எஸ்.சதீஸ்

அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் வழக்கு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

2013ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் காலத்தில், செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் பயணித்த வாகனத்தை மறித்து, திகாம்பரத்தின் ஆதரவாளர்கள் குழு தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

அதேபோல், திகாம்பரம் கொழும்பு நோக்கி பயணித்த வேளை, கினிகத்தேனை பகுதியில் வைத்து அவரது வாகனத்தை தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், பாதிப்பை ஏற்படுத்தியதாக, கூறப்படும் மற்றுமொரு வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

குறித்த இரு வழக்குகளிலும் சமரசம் செய்து கொள்ள விருப்பம் என, இரு தரப்பு வழக்கறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர். 

எது எவ்வாறு இருப்பினும், இந்த இரு வழக்குகள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுக்களுக்கு சட்டமா அதிபரின் பணிப்புரை இதுவரை நீதிமன்றத்துக்கு கிடைக்கப் பெறவில்லை என்பதால் வழக்கினை சமரசம் செய்து கொள்வது குறித்து பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய இரு வழக்குகளையும் எதிர்வரும் 2017.04.03 திகதிக்கு ஒத்திவைக்க ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் பிரசாத் லியனகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.