'தமிழியப் புரட்சிக்கவிஞர்' வீறுகவியரசர் முடியரசனார்

Published By: Nanthini

01 Oct, 2022 | 03:17 PM
image

- ஒக்டோபர் 7 முடியரசனாரின் 102ஆவது பிறந்தநாள் - 

“புழுவாவுனை இகழ்வார்முனம்

    புலியேறென எழுவாய்

பொது வாழ்வினில் நிலையோடிரு

    புதுவாழ்வினை அடைவாய்

தொழுதேவளர் உடல் வாழ்வது

    தொலையாயெனில் உனையே

தொழுநோயொடு திரிவாரினும்

    இகழ்வாரிதை நினைவாய்

மொழி வாழவும் இனம் வாழவும்

    முயல்வாய் தமிழ் மகனே

முரணாதொரு முகமாயெழு

    முடியாததும் உளதோ?

இழிவாகிய நிலை ஓடிட

    எடுவாள் பகை மலையோ?

எழுவாய் தலை நிமிர்வாய் உனை

    எதிர்வாரினி இலையே”

                         (வீறுகவியரசர் முடியரசன்)

சொல் வேறு, செயல் வேறு என்றிராமல், தாம் பாடிய பாட்டின்படியே வாழ்ந்து காட்டிய பாவலர்கள் வெகு சிலரே. அத்தகையோரில் முதன்மையானவர் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த தமிழகத்தின் தனிப்பெரும் கவிஞர் வீறுகவியரசர் முடியரசனார். 

தமிழ், தமிழர், தமிழ்நாடு, பொதுவுடைமை, சாதி-சமய மறுப்பு, சமூக – பொருளாதார விடுதலை, குமுகாய மறுமலர்ச்சி ஆகிய தளங்களில் பாரதி, பாரதிதாசர் ஆகியோருக்கு இணையாக வைத்து போற்றப்படுபவர் அவர்.

பாவேந்தர் பாரதிதாசனோடு நெருங்கிப் பழகி, அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். பாரதிதாசனாரால் "என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..." என்று பாராட்டப் பெற்றவர். 

"கவிஞன் யார் என்பதற்கு எடுத்துக்காட்டு தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்" என்று தந்தை பெரியாராலும், "திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞர்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களாலும் வாழ்த்தப் பெற்றவர். தமிழகத்தின் அரசவைக்கவிஞர் பதவி இரு முறை தன்னைத் தேடி வந்த போதும், அது தம் நேரிய கொள்கை வாழ்வுக்குத் தடையாக இருக்குமென்று ஏற்க மறுத்தவர்.

தம் ஆருயிர் நண்பரான முடியரசனாருக்கு 'கவிப்பேரரசர்' என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார் முத்தமிழறிஞர், முன்னைநாள் முதல்வர், கலைஞர். திராவிட இயக்கத்தின் ஈடிணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் என்றும் குறிப்பிட்டார் அவர். "நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்த முடியரசனாரின் இலக்கியப்பணியால் திராவிட இயக்கம் இன்று நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறது" என்று கவிப்பேரரசரை வாழ்த்தினார், கலைஞர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்தபோது 'தமிழை நான் விற்கமாட்டேன்' என்று முடியரசனார் மறுத்ததை குறிப்பிட்டு,“உண்மையான வணங்கா முடியரசர் இவர்தான்" என்று வியந்துரைத்ததும் வரலாறு.

வாழ்க்கை

வீறுகவியரசர் முடியரசன் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலட்சுமி இணையர்க்கு ஒக்டோபர் 7, 1920இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை சுயமரியாதை கொள்கை மீதுள்ள ஈடுபாட்டாலும்,  தனித்தமிழ்ப் பற்றாலும் ‘முடியரசன்' என்று மாற்றிக்கொண்டார். 

சாதி, சமயம் தவிர்த்த சங்கத்தமிழ்ச் சான்றோன்

தான் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதோடு, தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர். அவரது பேரப்பிள்ளைகள் இன்றளவும் சாதி மறுப்பு மணம் செய்துகொண்டு வீறுகவியரசரின் கொள்கையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். 

