நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமலிருக்கும் கடப்பாடுகளை இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம்

Published By: Vishnu

03 Oct, 2022 | 09:15 PM
image

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்குமேயானால், இறுதிக்கட்டப்போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியல், அப்போது வட்டுவாகல் பாலத்திற்கு வருகைதந்த படையணிகள் மற்றும் அவற்றின் கட்டளைத்தளபதிகளின் விபரங்கள் உள்ளிட்ட பரந்துபட்ட தகவல்களின் அடிப்படையில் காணாமல்போனோர் பற்றிய விசாரணைகளை முன்னெடுத்தல், வட - கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவிற்குக்கொண்டுவரல், இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீளக்கையளித்தல் உள்ளடங்கலாக மேலும் பல கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் தொடர்பில் சர்வதேச ரீதியில் தாம் கொண்டிருக்கும் கடப்பாடு குறித்து இலங்கை அரசாங்கம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்குமேயானால், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், குற்றவியல் பொறுப்புக்கூறல், இழப்பீட்டுக்கான அலுவலகம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய கலந்துரையாடல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, பாதுகாப்புத்துறைசார் மறுசீரமைப்புக்கள் ஆகிய விவகாரங்களில் அரசாங்கத்தின் கடப்பாடுகள் மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் எவையென்பதைப் பட்டியலிட்டிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், அவற்றை ஓர் அறிக்கையாக வெளியிட்டிருக்கின்றது.

 அதன்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஆஜராகியிருக்கும் சட்டத்தரணிகளின் வேண்டுகோளின்படி கடந்த 2009 மேமாதம் 18 ஆம் திகதி சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை 58 ஆவது படையணியிடமிருந்து பெறவேண்டுமே தவிர, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் பெயர்பட்டியலைப் பெறத்தேவையில்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், 2009 மேமாதம் 17,18 மற்றும் 19 ஆம் திகதிகளில் வட்டுவாகல் பாலத்திற்கு வருகைதந்திருந்த படையணிகளின் விபரங்கள், அவற்றின் கட்டளைத்தளபதிகளின் பெயர்கள் மற்றும் அப்போது நடைமுறையிலிருந்த கட்டளையிடல் கட்டமைப்பு என்பவற்றையும் அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

மேலும் சிறுவர்கள், சரணடைந்தவர்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து மேற்குறிப்பிட்ட பட்டியலில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் விசாரணை நடத்தியதா? எனவும், விசாரணை நடத்தவில்லையெனில் அதற்கான காரணம் என்னவெனவும் அவ்வறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதேபோன்று 2009 மேமாதம் 16 - 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சவேந்திர சில்வா, கமால் குணரத்ன, கட்டளைத்தளபதி கொடிப்பிலி, அப்போதைய பாதுகாப்புச்செயலாளர் மற்றும் முன்னரங்க இராணுவப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் பதிவுகள், அக்காலப்பகுதியில் ஓமந்தையிலிருந்து ஜோஸப் முகாமுக்கு மக்களை அல்லது நபர்களை அழைத்துச்சென்ற வாகனங்களின் விபரங்கள், வட்டுவாகலில் காணப்பட்ட சடலங்களை அப்புறப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருந்த பிரிவின் விபரங்கள், இராணுவ புகைப்படப்பிடிப்பாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் விபரங்களை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் கோரியதா என்றும், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதா என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கேள்வி எழுப்பியுள்ளது.

 அடுத்ததாக மாத்தளை மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட பாரிய மனிதப்புதைகுழிகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை மீள்பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், மாதிரிகளைத் தெரிவுசெய்யும் செயன்முறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துமாறும் அச்செயற்திட்டத்தின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 மேலும் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக சுயாதீன சட்டவாதி அலுவலகமொன்றை ஸ்தாபித்தல், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்கள், இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல் ஆகியவற்றை குற்றமாக்கும் சட்டங்களை உருவாக்கல், நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல்மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்குள்ளான அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் ஊடாக இழப்பீடு வழங்கப்படப்போவதில்லையெனத் தெளிவாக அறிக்கையொன்றை வெளியிடல், புனர்வாழ்வளித்தலின்போது இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளல், கொரோனா வைரஸ் பரவலின்போது கட்டாயத் தகனத்திற்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கல், போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட மேமாதம் 18 ஆம் திகதியன்று எவ்வித அச்சமுமின்றி தமிழ்மக்கள் தமது அன்பிற்குரியவர்களை நினைவுகூருவதற்கு இடமளித்தல், இந்துக்களின் தொல்பொருள் முக்கியத்துவம்வாய்ந்த இடங்களில் இராணுவத்தினரின் ஆதரவுடன் புதிய பௌத்த கோவில்களை நிர்மாணிப்பதை நிறுத்துதல், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடம் மீளக்கையளித்தல் உள்ளிட்ட மேலும் பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08