முப்பெரும் சக்திகள் கொலுவீற்றிருக்கும் நவராத்திரி

Published By: Nanthini

24 Sep, 2022 | 08:37 PM
image

பெண்களை தெய்வாம்சம் பொருந்தியவர்களாக  எண்ணி வழிபடும் மரபினை இந்துக்கள் பின்பற்றி வருவதற்கு இற்றை வரை சான்றாக விளங்குவது, வருடந்தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நவராத்திரி விரதம் ஆகும். 

நவராத்திரி விழாவானது சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய அம்மனின் உருவங்களை முதன்மையாக வைத்து, ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபாடு செய்வதாகும். 

வீரமும் சிறப்பும் தத்துவமும் வலிமையும் பொருந்திய அன்னை பராசக்தியை போற்றி, துதித்து, அருள் வேண்டி பூஜிக்கும் நிகழ்வுகள் வீடுகளிலும் ஆலயங்களிலும் அலுவலகங்களிலும் நவராத்திரியின் 9 நாட்களும் நடைபெறுவது வழக்கம். இவ்விரத நாட்களின் பிரதான அம்சங்களை இனி பார்ப்போம்.

நவராத்திரி காலம்

இந்த 2022ஆம் ஆண்டு நவராத்திரி விழாவானது, செப்‍டெம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 4ஆம் திகதி முடிகிறது. புரட்டாதி மாதத்து வளர்பிறை பிரதம திதியில் தொடங்கி  நவமி வரை கும்பம் வைத்து பூசை செய்யப்படும். 

நான்கு வித நவராத்திரிகள்

* ஆவணி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாட்கள் - ஆஷாட நவராத்திரி. 

* புரட்டாதி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாட்கள்  சாரதா நவராத்திரி. 

* தை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாட்கள்  மகா நவராத்திரி. 

* பங்குனி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாட்கள்  வசந்த நவராத்திரி. 

இவற்றில் புரட்டாதி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரியை தான் பொதுவாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ஆஷாட மற்றும் மகா நவராத்திரியை 'குப்த நவராத்திரி' என்றும் அழைக்கின்றனர். 

கொலு படிகள் 

கொலுவில் மொத்தம் 9 படிகள் அமைக்கப்பட வேண்டும். கீழ் இருக்கும் மூன்று படிகளில் கொலுவுக்காக வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்ற உருவ பொம்மைகள் தாமச குணத்தைக் குறிக்கும். அடுத்து உள்ள மூன்று படிகளில் கொலுவுக்காக வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி பொம்மைகள் போன்றவை ரஜோ குணத்தைக் காட்டும்.

மேலே உள்ள மூன்று படிகளில் கடவுள்களின் சிலைகள் வைக்கப்படும். இவை சத்வ குணத்தை அடைவதற்குரிய வழியை நமக்கு உணர்த்துபவை. நவராத்திரி பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக கொலு படிகளை இந்த முறையில் அமைக்க வேண்டும்.

ஒன்பது படிகளும் உருவங்களும்

1ஆம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் 

2ஆம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் 

3ஆம் படி: மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் 

4ஆம் படி: நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

5ஆம் படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள். 

6ஆம் படி: ஆறறிவு மனிதர்களின் உருவங்கள்.

7ஆம் படி: மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகளின் உருவங்கள்

8ஆம் படி: தேவர்கள், அஷ்ட திக்குப் பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் உருவங்கள். 

9ஆம் படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் இருப்பது போன்ற சிலைகளை வைக்க வேண்டும். 

வழிபாட்டு முறை

நவராத்திரி விரதம் நோற்பவர்கள் அந்த ஒன்பது நாளும் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும்.

விரதம் அனுஷ்டிப்பவர்கள் திருமணமான பெண்களை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களை பராசக்தியாக பாவித்து, கொலுவின் அருகில் அமர வைத்து, வணங்கி, மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் போன்ற பொருள்களை கொடுக்கலாம். 

முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் இலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபட வேண்டும். 

8ஆம் நாள் 2 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களை அம்மனின் அம்சமாக கருதி, பொட்டு, வளையல், உணவு, இனிப்பு மற்றும் ஆடை கொடுத்து குழந்தைகளை சந்தோஷப்படுத்தலாம்.

9ஆம் நாள் ஆயுத பூஜையன்று வீட்டில் உள்ள உபகரணங்களை ஆயுதங்களை பாடப் புத்தகங்களை வைத்து, அவற்றுக்கு பூஜை செய்ய வேண்டும்.

10ஆம் நாளான விஜயதசமியன்று குழந்தைகளுக்கு ஏடு தொடக்குவது, தொழில் தொடங்குவது, புதிய நற்காரியங்களில் ஈடுபடுவது என பிள்ளையார் சுழி போட்டு எந்த நல்ல செயலில் ஈடுபட்டாலும் அது வெற்றியை தரும் என்பது நம்பிக்கை. 

பூஜைக்கு ஏற்ற உணவு வகைகள்

முதல் நாள்: வெண் பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை போன்றவற்றை வைத்து படைக்கலாம்.