வீறுகவியரசரின் சாதி ஒழிப்புச் செயல்பாடுகளை மனதிற்கொண்டே தவத்திரு குன்றக்குடி அடிகளார் "சாதி ஒழியவேண்டும் என கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள், அவற்றை தன் வாழ்விலும் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா என தெரியவில்லை" என்று போற்றினார். முடியரசனார் சாதி,-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். தான் இறந்தாலும், தனக்கு எச்சடங்குகளும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி, அவ்வாறே நிறைவேறச் செய்தவர். 

வீறுகவியரசர் நூல்கள்

முடியரசனாரின் பாடல்கள் பல சாகித்திய அகடமியாலும், தேசிய புத்தக நிறுவனத்தாலும், இந்திய மொழிகளிலும் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உருசிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டரசின் சிறந்த நூலுக்கான பரிசுகளை இவரது 'முடியரசன் கவிதைகள்', 'வீரகாவியம்' ஆகிய நூல்கள் பெற்றுள்ளன. 11 கவிதை நூல்கள், 2 இசைப்பாடல் நூல்கள் ('காவியப்பாவை' - 1955, 'பாடுங்குயில்' - 1983), ஒரு நாடகக் காப்பியம் உட்பட 4 காப்பிய நூல்கள் ('பூங்கொடி' - 1964, 'வீரகாவியம்' - 1970, 'ஊன்றுகோல்' - 1983, 'இளம்பெருவழுதி - நாடகக்காப்பியம்' - 2008), 3 பாட நூல்கள் ('முடியரசன் தமிழ் நூல்' - 1961, 'முடியரசன் தமிழ் இலக்கணம்' - 1967, 'தமிழ்ச்சோலை' - 1967), 3 கட்டுரை நூல்கள் ('பாடுங்குயில்கள்' - 1975, 'எப்படி வளரும் தமிழ்?' - 2001, 'சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்' - 1990), 2 கடித இலக்கிய நூல்கள் ('அன்புள்ள பாண்டியனுக்கு' - 1999, 'இளவரசனுக்கு' - 1999), 'எக்கோவின் காதல்' (1999) எனும் சிறுகதை நூல், 'பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்' (2008) எனும் தன்வரலாற்று நூல் என 27 நூல்களை எழுதியவர். 

1987இல் தமிழ்நாட்டரசின் பாவேந்தர் விருதை பெற்றவர். 2000ஆம் ஆண்டில் முடியரசனாரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. www.tamilvu.org என்னும் தளத்தில் முடியரசனாரின் நூல்களை பதிவிறக்கம் செய்ய இயலும். 

'தன்னைப் புரந்த வள்ளலான கானாடு காத்தான்' வை.சு.சண்முகனாரை பற்றி பாரதியார் எழுதிய பாடலை, நண்பர் தமிழண்ணலுடன் தாம் நடத்திவந்த 'எழில்' இதழில் முதன் முதலாக வெளியிட்ட பெருமைக்குரியவர், முடியரசன். 

மொழிப்போர் காப்பியம்

வீறுகவியரசர் இயற்றி 1964இல் வெளியான 'பூங்கொடி' என்னும் மொழிப்போர்க் காப்பியம்,  இளைஞர்கள் பலரை மொழிப்போரில் ஈடுபடத் தூண்டியதால், அன்றைய ஆட்சியாளர்களால் இக்காப்பியம் தடை செய்யப்பட்டது. பிறகு 1965இல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தடை விலக்கப்பட்டது. இந்நூலை பற்றி பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை "உலக மொழிக்காப்பியங்கள் மூன்றனுள் ஒன்றாக கருதப்பெறும் சிறப்புடையது பூங்கொடி” என்று குறிப்பிட்டுள்ளார். 'பூங்கொடி காப்பியம்' 1993இல் இந்திராணி இலக்கியப் பரிசை பெற்றது.

