குருந்தூர்மலையில் விகாரை அமைப்பு கூட்டு ஆக்கிரமிப்பின் அடையாளம்

Published By: Vishnu

25 Sep, 2022 | 11:23 AM
image

ஆர்.ராம்

 “குருந்தூர்மலையில் விகாரை அமைக்கும் பணிகள் நீதிமன்ற உத்தரவையும் மீறித் தொடர்வது சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகியவற்றைத் தாண்டி அதிகாரம் மிக்க மறைகரம் உள்ளமையை வெளிப்படுத்துகிறது”

“1960இக்கு பிறகு நாங்கள் காடுவெட்டி வீடுகளைக் கட்டினோம். எனது வீடு மலைக்கு கீழே தான் உள்ளது. எனக்கு எட்டுப் பிள்ளைகள். அவர்கள் அனைவரும் இங்கே தான் பிறந்தார்கள். மேற்படிப்புக்காக வித்தியானந்தாவுக்கு அல்லது குமுழமுனைக்குச் செல்வார்கள். ஆறு, குளங்கள் இருப்பதால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டே அவற்றைக் கடந்து செல்வோம்.

1984இல் எங்களைப் பிடித்த சனியன் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. அப்போது நாங்கள் எங்களுக்குச் சொந்தமான வீட்டையும் காணிகளையும் விட்டு வெளியேறினோம் இன்றுவரையில் வருவதும் போவதும், போராடுவதுமாக இருக்கின்றோம். எப்போது தான் எமக்கு விடிவு வரப்போகின்றதோ தெரியவில்லை” என்கிறார் குருந்தூர் மலையடிவாரத்தினைச் சேர்ந்த கந்தசாமி வள்ளியம்மை  “1983இல் இப்போது விகாரை கட்டப்பட்டுள்ள பகுதியில் தான் ஐயனார் கோவில் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு அருகில் புதையல் குழியொன்று காணப்பட்டது. கேணியொன்று காணப்பட்டது.

இப்போது அவற்றைக் காணமுடியவில்லை. அவற்றின் அடையாளத்தைக் கூட அழித்துவிட்டார்கள். கோயிலை அமைத்தவர்களில் எஞ்சியிருப்பது நானும் எனது அண்ணர் ஒருவரும் தான். அப்படியிருக்கையில், எந்தவொரு அடையாளமும் இல்லாது இப்போது கோயில் இருந்த பகுதியில் தொல்பொருள் இருப்பதாக கூறுகின்றார்கள்.

ஆனால் அப்பகுதியில் நிர்மணங்களைச் செய்கின்றார்கள். இப்போது எமது வாழ்வாதர நிலங்களைப் பறிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். எமது நிலங்களைப் பறித்து பூர்வீகத்தை அழிப்பதற்கு இடமளிக்க மாட்டோம். சிங்கள மக்கள் இரத்த ஆறு ஓடவேண்டும் என்றே கருதுகின்றர்ர்கள்” என்கிறார்…..

“நீதிமன்றம் கட்டடங்களை கட்டுவதற்கு தடை விதித்துள்ள போதும் நாங்கள் இங்கே(குருந்தூர்மலைக்கு) வருகின்றபோது கட்டட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எங்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரியபோது அதற்கு சாக்குப்போக்குகளையே இவ்வளவு நாளும் கூறினார்கள்.

ஆனால் இப்போது தொல்பொருள் என்று கூறிவிட்டு புத்தகோயிலைக் கட்டிவிட்டார்கள். இதற்கு யார் காணி வழங்கியது. யார் உறுதி வழங்கியது என்பது தெரியாதுள்ளது. நாங்கள் அரசாங்கத்தின் நிதியில் வாழ்க்கை நடத்தவில்லை. எங்களின் காணிகளை விடுவித்தாலே செல்வச் செழிப்புடன் வாழ்வோம்” என்கிறார் கந்தசாமி கிருஷ்ணானந்தலக்ஷா

இந்தக் குரல்கள், குருந்தூர் மலையையும், அதனை அண்மித்த பகுதிகளிலும் பரம்பரைபரம்பரையாக வாழ்வியல் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கு உரித்துடையவர்களுக்கு சொந்தமானவையே. இவர்களின் கூற்றுக்கள் குருந்தூர் மலை உள்ளிட்ட அண்மித்த கிராமங்களின் பூர்வீகத்தை மிகத்தெளிவாக பறைசாற்றுகின்றன. 

இவர்களைப் போன்று நூற்றுக்கணக்கானவர்கள் 1984 டிசம்பரில் நடைபெற்ற ஒதியமலைப்படுகொலைகளை அடுத்து குருந்தூர்மலையை அண்மித்துள்ள கிராமங்களிலிருந்து வெளியேறியிருந்தனர். அதன்பின்னர் அவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பாத நிலைமையே தற்போது வரையில் நீடிக்கின்றது. 

