அசமந்த போக்கினால் வருமானத்தை இழக்கும் வவுனியா நகரசபை

07 Oct, 2022 | 01:27 PM
image

பா.சதீஸ்

நாட்டில் ஒவ்வொரு இடங்களிலும் அரசிற்கென பல காணிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அத்தகைய காணிகள் மூலமாக கிடைக்கும் இலாபங்களை (குறித்த காணிகள் தொழில் நிமித்தம் வாடகைக்கு விடப்பட்டு) பொதுமக்களின் நலன் கருதி பிரதேச, நகர அபிவிருத்திகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒவ்வொரு இடங்களிலும் உள்ள அரச காணிகளை அந்தந்த இடத்தில் அமைவு பெற்றுள்ள நகரசபையோ அல்லது  பிரதேச சபையோ அல்லது மாநகரசபையோ அதனை பராமரித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானங்களை சேகரித்து குறித்த பிரதேச , நகர அபிவிருத்திக்கு பயன்படுத்துவது வழக்கமாகும். 

வவுனியா நகரசபையினரும் வவுனியா நகரிற்கு உட்பட்ட  பகுதியில் அதாவது வவுனியா நகரசபையின் கீழ் இருக்கும் பத்து வட்டாரத்திலும் உள்ள சபைக்கு சொந்தமான அரச காணிகளை வவுனியா நகரசபையினரே பராமரித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானங்களை பெற்று அந்த வருமானத்தினை குறித்த நகரின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் உரித்துடையவர்கள் வவுனியா நகர சபையினரே.

வவுனியா நகர சபையினருக்கு என சில கடமைகள் காணப்படுகின்றது. அந்தவகையில் சபையினர் தமக்கு  சொந்தமான காணிகளை மதிப்பீடு செய்து அதன் பெறுமதிக்கு ஏற்ப வருமானங்களை பெற்றுக்கொள்வதும், சபையினருக்கு சொந்தமான  பாராதீனப்படுத்தாத காணிகளை  பாராதீனப்படுத்தி சொத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதும் நகரசபையினரின் கடமையாகும் . 

குறித்த நகரசபை பிரிவிற்குட்பட்ட பத்து வட்டாரங்களிலும் சபைக்கு சொந்தமான 41 காணிகள் பயன்பாட்டில் இருக்கின்றது. அக் காணிகள் மூலம்  நகரசபையினர் பல இலட்சம் வருமானங்களை பெற்று கொள்கின்றார்கள். ஆனால் சபையினர் தமக்கு சொந்தமான காணிகளை சரியாக பராமரிக்காமலே அசண்டையினமாக செயற்பட்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சபைக்கு சொந்தமான 7 பரப்பு விஸ்தீரணம் உடைய காணியை தனியார் ஒருவர் தன்னிச்சையாக தொழில் நடாத்த பல வருடங்களாக விட்டிருக்கின்றார்கள். அவர் மீது இதுவரை  நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. 

இதற்கு சான்றாக  2019ஆம் ஆண்டு கணக்கீட்டு திணைக்களத்தினால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது அதாவது,

சபைக்கு சொந்தமான 7 பேர்ச் விஸ்தீரணம் உடைய காணியை தனிநபர் தன்னிச்சையான முறையில் ஆக்கிரமித்து தொழில் நிலையம் நடாத்தி வருகின்றார்.  இவ் விடயம் தொடர்பாக நகரசபை கட்டளைச்சட்டம் 255இன் படி  தனிநபருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் சபையினரால் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிகாட்டப்பட்டு சொத்துக்கள் தொடர்பான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் தற்போது அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பான அறிக்கை பெறப்பட்டு தங்களுக்கு அறியத்தருகின்றேன். என கூறப்பட்டிருந்தது.

