பொன்னியின் செல்வன் பாகம் 1 - விமர்சனம்

Published By: Digital Desk 5

01 Oct, 2022 | 12:21 PM
image

தயாரிப்பு : லைகா புரொடக்‌ஷன்ஸ் & மெட்ராஸ் டாக்கீஸ்

நடிகர்கள் : சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர்.

ஒளிப்பதிவு : ரவிவர்மன்

இசை : ஏ.ஆர். ரகுமான்

இயக்கம் : மணிரத்தினம்

மதிப்பீடு : 4 / 5

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பல்வேறு வகையினதான தடைகளை கடந்து அதனை பாமர மக்களின் வீரியமிக்க ஊடகம் என போற்றப்படும் திரைப்படமாக, மணிரத்னம் தலைமையிலான குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள். 

பொன்னியின் செல்வன் நாவலை வாசித்தவர்களுக்கு இந்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிறைவேறியதா? இந்த நாவலை வாசிக்காத இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் பொழுதுபோக்கு அம்சம் இடம்பெற்றிருந்ததா? ‘பாகுபலி’ படத்தை பார்வையிட்ட பிறகு, இதுபோல் தமிழில் திரைப்படங்கள் உருவாகாதா? என்ற எதிர்பார்ப்புடன் இருப்பவர்களுக்கு, அவர்களின் எண்ணம் இந்த படத்தில் நிறைவேறியதா? என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ அனைவரையும் திருப்திப்படுத்தியதா..? என்பதை விரிவாகக் காண்போம்.

பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து பாகங்களாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு சரித்திர நாவல். பொதுவாக இப்படி ஒரு பிரம்மாண்டமான நாவலை தழுவி திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு பாகங்கள் வரை திரைப்படமாக தயாரிக்க வேண்டும். ஆனால் மணிரத்தினம், எழுத்தாளர் ஜெயமோகன், திரைக்கதை ஆசிரியர் குமரவேல் ஆகியோர் பொன்னியின் செல்வனை நாவலை வாசித்து, அதன் சத்துள்ள சாறை மட்டும் பிழிந்து, இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கிறார்கள். இதனை மனதளவில் உட்கிரகித்துக் கொண்டவர்களுக்கு இந்த திரைப்படம் மிகப் பெரும் வரப் பிரசாதம். தமிழ் திரையுலகில் இதற்கு முன் சரித்திர திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அதனால் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ இளம் தலைமுறை ரசிகர் முதல், மூத்த திரைப்பட ரசிகர்கள் வரை கவர்ந்திருக்கிறது.

சோழ தேசத்திலிருந்து புறப்பட்டு, வடக்கு நோக்கி பயணித்து, எதிரே வரும் மன்னர்களை போரில் வீழ்த்தி, வெற்றி கண்டு வரும் ஆதித்த கரிகாலனுக்கு, தஞ்சையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கான சதி திட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைக்கிறது. போரின் தனக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வந்திய தேவனிடம், சுந்தர சோழன் மற்றும் குந்தவை ஆகியோரிடம் ஆட்சிக்கான சதி நடக்கிறது என்ற தகவலை பகிர்ந்து கொள் என்று கூறி, அவரை தஞ்சைக்கு அனுப்புகிறார். அவர் போரின் முனையிலிருந்து தஞ்சைக்கு திரும்புகிறார். உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கும் சுந்தர சோழரை சந்தித்து, ஆதித்த கரிகாலன் கூறிய தகவலை தெரிவிக்கிறார் வந்தியத்தேவன். அதன் பிறகு அவர் குந்தவையை சந்தித்து, ஆதித்த கரிகாலன் சொன்ன தகவலையும் பகிர்ந்து கொள்கிறார். அதன் போது குந்தவை, ‘இலங்கையில் இருக்கும் தனது சகோதரரான அருண்மொழிவர்மனை தஞ்சைக்கு அழைத்து வா’ என பணிக்கிறார். வந்திய தேவனும் அருள்மொழிவர்மன் யார் என்று தெரியாமல், அவரை தஞ்சைக்கு அழைத்து வருவதற்காக இலங்கைக்கு பயணமாகிறார். அவர் அருண்மொழிவர்மனை தஞ்சைக்கு அழைத்து வந்தாரா? இல்லையா? என்பது முதல் பாகத்தில் ஒரு பகுதி கதை.

