அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் இடை நிறுத்தப்படமாட்டாது - அமைச்சரவை பேச்சாளர் பந்துல

Published By: Digital Desk 5

23 Sep, 2022 | 02:46 PM
image

(எம்.மனோசித்ரா)

வரவு - செலவு திட்டத்தில் வரவிற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளியை சமநிலைப்படுத்தாவிட்டால் , சர்வதேச நாடுகளிடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது.

எனவே அரச நிதி முகாமைத்துவம் ஒழுக்கமுடையதாக இடம்பெற வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்காக ஒருபோதும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் இடைநிறுத்தப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வரவு - செலவு திட்டத்தில் வரவிற்கும் செலவிற்கும் இடையிலான இடைவெளியை சமநிலைப்படுத்தாவிட்டால் , சர்வதேச நாடுகளிடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது.

இதற்காக 2003 ஆம் ஆண்டு அரச நிதி முகாமைத்துவப்படுத்தல் பொறுப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை நிறைவேற்றாவிட்டால் , நாட்டுக்கு பாராளுமன்றத்தினால் நிதி அதிகாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படும்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சம்பளம் வழங்கப்படுவது இடை நிறுத்தப்பட மாட்டாது. கடந்த ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 1268 பில்லியன் ரூபாவாகும். இதில் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவை வழங்குவதற்காக 1115 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அதாவது முழு வரி வருமானத்தில் 86 சதவீதமானவை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படுகிறது. அரச நிதி முகாமைத்துவத்தில் காணப்படும் பிரதான பிரச்சினை இதுவாகும்.

எனவே மாத இறுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டியதும் , ஓய்வூதியம் வழங்க வேண்டியதும் அத்தியாவசியமானதாகும். எதிர்காலத்திலாவது உண்மையை நிலைவரத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நிதி ஒழுக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். மாறாக தொடர்ந்தும் பணம் அச்சிடப்படுமாயின் ரூபாவின் பெறுமதி குறைவடைந்து செல்வதோடு , பணவீக்கமும் அதிகரித்துச் செல்லும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்