பூங்கொடி காப்பியத்தில் விபுலானந்த அடிகள்

வீறுகவியரசர் முடியரசனார் தம் பூங்கொடி காப்பியத்தில், அக்காப்பிய மாந்தர்களுள் ஒருவராக பல முறை சந்தித்து, அளவளாவி, நட்பைப் பெற்ற விபுலானந்த அடிகளாரை போற்றிப் பாடியுள்ளார். பல்கலைக்கழக நிலையில் உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியராக  பொறுப்பு வகித்தவரும், யாழ் நூல் இயற்றியவருமான கிழக்கிலங்கையை சார்ந்த விபுலானந்த அடிகளாரை அவரது இயற்பெயரான 'மயில்வாகனர்' என்னும் பெயரால் காப்பியத்தின் கதாமாந்தராக்கி இருக்கிறார் வீறுகவியரசர். வள்ளுவர் தம் திருக்குறளின் 'நீத்தார் பெருமை' அதிகாரத்தில் குறிப்பிடும் நற்பண்புகள் அனைத்தையும் பெற்ற துறவியாக விபுலானந்தரை போற்றுகிறார்.

பூங்கொடி நூலின் 26ஆவது காதையான ‘யாழ்நூல் பெற்ற காதை'யில்,        

ஒரு மனப்பாடும் ஓம்பியநெறியும்

விரிமொழிப்புலமும் ஒருங்குடன் பெற்றார்,

உரனெனுந்தோட்டியால் ஓரைந்தடக்கி

இருமை வகை தெரிந்தீண்டறம் பூண்டார்,

குணமெனுங் குன்றின் கொடுமுடி நின்று

செயற்கருஞ் செயல் பல செய்திடும் பெரியார்

கற்றவர் குழுமும் கடல்சூழ் ஈழம்

பெற்றவர், மொழி பல கற்றவர், நற்றவர்,

எழில் மயில்வாகனர் எனும் பெயர் பெற்றவர்'  

                                                  (26:34-42)

என்று அறிமுகம் செய்கிறார். யாழ்நூலின் சிறப்புகளை காப்பியத்தலைவி பூங்கொடியிடம் மயில்வாகனர் உரைப்பதாக அடுக்கியுரைக்கும் முடியரசனார்,

‘ஏழிரண்டாடுகள் இடர் பல துய்த்தும்

ஏழிசை யாழின் இயற்றிறம் யாவும்

நுண்ணிதின் ஆய்ந்து நுவல்வதிப் பெறு நூல்

நண்ணுமிவ் முயற்சியில் நான் படுதுயரம்

எண்ணினும் உடலுளம் எல்லாம் நடுக்குறூஉம்;

ஆயிரம் ஆண்டுகள் அறியா வகையில்

வீயுறும் நிலையில் வீழ்ந்து கிடந்த

நற்றமிழ் யாழும் சொற்றமிழ் இசையும்

தெற்றென விளக்குந் திருவிளக்கிந்நூல்;

செந்தமிழ்க்கிஃதோர் சீர்சால் நற்பணி

இந்த நன்னினைவால் இடரெலாம் மறந்தேன்'

                                                   (26: 58-68)

என்று யாழ் நூலின் சிறப்புகளையும், நூலுருவாக்கத்தில் நூலாசிரியர் மயில்வாகனரின் (விபுலானந்தர்) அருமுயற்சிகளையும் வியந்துரைத்துள்ளார்.

யார் கவிஞன்? 

'கவியரங்கில் முடியரசன்’ நூலில் அமைந்த பாரதி வீரன்' என்னும் தலைப்பிலான கவிதையில்,

'காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்

கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி

மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை

மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்

தேசத்தை தன்னினத்தை தாழ்த்திவிட்டு

தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்

மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு

மேல் விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்

ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்

ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின்

மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்

மேலோங்கு கொடுமைகளை காணும்போது

காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்

கவிதைகளை பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்;

தாழ்ச்சி சொலும் அடிமையலன் மக்கட்கெல்லாம்

தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்'

என்று கவிஞர்க்கு இலக்கணம் வகுத்துள்ள வீறுகவியரசர் அவ்விலக்கணத்தின்படியே வாழ்ந்து காட்டினார். 