இரண்டாம் நாள்: புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம். 

மூன்றாம் நாள்: கோதுமை சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல்.

நான்காம் நாள்: தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல்.

ஐந்தாம் நாள்: சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.

ஆறாம் நாள்: தேங்காய் சாதம், தேங்காய்ப் பால் பாயாசம், ஒரெஞ்ச், மாதுளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.

ஏழாம் நாள்: எலுமிச்சை சாதம், பழ வகைகள், வெண் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.

எட்டாம் நாள்: பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.

ஒன்பதாம் நாள்: சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக் கடலை, எள் உருண்டை.

விஜயதசமி

விஜயதசமி தசைன், தசரா, தசஹரா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. 

தசமி என்பது பிரதமையிலிருந்து பத்தாம் நாள் வரும் திதியாகும். விஜயதசமி தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோற்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.

இந்து நாட்காட்டியில் புரட்டாதி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் தசமி திதியன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாக முப்பெரும் தேவியர்களான துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி வழிபாடுகளால் கொண்டாடப்படுகிறது.

இராமாயணத்தில் இராமன் இராவணனை போர் செய்து அழித்த நாள் விஜயதசமி என்றும் இந்நாள் வட இந்தியாவில் 'ராம் லீலா' விழாவாக கொண்டாடப்படும் கதையும் வழக்கத்தில் உள்ளது.

அந்நாளில் பெருந்திரளான மக்கள் இராவணன் மற்றும் அவனது வம்சத்தை சேர்ந்தவர்களின் உருவ பொம்மையை செய்து, அவற்றின் மீது இராமர் வேடம் தரித்தவரால் அம்பெய்தப்பட்டு எரியூட்டப்படும் முறையும் பின்பற்றப்படுகிறது. 

மகாபாரதத்தில் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஓராண்டு அஞ்ஞானவாசமும் (மறைந்து வாழ்தல்) முடிந்து, மீண்டும் அனைத்து ஆயுதங்களையும், தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் விஜயதசமியன்று பெற்றதாகவும் கூறப்படுகிறது.

துர்க்கை மகிஷாசுரனை அழிக்க மேற்கொண்ட போர் விஜயதசமியன்று நிறைவு பெற்றதாகவும் இந்துக்கள் பலர் நம்புகின்றனர்.

துர்க்கை அவதாரமும் நவராத்திரி தத்துவமும் 

தேவர்கள், முனிவர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் எண்ணிலடங்கா தொல்லைகளைக் கொடுத்துவந்த மகிஷாசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய பார்வதி தேவி ஊசிமுனையில் நின்று 9 நாட்கள் தவம் செய்து பலம் பெறுகிறாள். நவசத்தியாகவும், நவதுர்க்காவாகவும் அவதாரமெடுக்கிறாள். அந்த நவதுர்க்கையின் அவதாரங்களாவன:

* சயில புத்ரி 

* பிரம்மசாரிணி

* சித்ரகண்டா

* கூஷ்மாண்டா 

* ஸ்கந்தமாதா 

* காத்யாயினி 

* காளராத்தி 

* மஹாகெளரி 

* சித்திதாத்ரி 

பார்வதி தவம் செய்த 9 நாட்களான நவராத்திரியில் பெண்கள் தூய்மையான ஆடையுடுத்தி, கொலுவுக்கு வரும் சுமங்கலிகள், கன்னிப் பெண்களை அம்பாளே தன் வீட்டுக்கு வந்ததாக எண்ணி வரவேற்று, விருந்தளித்து மகிழ்வர். 

பெண்கள் தங்களது கைவினை பொருட்களாலும் கலைத் திறமையாலும் கொலுவை அலங்கரிப்பர். இசை, நடனம் போன்ற கலையம்சம் பொருந்திய நிகழ்ச்சிகளையும் நடத்தி மகிழ்வர்.

நவராத்தியின் 9 நாட்களும் சுமங்கலிப் பெண்கள் துர்க்கா, லஷ்மி, சரஸ்வதியை பூஜை செய்து அஷ்டோத்தரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, செளந்தர்யலஹரி முதலிய சக்தி நூல்களை படித்து, பிரார்த்தித்து வழிபடுவர். 

இந்த நாட்களில் கன்னிப் பெண்கள் துர்க்கா தேவியை வழிபட்டால், அவர்கள் மனதுக்கேற்ற கணவனைப் பெறுவர் என்றும் சொல்லப்படுகிறது. 

வீரம் வேண்டி துர்க்கையையும் செல்வம் வேண்டி இலட்சுமியையும் கல்வி வளத்தை வேண்டி சரஸ்வதியையும் வழிபட்டால், எல்லா அருட்செல்வமும் கைவரப் பெறுமாம்.

தீய எண்ணங்கள் அண்டாது. ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் கொலுவுக்கு முன்னிலையில் யாவரும் சமமானவர்களாக நிற்கும் மானுட தத்துவத்தை உணர்த்துகிறது நவராத்திரி!

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05