அவர்கள் தாம் வாழ்ந்த, வாழ்வாதரத்தை ஈட்டிய நிலங்களுக்கு வருகை தந்து அவற்றை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்ட தருணங்களில் எல்லாம், படையினரும், வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் நேரில் சென்று தொல்பொருள் பகுதியென்றும், வனப்பரிபாலனப் பகுதியென்றும் எச்சரிக்கை விடுத்து வெளியேற்றியிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், குருந்தூர் மலையில் ஐயனார் ஆலயம் இருந்த பகுதிக்கு 2018இல் போஹஸ்வெளவிலிருந்து படையினர் புடைசூழ குருந்தூர் மலைக்கு வருகைதந்திருந்தார் சம்புமல்ஸ்கட விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர். அவரைத்தொடர்ந்து தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளும் குருந்தூர் மலைக்கு படையெடுத்தனர். தொல்பொருள் அடையாளங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தி அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  

சொற்ப நாட்களில் ‘குருந்தாவசோக ரஜமஹாவிகாரை’ என்ற பெயர் சூட்டப்பட்டு அப்பகுதியில் விகாரை நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகின. இந்தப்பணிகளை அங்குராட்பணம் செய்து வைத்தவர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க. நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவத்தளபதி தலைமையில் நடைபெற்றிருந்தன. 

இதற்கு மக்கள் பிரதிநிதிகள் போர்கொடி தூக்கவும், அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்கவும், தொல்பொருளியல் பணிப்பாளர் அநுர மனதுங்கவும் விகாரை அமைக்கும் பணிகளை முன்னெடுக்கப்பபோவதில்லை என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த வாக்குறுதியை பின்பற்றியதே இல்லை. 

விகாரை அமைப்பதற்கான அடிகல்லை நாட்டி புனித பூஜையில் ஈடுபட்டவர்கள் விகாரையை கட்டப்போவதில்லை என்று கூறும் கூற்றை நம்புவது முட்டாள் தனமானது. இந்த முட்டாள் தனமான செயற்பாடு மக்கள் பிரதிநிதிகளால் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டுக்கொண்டு தான் உள்ளது. 

இவ்வாறிருக்க, குருந்தூர் மலையையும் அதனை அண்டிய கிராமங்களின் பூர்வீக கிராமங்களையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தின் கதவுகள் தட்டப்பட்டன. இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம், தொல்பொருளின் பெயரால் விகாரை அமைக்கப்படுவதற்கு முட்டுக்கட்டை போடும் உத்தரவைப் பிறப்பித்தது. எனினும், நீதிமன்ற உத்தரவைத் தாண்டியும் விகாரை அமைக்கும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில் தான்  முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு “குருந்தூர்மலை தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணங்களை நீக்கினால் தொல்லியற் சின்னங்களும் நீங்கும் என்பதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டியமையால் குறித்த நிர்மாணங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கைவாங்கப்படுகின்றது” என்று திருத்திய கட்டளையை பிறப்பித்தார். 

அதன்பின்னர், குருந்தூர்மலைப்பக்கம் யாரும் சென்றிருக்கவில்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்று யாரும் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில், 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் உட்பட 341ஏக்கருக்கான எல்லைக்கற்கள் போடப்பட்டிருக்கின்றன. 

இது தொல்பொருளியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலில் நடைபெற்றிருக்கின்றன. இதன் பின்னர் 632ஏக்கரை முழுமையாக கையகப்படுத்துவதற்கான நகர்வுகள் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தினை அடைந்துவிட்டன. 

இவ்வாறான நிலையில் தான், கடந்த புதன்கிழமையன்று குருந்தூர்மலையையும், அப்பகுதியை அண்மித்த கிராமங்களின் பூர்வீகக்குடி மக்களும் எழுச்சிகொண்டு காணி ஆக்கிமிப்புக்கு எதிராக போரட்டம்செய்யத் தீர்மானித்தனர். அவர்கள் குருந்தூர் மலைக்கு நேரயாகச் சென்றனர். 

அப்போது, அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. குருந்தூர் மலையில் எந்தவிதமான நிர்மாணங்களையும் செய்யக்கூடாது என்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற உத்தரவையும் கடந்து நிர்மாணப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்கள். 

குறித்த நிர்மாணப்பணிகள் அரசாங்கத்தின் துணையுடன் தான் நடைபெறுகின்றது என்பதும் அத்தருணத்திலேயே உறுதியானது. ஏனெனில் தொல்பொருளியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் நிர்மாணப்பணிகள் நடைபெறும் பகுதியில் களக்கடமைகளைப் புரிந்துகொண்டு இருந்துள்ளார். அவர், தான் மேலிடத்து உத்தரவில் தான் கடமைபுரிகின்றேன் என்று கூறியுள்ளார். 