"கண்ணதாசன் முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்ட பாவரசர்"

வீறுகவியரசர் முடியரசனாரிடம் நட்பு பாராட்டிய திரைப்பட பாடலாசிரியர் கண்ணதாசன் தாம் நடத்திய இதழ்களில் வீறுகவியரசரின் கவிதைகளை வெளியிட்டு மகிழ்ந்தார். பல கவியரங்குகளில் முடியரசனாரோடு அரங்கேறிய கண்ணதாசன் கவியரங்கொன்றில்,

'முடியரசர் இவரென்றால் மக்களெங்கே?

முன்னோடும் பரி எங்கே? படைக ளெங்கே?

முடி எங்கே? அரசெங்கே? முரச மெங்கே? 

முத்தமிழில் ஒரு தமிழ்தான் முடியோ மற்ற 

இடைத்தமிழ்தான் அரசோ மூன்றாவதான

எழிற்றமிழ்தான் முரசோ? ஓ.. சரிதான் இந்த

முடியரசர் பாவரசர் பாடுகின்றார் நாம்

முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்.. 

மும்முடியை ஓர் தலையில் முடித்த முடியரசர்

எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர்

தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார்

தாய்த்தமிழே அவர் முடியை உனக்குத்தான் சாய்ப்பார்'

தாய்த்தமிழுக்கு மட்டுமே தலைவணங்கும் வீறுகவியரசரின் செம்மாப்பினை கொள்கைநெறி வழுவா வாழ்க்கையினை அருகிருந்து உணர்ந்தவரான கண்ணதாசனார், முடியரசனார் பாடும்போது, ‘நாம் முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்' என்று பணிந்து பாடி மகிழ்கின்றார்.

ஒரு முறை கண்ணதாசனாரிடம் அவரது மூத்த மகன் கண்மணி சுப்பு கவிதை கற்றுத்தரச் சொல்லி வேண்டியபோது ‘முடியரசன் கவிதைகள்' நூலை தம் மகனிடம் கொடுத்து, “ இந்தப் புத்தகத்துல உள்ள எல்லா கவிதைகளையும் மனப்பாடம் பண்ணு... யாருடைய உதவியும் இல்லாம கவிதை தானாக எழுதவரும்...” என்று கூறியதை கவிஞர் கண்மணி சுப்பு பல முறை நினைவுகூர்ந்து போற்றியுள்ளார்.

“தமிழை இத்துணை நேசித்த ஒருவரை யாம் கண்டதில்லை” 

வீறுகவியரசரின் முதல் கவிதை தொகுப்பான ‘முடியரசன் கவிதைகள்' அக்காலத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கியது. இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள வீறுகவியரசரின் நெருங்கிய நண்பரும் தமிழறிஞருமான தமிழண்ணல் அவர்கள், 

“கவியரசர் முடியரசன் தனக்கென தனிப்பாணி வகுத்துக்கொண்டு கவிதையே மூச்சாக வாழ்ந்தவர். தமிழ் அவரது உயிர். எமக்கு தெரிந்தவரை தமிழை இத்துணை நேசித்த ஒருவரை யாம் இதுவரை கண்டதில்லை என்போம். அதனால் தமிழ் உள்ளளவும் வாழ்வு பெறும் கவிதைகளைத் தந்துள்ளார்" என போற்றியுள்ளார்.

முதல் நூல் மட்டுமல்லாது, அவரது அனைத்து நூல்களிலும் தமிழே முதன்மை பெற்றிருந்தது. 'காவியப்பாவை' நூலில் பாரதியின் 'கண்ணன் பாட்டு' போன்று தமிழை பல்வேறு உறவுகளாக்கி, 'தமிழ் - என் தெய்வம்', 'தமிழ் - என் தாய்', 'தமிழ் - என் தந்தை', 'தமிழ் - என் காதலி', 'தமிழ் - என் மனைவி', 'தமிழ் - என் மகன்' ஆகிய தலைப்புகளில் தமிழை தம் உயிருள், உணர்வுள் நிறைந்த உறவாய் எண்ணி பாடி மகிழ்கிறார்.