சோழ தேசத்தின் நிதி அமைச்சராகயிருக்கும் பெரிய பழுவேட்டரையர், ஏனைய குறுநில மன்னர்களுடன் இணைந்து சதி திட்டம் தீட்டி சுந்தர சோழனுக்கு பிறகு அவருடைய உறவினரான மதுராந்தக சோழனுக்கு பட்டம் சூட்ட உறுதி கொண்டு, அதற்கேற்ற வகையில் ராஜதந்திரமாக காய்களை நகர்த்துகிறார். இதற்கு உதவி செய்வது போல் நடித்து, சோழ தேசத்தின் அரியணையை கைப்பற்ற வேண்டும் என வஞ்சக எண்ணத்துடன் பெரிய பழவேட்டரையரின் இளம் மனைவியான நந்தினி தன் பாணியில் காய்களை நகர்த்துகிறார். இதனிடையே ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னனை கொன்றதால், அவருடைய ஆதரவாளர்களும், விசுவாசிகளும், வீரர்களும் ஆதித்த கரிகாலன், அருண்மொழிவர்மன், சுந்தர சோழன் என சோழ வம்சத்தையே அழிக்கவும் உறுதிப்பூண்டு, அவர்களும் சில நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் எண்ணங்களும், செயல்களும் நிறைவேறியதா? இல்லையா? என்பதும் முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும் சுவாரசியமான கதை.

முதலில் பொன்னியின் செல்வன் என்றதொரு பிரம்மாண்டமான நாவலை டிஜிட்டல் செல்லுலாயிட்டில் செதுக்க வேண்டும் என திட்டமிட்டு, கடுமையான உழைத்து ரசிகர்களுக்கு அர்ப்பணித்த மணிரத்னம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவிக்க வேண்டும். சோழ வம்ச மன்னர்களின் ஆட்சி கால கட்டமான ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலான நிலவியல் காட்சிகளை பொருத்தமாக தெரிவு செய்து, அதனை காட்சிப்படுத்தியிருப்பதற்காகவும், நாவலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்களை தெரிவு செய்து நடிக்க வைத்ததற்காகவும் மணிரத்னத்தை தாராளமாக கை வலிக்க கைகுலுக்கி பாராட்டலாம்.

இன்றுள்ள சூழலில் திரைப்படம் என்றால், விறுவிறுப்பு, பிரம்மாண்டமான காட்சி அமைப்பு, காதுக்கினிய பாடல்கள், நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு, நகைச்சுவை வசனங்கள்... போன்றவை அடுத்தடுத்து இடம்பெற்று, பார்வையாளர்களை பரவசப்படுத்த வேண்டும். இந்த இலக்கணத்திற்கு பொருத்தமாக அமைந்திருப்பதால், இளம் ரசிகர்களுக்கும், இணைய தலைமுறை ரசிகர்களுக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தை ரசிக்கிறார்கள். ரசிப்பார்கள். 

விமர்சனம் என்றால் படைப்பின் நேர்மறையான விடயங்களை மட்டும் குறிப்பிடாமல், பலவீனமான விடயங்களையும் குறிப்பிட வேண்டும் என்பது இயல்பு. ஆனால் பொன்னியின் செல்வன் போன்ற புதிய முயற்சிகளுக்கு இந்த மரபார்ந்த விதி பொருந்தாது என்றே குறிப்பிடலாம். இருப்பினும் இலங்கை தொடர்பான காட்சிகள், புத்த பிக்குகள் சோழ மன்னர்கள் மீது வைத்திருக்கும் பயம் கலந்த மரியாதை, பாண்டிய தேச வீரர்களுடன் இணைந்து சோழ மன்னரான அருண்மொழிவர்மனை கொலை செய்ய மறைமுகமாக உதவி செய்யும் சிங்கள மன்னர்... என பல விடயங்களில் விவரங்களும், காட்சிப்படுத்தல்களும் போதவில்லை என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் மந்தாகினி எனும் கதாபாத்திரம் ஈழ தேசத்தில் இருப்பதாக காட்டியிருப்பதும், அது தொடர்பான விளக்கங்கள் விவரிக்கப்படாததால் பார்வையாளர்கள் அதனை எந்தவித அழுத்தமும் இல்லாமல் எளிதாக கடக்கிறார்கள்.  படத்தின் பிற்பகுதியில் கிராபிக் காட்சிகள் முழுமையாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கப்படவில்லை என்பதையும் சிறிய குறையாக சுட்டிக்காட்டலாம்.

பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையே பாமர மக்களிடையும் விவாதம் எழுப்பப்பட்டது என்பதை ஆழ்வார்கடியான் கதாபாத்திரம் மூலம் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. தஞ்சையில் செம்பியன் மாதேவியின் ஆதரவில் உழைக்கும் மக்களுக்கு இலவசமாக மோர் வழங்கும் காட்சியும் பாராட்டுக்குரியது.

குந்தவையும், நந்தினியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இருவரும் இணைந்து செய்திருக்கும் மாயாஜாலம் ரசிகர்களின் மனதில் 'வாவ்' சொல்ல வைக்கிறது.

ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் சீயான் விக்ரம், பால்ய காலத்தில் நந்தினியை காதலித்ததும், அந்தக் காதல் குந்தவையின் அரச நீதி, அரசக்குல தர்மம்.. காரணமாக கை கூடாமல் போனதையும் விவரிக்கும் போது, அதனை மணிரத்னம் காட்சிப்படுத்திய விதம் அற்புதம். காதலில் தோற்றத்துடன் மட்டுமல்லாமல் அவர் வயதான பெரிய பழுவேட்டரையரின் இளம் மனைவியாக இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்ள இயலாமல் தவிக்கும் விக்ரமின் நடிப்பை பாராட்டிக் கொண்டே இருக்கலாம். 

இதேபோல் வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி, அருண்மொழிவர்மனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, குந்தவையாக நடித்திருக்கும் திரிஷா, நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பையும் பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.

ஏ ஆர் ரகுமானின் இசை, பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்களும், பின்னணி இசையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான பிரத்யேக பின்னணியிசையும் என கடுமையாக உழைத்து, ரசிகர்களை பிரமிக்க செய்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் நாவலை ஒரு முறை வாசித்தவர்களுக்கும், பலமுறை வாசித்தவர்களுக்கும் அந்த நாவல் ஏற்படுத்தியிருக்கும் பிரம்மாண்டத்தை இந்த திரைப்படம் 100 சதவீதம் பூர்த்தி செய்திருக்குமா..? என்பது பலருக்கு சந்தேகம். ஆனால் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’, நாவலை வாசித்தவர்களுக்கும், வாசிக்காதவர்களுக்கும் புதுமையான அனுபவத்தை வழங்கி அவர்களை பரவசப்படுத்தி இருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத, ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.

'பாகுபலி' போல் பொன்னியின் செல்வன் இல்லை என்ற ஒப்பீட்டை பலரும் முன் வைக்கிறார்கள். இந்த ஒப்பீடு தேவையற்றது. இருப்பினும் ‘பாகுபலி’ எந்த காலகட்டத்தையும் பிரதிபலிக்காத முழுமையான கற்பனை படைப்பு. மேலும் அதில் காட்சிகள் அனைத்தும் கிராபிக்ஸ் காட்சிகளாக உருவாக்கி, மிகைப்படுத்தலுடன் வழங்கியிருப்பார்கள். ஆனால் ‘பொன்னியின் செல்வனில் கிராபிக் காட்சிகள் குறைவு. எதார்த்தமான நிலவியல் காட்சிகள் அதிகம். இது படைப்பின் மீதான நம்பகத்தன்மையை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நுட்பமான உண்மையை படம் பார்த்து தெரிந்து கொண்டவர்கள், படத்தை பாராட்டிக் கொண்டாடுகிறார்கள். 

படத்தின் நிறைவு பகுதியில், இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் சில காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது இரண்டாம் பாகத்தை பார்க்க தூண்டுவதற்கான சரியான உந்துவிசை என்பதையும் மணிரத்னம் குழுவினர் நிரூபித்திருக்கிறார்கள். குறிப்பாக ஊமை ராணி யார் என்பதையும், வயதான ஐஸ்வர்யா ராயையும் காட்டி ஆர்வத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். இதற்காகவும் அவர்களை மனதார பாராட்டலாம்.

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று - தமிர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விவரிக்கும் முத்திரை படைப்பு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37