‘வழ வழ” வரைவு

Published By: Digital Desk 5

24 Sep, 2022 | 09:22 PM
image

கார்வண்ணன்

   “பொறுப்புக்கூறல் வாக்குறுதிகள் எவையும் உள்நாட்டு செயல்முறையிலோ, சர்வதேச செயல்முறைகளின் ஊடாகவோ நிறைவேற்றப்படவில்லை”.

“தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த புதிய தீர்மான வரைவு மீண்டும் மீண்டும் அரசாங்கத்துக்கு காலஅவகாசத்தை வழங்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது”

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2012ஆம் ஆண்டு தொடக்கம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

11 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானங்களால், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை.

பொறுப்புக்கூறல் வாக்குறுதிகள் எவையும் – அது உள்நாட்டு செயல்முறையிலோ, சர்வதேச செயல்முறைகளின் ஊடாகவோ நிறைவேற்றப்படவில்லை.

மனித உரிமைகள் நிலைமைகளிலும் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.

இதிலிருந்து, இதுவரை காலமும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற தீர்மானங்கள், வெற்றியளிக்கவில்லை என்பதையே உணர்ந்து கொள்ள முடிகிறது.

நீண்ட போர், மோசமான மனித உரிமை பதிவுகள், மீறல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை என்பனவற்றைக் கொண்ட இலங்கையில், குறுகிய காலத்துக்குள் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. 

ஆனால் 11 ஆண்டுகள் என்பது நீண்ட காலகட்டம்.

இந்த நீண்ட காலகட்டத்தில் கூட, இந்த மூன்று முக்கிய விடயங்களையும் அடைய முடியாதுள்ள நிலையில் தான், இலங்கை தொடர்பான தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றும் அனுசரணை நாடுகள், இம்முறையும் புதிய தீர்மான வரைவு ஒன்றைச் சமர்ப்பித்திருக்கின்றன.

ஜெனிவாவில் 51 ஆவது கூட்டத்தொடர் தொடங்கி இருநாட்களின் பின்னர் கடந்த 14ஆம் திகதி பூச்சிய வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.

அதனையடுத்து, நடத்தப்பட்ட இரண்டு பக்க அமர்வுகளில், உறுப்பு நாடுகளின் ஆலோசனைகள் பெறப்பட்டு, திருத்தப்பட்ட இரண்டாவது தீர்மான வரைவு கடந்த 20ஆம் திகதி வெளியிடப்பட்டிருக்கிறது.

முதல் வரைவு, எவ்வாறு தமிழர் தரப்புக்கு ஏமாற்றமளிக்கும் ஒன்றாக இருந்ததோ, அதுபோன்றே திருத்தப்பட்ட இரண்டாவது வரைவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் தீர்க்கமான விடயங்களை உள்ளடக்காத- நீர்த்துப் போன ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

வழக்கத்துக்கு மாறாக இம்முறை தீர்மான வரைவு, அதிகளவு விடயங்களை உள்ளடக்கும் வகையிலும் நீண்ட பந்திகளைக் கொண்டதாகவும், இருப்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டதொன்று தான். வழக்கமாக, ஜெனிவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் பந்திகள் சுருக்கமாக இருக்கும், ஆனால் சொற்களில் இறுக்கம் இருக்கும்.

இம்முறை, அவ்வாறன்றி, நிறைய விடயங்களும், நீண்ட பந்திகளும். உள்ளடக்கப்பட்டிருப்பது அதன் பலவீனங்களில் ஒன்று. இந்த தீர்மானத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட்டிருப்பினும், அது போதுமானளவுக்கு குறைக்கப்பட்டவில்லை.

ஆனால், முக்கியமான பல விடயங்களில், முன்னரை விடக் காத்திரத்தன்மை குறைந்து போயிருக்கிறது.

ஆழமான இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனையின்மை போன்றவற்றை நெருக்கடிக்கு பங்களித்த அடிப்படை நிர்வாக காரணிகளாக சுட்டிக்காட்டும் 7ஆவது பந்தியில், சட்டத்தின் ஆட்சிக்கு இது ஒரு பிரதான தடையாக உள்ளது என்ற வாக்கியத்தில், நல்லிணக்கம் மற்றும் இலங்கையின் நிலையான அமைதி மற்றும் அபிவிருத்திக்கு தடையாக உள்ளது என்று திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது.

10ஆவது பந்தியில், அமைதியான போராட்டங்களில் பங்கேற்பது, அமைதியான முறையில் ஒன்றுகூடும், கருத்துச் சுதந்திரம் மற்றும் பொது விவகாரங்களில் பங்கேற்பதற்கான உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய வடிவமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்வதாக கூறும் பகுதி முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது.