‘முடியரசன் கவிதைகள்' நூல் குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் ‘ஈழகேசரி' இதழில் 08.08.1954 அன்று வெளிவந்த நூல் மதிப்புரையின் சிறு பகுதியிது.

"எல்லோரும் மானிடராவாரோ? இவ்வுலகில் கல்லெல்லாம் மாணிக்கக்கல் ஆகுமோ?' என்று என் தந்தையார் அடிக்கடி சொல்வது வழக்கம். அவர் இறந்து பல்லாண்டுகளாகியும், அதே ஆப்த வாக்கியத்தின் உண்மை, முடியரசன் கவிதைகளை ஒரு முறை வாசித்த பின் என் மனதில் உதிக்கிறது. 

இந்நாளில் பாங்கான பாடல்களை பாடுவது பரமானந்தம் ஆகும். அதிலும் பழமையை தழுவியும் புதுமையை புகட்டியும் இனிய, எளிய நடையில் இயற்றப்பெறும் பாக்கள் எத்துணைப் பேரில் இன்பம் பயக்குமென்று இங்கு எடுத்துக்கூற வேண்டியதில்லை. அத்துணை சிறந்த பாடல்கள் தாம் ‘முடியரசன் கவிதைகள்' என்று துணிந்து கூறலாம்" என்ற நூல் மதிப்புரையின் வழியும் வீறுகவியரசரின் கவிச்சிறப்பை உணரலாம்.

ஈழம் சிவந்தது

‘நெஞ்சு பொறுக்கவில்லையே’ நூலில் 'ஈழம் சிவந்தது' எனும் தலைப்பிலான கவிதையில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்து, வெகுண்டெழுந்து பாடும் வீறுகவியரசரின் பாடல் வரிகள் இலங்கையின் இக்கால சூழலுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.

பூணு நல்லுரிமை வேண்டிப் 

போரிடும் ஈழ நாட்டீர் 

பேணுநர் இன்றி நீவின் 

பேதுறும் நிலைமை கேட்டேன் 

வாணுனி கொண்டென் னெஞ்சை 

வகிர்ந்தது வகிர்ந்த தந்தோ! 

கோனிய கொடுங்கோ லாட்சி 

குலையும் நாள் தொலைவில் இல்லை. 

என்று வெற்றிச்சங்கம் முழங்கிடும் வீறுகவியரசரின் பாடல் அநீதி ஆட்சிக்கு எதிரான அதிர்வேடாய் காலந்தோறும் ஒலிக்கும்.

வீரப்புலவர் வீறுகவியரசர்

1939இல் பிரவேச பண்டிதத் தேர்வும், சென்னை பல்கலைக்கழக வித்துவான் புதுமுக வகுப்புத் தேர்வும் எழுதி வெற்றி பெற்று, பின்னர் சன்மார்க்க சபையின் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் முன்னிலை வகுப்பு பயின்றார். 

கல்லூரியில் மாணவர் நன்னெறிக் கழகம் என்ற மாணவர் மன்றத்தின் வாரக் கூட்டத்தில் ‘புலவர் வீரம்’ என்ற தலைப்பில் பேசியமைக்கு ஊக்கமூட்டி கல்லூரி முதல்வர் பு.ரா.மீ அவர்கள் ‘வீரப்புலவர்’ என்ற விருது அளித்தார். கல்லூரியில் பயின்று வரும் காலத்தில் திருப்பத்தூரில் அறிஞர் அண்ணா சொற்பொழிவாற்றியதை கேட்டு, தம் துரைராசு என்ற பெயரை முடியரசன் என்று தூய தமிழில் மாற்றிக்கொண்டார்.

கல்லூரி அறிக்கைகளில் ‘வீரப்புலவர் முடியரசன்’ என்றே குறிக்கப் பெற்றார். பின்னாளில் எவர்க்கும் அஞ்சாமல், துணிந்து, தன் கொள்கைகளில் உறுதியோடிருந்து, சமூகத் தீமைகளை எதிர்த்து நின்று, தமிழ்ச் சான்றோரால் ‘வீறுகவியரசர்’ என்று போற்றப்பெறுவதற்கு இதுவே அடித்தளமாக அமைந்தது.

