்கத் தேவையில்லை. நமது மண்ணின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இனிமேல் தலைவராக இருக்கட்டுமே என்ற சிந்தனை மேலோங்கியுள்ளது.

தமது நாடு ஐக்கிய இராச்சியத்தின் முடியாட்சியின் கீழ் தொடர்ந்தும் இருக்குமாயின், அது காலனித்துவத்தின் எச்சமே என்று அவுஸ்திரேலியா, கனடா, ஜமைய்க்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் சிந்திக்கிறார்கள். 

பழையன கழிதலும், புதியன சேர்தலும் மாத்திரமன்றி, காலத்திற்கு பொருத்தமற்ற எதனையும் நீக்கி, பொருத்தமானதை சேர்த்தலும் மாற்றம் தானே. அந்த மாற்றம் ஆரோக்கியமானதெனில், அது நடந்தே தீரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48