அதேநேரம், விகாரையை தொடர்ந்தும் நிர்மாணப்பதற்கான அனுமதி எவ்வாறு பெறப்பட்டது என்ற போராட்டக்கரர்கள் வினா எழுப்பியபோது அவரால் பதிலளித்திருக்க முடியவில்லை. அதற்கான அனுமதி ஆவணமும் அவரிடத்தில் இருந்திருக்கவில்லை. 

ஏனென்றால் அவர் வெறும் அம்பு மட்டும் தான். எய்தவர்கள் தொல்பொருளியல் திணைக்களத்தின் தலைமையகத்திலும்,  பாதுகாப்பு அமைச்சிலும் தான் உள்ளார்கள். 

தொல்பொருளியல் திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் கட்டுமானப்பணிகளை பார்வையிடும் களப்பணியில் உள்ளார் என்றால் நிச்சயமாக அவருக்கான அறிவுறுத்தல் தொல்பொருளியல் திணைக்களத்தாலேயே வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறான அறிவுத்தலை தொல்பொருளியல் பணிப்பாளர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. 

அதேநேரம் சிக்கலான விடயம் என்பதால் நிச்சயமாக அமைச்சருக்கும், செயலாளருக்கும் கூட முன்னறிவிப்புச் செய்யப்பட்டே இருக்கும். ஆகவே குருந்தூர் விகாரையில் நீதிமன்ற உத்தரவின் பின்னரும் நிர்மானப்பணிகள் நடைபெறுவதை நாம் அறிந்திருக்கவில்லை என்று கூறி அமைச்சர் முதல் நழுவிவிடமுடியாது. 

அதேநேரம், நாகஞ்சோலை ஒதுக்ககாடுகள் தண்ணிமுறிப்பு கிராமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எல்லைக்கற்கள் நாட்டப்பட்மை பகிரங்கமாகியதை அடுத்து கடந்த 16ஆம் திகதி சம்புமல்ஸ்கட விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரர் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல்குணரத்னவை சந்தித்திருக்கின்றார். 

இந்தச்சந்திப்பின்போது வடக்கில் உள்ள பௌத்த விகாரைகளை பாதுகாப்பது தொடர்பில் பேசப்பட்டதாக தேரர் பகிரங்கமாக தெரவிக்கின்றபோதும் குறித்த சந்திப்பு நிச்சயமாக குருந்தூர் மலையில் அமைக்கப்படும் ‘குருந்தாவசோக ரஜமஹாவிகாரையை’ மையப்படுத்தியதாக இருந்திருக்கும் என்பதில் ஆச்சரியப்படுதற்கில்லை. 

ஏற்கனவே, இந்த விகாரை நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காக தற்போது முப்படைகளின் பிரதானியாக இருக்கும் ஜெனரல் சவேந்திரசில்வா நேரில் சென்றிருந்தமையானது, குறித்த நிர்மானத்திற்கான ஒத்துழைப்புகளில் படையினரின் பங்களிப்பு இருக்கின்றது என்பதை ஒருபடி மேலே சென்று உறுதிப்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது தேரருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பினை அடுத்து குருந்தூர் மலையில் விகாரையை அமைப்பதற்கான தீவிரத்தன்மையின் ‘மூலம்’ அம்பலமாகியிருக்கின்றது. 

அதுமட்டுமன்றி, வனபரிபாலன திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பில் தான் குருந்தூர் மலை ஆக்கிரமிக்கப்படுகின்றது என்பதும் மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவை மீறி நிர்மாணங்கள் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொலிஸார் நீதிமன்ற உத்தரவே தமக்கு தெரியாது என்று கூறுகின்றனர். அதேபொலிஸார் போராட்டம் செய்பவர்களை அதனை ஏற்பாடு செய்பவர்களை கைது செய்து தடுத்து வைக்கின்றனர். இதுகூட ஆசியாவின் ஆச்சரியம் தான். 

மேலும் முல்லைத்தீவு பொலிஸாரின் பிரதிபலிப்புக்கள் குருந்தூர் மலையில் விகாரையை அமைப்பதற்கு தமது பக்கத்திரும் வகிபாகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், “காவி உடை தரித்த தேரரால் மாவட்ட நீதிமன்ற கட்டளையினை புறம்தள்ளிஇராணுவத்தினை வைத்து தொடர்ச்சியாக கட்டுமானங்களை மேற்கொள்ளமுடியும் என்றால் நீதி எங்கே இருக்கின்றது” என்று கேள்வி எழுப்புகின்றார் குமுழமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் போரட்டத்தை ஏற்பாடு செய்மைக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவருமான இ.மயூரன். இந்த நியாயமான கேள்விக்கான பதில் தான் என்ன? இலங்கையில் ஒவ்வொரு இனக்குழுங்களுக்கும் ஒவ்வொரு சட்டமா? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48