மற்றொரு முறை பாவேந்தர் பாரதிதாசனாரின் பேச்சை திருப்பத்தூரில் கேட்ட பிறகு மொழி, இனம்,-நாடு குறித்து முடியரசனார் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கி, மொழி, இன,-நாடு மீட்சிக்காக தம் படைப்புகளை கூர் தீட்டினார்.

கம்பன் விழா கவியரங்குகளில் வீறுகவியரசர் முடியரசன்             

ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தமிழ்நாட்டின் மீட்சிக்குப் பாடிய வீறுகவியரசரின் கவியரங்குக்கென தனித்த சுவைஞர் கூட்டம் தமிழகமெங்கும் இருந்தது. 

“காரைக்குடி கம்பன் கழகக் கவியரங்குகளை உலகம் போற்றும் வண்ணம் ஒளிரச் செய்தவர் கவிஞர் முடியரசன்” என்று தினமணி நாளிதழில் சுட்டிக்காட்டும் பெருந்தமிழறிஞர் தமிழண்ணல், 

“கவியரசு முடியரசனும் நானும் கம்பன் கழகம், திருக்குறள் கழகம், திருச்சி வானொலி நிலையம் உட்பட தமிழ் விழாக்கள் அனைத்திலும், கவியரங்குகளிலும் சேர்ந்தே கலந்துகொள்வோம். அவருடைய கவிதைகள் மிக எளிதாக மக்களால் வரவேற்கப்படும்” என தன் வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வீறுகவியரசருடன் பல கவியரங்குகளில் பங்கேற்றுள்ள பாடலாசிரியர் கண்ணதாசன் தம் ‘தென்றல்’ இதழில் வெளியிட்ட கட்டுரையில், "முடியரசன் விரைவாகவும் எளிதாகவும் பாடுகின்றார். சிலர் கவிதை பாடும்போது ‘பிரசவ வேதனை’ப்படுவதுண்டு. முடியரசனுக்கோ எண்சீர், வெண்பா, அகவல் முதலிய பாவகைகள் பாடுங்கால் வேதனைப்பட்டதாகவே அறிந்ததில்லை. ஒரு பாடல் விறுவிறுப்பு ஏறும், கருத்து மிகும், சொற்கள் வளம் பெறும். அவர் கவியரங்க மேடையேறி தோற்றதே கிடையாது" என்று போற்றியுள்ளார்.  

ஒரு முறை காரைக்குடி கம்பன் திருநாள் நிகழ்வில் பங்கேற்று, இரவு சென்னைக்கு புறப்பட இருந்த தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அவர்களை பேரா. அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் "மறுநாள் முடியரசன் கவியரங்கை கேட்டுவிட்டுப் போகலாம்" என்று வற்புறுத்தி இருக்கச் செய்ய, மறுநாள் இருவரும் கவியரங்கை கேட்டு மகிழ்ந்து, கவிஞரை பாராட்டிய பிறகே ஊர் திரும்பினர். 

முடியரசனாரின் கம்பன் விழா கவியரங்குகள் குறித்து திறனாய்வாளர் கெ.பக்தவச்சலம் தன் கட்டுரையில் ‘தம் பாட்டுத்திறம் முழுவதையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை பரப்புவதற்காக செலவிடும் இச்சுயமரியாதைக் கவிஞரை (முடியரசன்) காரைக்குடியில் தொடர்ந்து கம்பன் விழா நடத்தி, பெருமை பெறும் திரு.சா.கணேசன் அவர்கள் கம்ப இராமாயண கவியரங்கிலும் அடிக்கடி அழைத்துப் பங்கேற்கச் செய்துள்ளார். 

தி.மு.க.வினரிடையே கம்பனில் இலக்கிய நயங்காட்டும் கவிஞராகவும், கம்பன் புகழ் பாடி, கன்னித்தமிழ் வளர்ப்போரிடையே முன்னேற்ற கருத்துக்களை முழங்கும் திறமை கொண்ட கவிஞராகவும் விளங்கி, இரு திறத்துப் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றுள்ள உயர்கவிஞர் முடியரசன். 