12 ஆவது பந்தியில், 2021 ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் நான்கு முறை அவசரகாலச் சட்டங்கள் பிரகடனப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டு, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் பிரிவு 4க்கு இணங்க வேண்டிய கடப்பாட்டைச் சுட்டிக்காட்டும் விடயத்திலும், பெருமளவு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியனை நினைவுபடுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பரந்த தேசிய ஆலோசனைகளின் அடிப்படையில் முழு அளவிலான நீதித்துறை மற்றும் நீதித்துறை அல்லாத நடவடிக்கைகளை உள்ளடக்கிய, ஒரு விரிவான அணுகுமுறையை மேற்கொள்ளும், இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வரவேற்கும் வகையில் இருந்த- 19 ஆவது பந்தியும் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது.

இணை அனுசரணை வழங்கிய பின்னர், அதிலிருந்து விலகிக் கொண்ட அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையிலும், அரசாங்கத்துக்கு வரவேற்புத் தெரிவிக்கும் இந்தப் பந்தி பூச்சிய வரைவில் இடம்பெற்றிருந்தமைக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதேவேளை, ஐ,நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் விசேட நடைமுறைகளுடன் இலங்கை அரசாங்கத்தின் ஈடுபாட்டை வரவேற்கும் இரண்டாவது பரிந்துரையில், அத்தகைய ஈடுபாடு மற்றும் உரையாடலைத் “தொடர வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளும் வாக்கியம், அதனை “ஊக்குவிப்பதாக” திருத்தப்பட்டு, மென்மைப்படுத்தப்பட்டிருக்கிறது.

சிவில் அரசாங்க செயற்பாடுகளை இராணுவமயமாக்கலில் இருந்து பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற 5 ஆவது பரிந்துரையில், 

சிவில் அரசாங்க செயற்பாடுகள் தொடர்ந்து இராணுவமயமாக்கப்படுவது கவலை அளிக்கிறது ” என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளதுடன்,

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டும் விடயத்திலும், இந்த “நீண்டகால குறைபாடுகளை தீர்ப்பதில் முன்னேற்றமில்லை” என்ற பகுதியும் வெட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு பொறிமுறைகளின் சுதந்திரம், பாரபட்சமற்ற தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் தொடர்ச்சியான போதாமை மற்றும் விசாரணைகளை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் 7ஆவது பரிந்துரையில், மோசமான மனித உரிமை மீறல்களுக்கு; பொருந்தக்கூடிய, தகுந்த தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதில், “காலதாமதங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அல்லது குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதன் மூலம், மனித உரிமை வழக்குகள் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளன” என்ற விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

9 ஆவது பரிந்துரையில், கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப பதில் நடவடிக்கைகள், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நிலவும் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை அதிகப்படுத்தியது என்றும் கூறப்படும் பகுதியும் அகற்றப்பட்டுள்ளது.

11 ஆவது பரிந்துரையில், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணவும், பொது மற்றும் முன்னாள் அரச அதிகாரிகளின் ஊழலை விசாரிப்பது மற்றும் வழக்குத் தொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் சுதந்திரமான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முயற்சிகளுக்கு உதவ தயாராக உள்ளது என்ற பந்தியில் இருந்து, “ மீள நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த” என்ற விடயமும் நீக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பயனுள்ள மற்றும் சுயாதீனமான செயற்பாட்டை வலியுறுத்தும், 12 ஆவது பரிந்துரையில், “மீள் ஊக்கம் அளிப்பது” என்ற விடயம் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, இரண்டாவதாக முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவில் காத்திரமான உட்சேர்ப்புகள் இடம்பெறவில்லை. அதேவேளை, சில முக்கியமான விடயங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் விடயங்களில் கடுமையான தொனியையும், புதிய முயற்சிகளையும் எதிர்பார்த்த பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இது ஏமாற்றமளிக்கும் ஒன்று.

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் தற்போதைய அறிக்கையிலும், முன்னைய உயர்ஸ்தானிகர்களின் அறிக்கைகளிலும், ஐ.நாவின் 9 சிறப்பு அறிக்கையாளர்களின் பரிந்துரைகளிலும், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரப்பட்டிருந்த போதும், அந்த விடயம் இந்த தீர்மான வரையில் இடம்பெறவில்லை என்பதை, ஆறு தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் அனுசரணை நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  11 ஆண்டுகளாக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், இதுவரை எந்த மாற்றத்தையும் இலங்கையில் ஏற்படுத்தாத நிலையில், புதிய முயற்சிகளும், நகர்வுகளும் தான், அவசியமாகிறது.

ஆனால், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அதிலிருந்து விலகி, மீண்டும் மீண்டும் அரசாங்கத்துக்கு காலஅவகாசத்தை வழங்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

அடுத்த மாத தொடக்கத்தில் இந்த தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்படும். அதற்கிடையில் வரைவில் திருத்தங்கள் செய்யப்படலாம். 

ஆனால் அது பெயரவிலான திருத்தங்களாக இருக்குமே தவிர, பெரியளவிலான மாற்றங்களைக் கொண்டதாகவோ, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதாகவோ, இருக்காது என்றே தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54