கம்பன் விழா கவியரங்குகளிலும் பிற வானொலி, மாநாட்டுக் கவியரங்குகளிலும் தனியிடம் பெற்றவை 'முடியரசன் கவிதைகள்’ என்று மதிப்பிட்டுள்ளார்.

சாகித்திய அகடமி வெளியிட்ட தம் நூலில் பேரா.இரா.மோகன், "முடியரசனின் கவியரங்க  கவிதைகள் நாவுக்கும் காதுக்கும் சிந்தைக்கும் ஒருங்கே இனிமை தருவனவாகும். எடுப்பான தொடக்கமும் சுவையான ஒட்டமும் முத்தாய்ப்பான முடிப்பும் கொண்டவையாக அவை விளங்குகின்றன. நூற்றுக்கணக்கான கவியரங்க மேடைகளை முடியரசன் தம் எடுப்பான குரலாலும் ஏற்றமிகு கருத்தாலும் அணி செய்துள்ளார்" என்று புகழ்மகுடம் சூட்டியுள்ளார்.

கம்பன் விழா தொடக்க காலத்தில் ‘நமஸ்காரம்’ கூறி தொடங்கும் வழக்கம் இருந்தது. அதற்கு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்த பிறகு விழாவில் 'வணக்கம்' கூறுதல் பழக்கமானது.  

இப்புரட்சியை இயக்கியவர்களில் முதன்மையானவர் முடியரசன் என்று தம் கட்டுரையில் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நினைவு கூர்ந்துள்ளார். 

முடியரசனாரை ‘காரைக்குடி கம்பன்’ என்று போற்றும் வழக்கமிருந்ததை சுட்டும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் தா.பாண்டியன் "அந்தக் காலத்தில் மாணவர் புடைசூழ வீறுகவியரசர் முடியரசனார் நடந்து வருவதைப் பார்க்கும்பொழுது, அக்காட்சி சோழனின் ராஜசபையில் கம்பன் நடந்து வருவது போல் இருக்கும். அவரை நாங்கள் ‘காரைக்குடி கம்பன்’ என்றுதான் அழைப்போம்" என்று குறிப்பிடுகின்றார்.

இயற்றமிழ்க் கவிஞர்

முடியரசனார் கவிதைகளை முதன்முதலில் தொகுத்து வெளியிட்டவர், அவரது உற்ற தோழர் தமிழண்ணல் ஆவார். ‘முடியரசன் கவிதைகள்’ என்னும் அந்நூலில் உள்ள பல பாடல்கள் சாகித்திய அகடமியால் இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மொழி,-இனம்,-நாடு பற்றி பேசினாலோ, எழுதினாலோ வீண்பழி சுமத்தி சிறையில் தள்ளும் காலச் சூழலில், நாடெங்கும் நடைபெற்ற கவியரங்கங்களில் துணிந்து முழங்கிய மொழிப் புரட்சி, இன எழுச்சிக் கவிதைகளை உள்ளடக்கியது, ‘கவியரங்கில் முடியரசன்’ என்னும் நூல்.

இசைத்தமிழ்க் கவிஞர்

இசையரங்குகளில் தமிழை புறந்தள்ளி, வேற்று மொழிகளுக்கு வரவுரைக்கும் நிலை கண்டு, நெஞ்சம் குமுறிய கவிஞர் இசைத்தமிழுக்கு ஆக்கம் தேடித் தர இசைப்பாடல்களை இயற்றித் தொகுத்த நூலே ‘காவியப் பாவை’ என்னும் நூலாகும். 

முத்துத்தாண்டவர், தில்லை விடங்கன், மாரிமுத்தாப் பிள்ளை, சீர்காழி அருணாசலக் கவிராயர், வள்ளலார், வேதநாயகர், கோபால கிருஷ்ண பாரதியார், சுத்தானந்த பாரதியார் வரிசையில் முடியரசனாரும் சேர்ந்து இசைத்தமிழுக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.

‘பாடுங்குயில்’ என்னும் நூலில் உள்ள பாடல்களை இசையுடன் பாடுவதற்கேற்றவாறு எழுதியுள்ளார்.

பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடப்படும் கீர்த்தனைகளை எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று தூய தமிழில் பெயரிட்டு, இசைப்பாடல்கள் இயற்றியுள்ளார்.

நாடகத் தமிழ்க் கவிஞர்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்க நாடகக் காப்பியம் இயற்றித் தருமாறு முடியரசனார்க்கு வேண்டுகோள் விடுக்கப்பட, எழுந்ததே ‘இளம்பெருவழுதி’ என்னும் நாடகக்காப்பிய நூல். 

‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற புறநானூற்றுப் பாடலை எழுதிய கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பற்றி ‘போர்வாள்’ இதழில் (25.09.1948) தான் எழுதிய இளம்பெருவழுதி கதையில் சில மாற்றங்கள் செய்து, ‘இளம்பெருவழுதி’ என்ற பெயரிலேயே நாடகக் காப்பியம் இயற்றினார்.

முத்தமிழ்க் கவியரசர் - முடிசூடா முடியரசர்

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முத்தமிழ்க் கவிஞராய் கவிதை உலகில் முடிசூடா முடியரசராய் திகழ்ந்த இவர் 03.12.1998 அன்று இரவு 10 மணியளவில், தன் 79ஆவது வயதில் தன் இனிய கவியிசையை நிறுத்திக்கொண்டார்.

கவிஞர்களான அப்துல் ரகுமான், தமிழன்பன், இன்குலாப், வைரமுத்து, மு.மேத்தா, பழனிபாரதி, அறிவுமதி, சாமி பழனியப்பன், இந்திரன் உள்ளிட்ட பல கவிஞர்கள் தம் கூட்டு இரங்கல் அறிக்கையில், ‘கவியரசு முடியரசன் இயற்கை எய்திய செய்தியறிந்து தமிழுலகம் தாங்கொணாத் துயருறுகிறது. கவிஞருலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. கவிதையில் மொழித்தூய்மையை வற்புறுத்தியவர் அவர். தாம் கொண்ட கொள்கையில் தடம் மாறாமலும், தடுமாறாமலும், இறுதி வரை வாழ்ந்து காட்டிய அவர் தமிழ்க் கவிஞர் உலகுக்கோர் எடுத்துக்காட்டு" என்று குறிப்பிட்டனர்.

முத்தமிழ்க் கவிஞர் தம் வாழ்க்கைப் பயணத்துக்கு முடிவுரை எழுதிக்கொண்டாலும், அவர் வழியில் நடைபயில கவிஞர்கள் முன்னுரை எழுத வேண்டும்.

பணம், பதவி, புகழுக்காக குனிந்து வளைந்து கொள்கை மாறி குணங்கெட்டுப் போகாமல்,  இறுதி மூச்சுள்ள வரை தமிழ், தமிழர், தமிழ்நாடு உயர்வையே தம் இலக்காகக் கொண்டு வாழ்ந்து மறைந்த 'தன்மானக் கவியரசர்' முடியரசனாரின் படைப்புகளை படித்து, பரவலாக்க வேண்டியது தமிழர்கள் நமது தலையாய பொறுப்பாகும். நூற்றாண்டு கண்ட தமிழியப்புரட்சிக் கவிஞர் முடியரசனார்க்கு தமிழ்ப் பல்கலைக்கழகங்களில் ஆய்விருக்கைகள் அமைக்கவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு முடியரசனார் பெயரை சூட்டவும், வீறுகவியரசர் பிறந்தநாளை ‘தமிழ்மொழி நாள்' என கொண்டாடவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டியதும் செயலாக்கம் பெற துணை நிற்பதும் தமிழர் அனைவரது கடமையாகும்.

 கட்டுரையாளர் - முனைவர் தமிழ் முடியரசன் (எ) ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், சிவகங்கை, தமிழ்நாடு.

(தமிழாசிரியர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களத்தின் செயலாளர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05