அதேபோல 2020 ஆம் ஆண்டு  கணக்கீட்டு திணைக்களத்தினால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையிலும் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

சபைக்கு சொந்தமான 7 பேர்ச் விஸ்தீரணம் உடைய காணியை தனிநபர் தன்னிச்சையான முறையில் ஆக்கிரமித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக நகரசபை கட்டளைச்சட்டம் 255இன் படி  தனிநபருக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் சபையினரால் எடுக்கவில்லை. என சுட்டிகாட்டப்பட்டு அதற்கான பரிந்துரையாக சொத்துக்கள் தொடர்பிலான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்  என கூறப்பட்டதற்கு சபையினரால் எதுவித பதில்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை. 

இவ்வாறு 2019, 2020  கணக்காய்வு திணைக்களத்தினர் குறித்த பிரச்சினையை சுட்டி காட்டியும் சபையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருப்பதற்கு சபையினரின் அசமந்த போக்குதான் காரணமாகும். 

அதுமட்டுமன்றி சபையினரின் பயன்பாட்டிலிருக்கும் 41காணிகளினதும் பெறுமதியினை சபையினர்  கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மதிப்பீடு செய்யவில்லை. இதனால்  சபையினருக்கு  காணிகளின் மூலம் கிடைக்க வேண்டிய  வருமானமும், ஆதன வரிமூலம் கிடைக்கும்  வருமானமும் குறைவாகவே இருக்கின்றது. இதனை 2020ஆம் ஆண்டு கணக்கீட்டு திணைக்களத்தினால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில்  சபையின் பயன்பாட்டில் 40 எண்ணிக்கையான காணிகள் பத்து வருடங்களுக்கு மேலாக பெறுமதியிடப்பட்டு கணக்குகளிற்கு கொண்டு வரப்படாமையினால் மொத்த சொத்துக்களின் பெறுமதியானது நிதிக்கூற்றுக்களில் குறைத்து காட்டப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டு  சபையினுடைய அனைத்து சொத்துக்களின் பெறுமதிகள் குறிப்பிடப்பட்டு கணக்குகளில் வெளிப்படுத்தப்படல் வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர்  சபையின்  பயன்பாட்டில் உள்ள 40  எண்ணிக்கையான காணிகளில்  15 காணிகள் பாரதீனப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய காணிகளை பாராதீனப்படுத்த வவுனியா பிரதேச செயலாளரிடம் கோரியிருந்தோம், எனினும் இதுவரை இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எமக்கு அறியத்தரவில்லை என பிரதேச செயலாளர் மீது குற்றம் சாடி பதிலளிக்கப்பட்டிருந்தது.

எனினும்  கணக்காய்வு திணைக்களத்தினர் காணிகளின்  பெறுமதிகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என கூறியிருந்தும் இன்று ஒன்றரை வருடங்களை கடந்தும் சபையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இது நகரசபையினரின் அசமந்த போக்கையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

இது தொடர்பாக கட்டுரையாளனால் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் சபையின் பயன்பாட்டில் உள்ள காணிகள் எத்தனை? அதன் தற்போதைய பெறுமதி எவ்வளவு? என கேட்கப்பட்ட போது சபையினர் 41 காணிகள் இருப்பதாகவும் இதுவரை சபைகளுக்கு சொந்தமான காணிகளுக்கான மதிப்பீடு விலைமதிப்பீட்டு  திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்படவில்லை என பதில் கூறியிருக்கின்றார்கள்.

சபையினரால் வழங்கப்பட்ட தகவலையும் , கணக்காய்வு அறிக்கையினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சபையினர் தாம் இழைக்கும் தவறுக்கு பிரதேச செயலகத்தினையும், விலைமதிப்பீட்டு திணைக்களத்தினரையும் குற்றம் சாடுவது வெளிப்படையாக புலப்படுகின்றதே தவிர  அவர்களால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.

சபையினர் தமக்கு சொந்தமான காணிகளுக்கு இதுவரை உரிமை கோராமல் அசமந்தமாக விட்டிருக்கின்றார்கள். சபைக்கு சொந்தமான  பயன்பாட்டிலிருக்கும்  காணிகளில்  26 காணிகளை சபையினர் இதுவரை பாராதீனப்படுத்தாமல் விட்டிருக்கின்றார்கள்.

எடுத்துக்காட்டாக 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டு திணைக்களத்தினால் வெளிவந்த பொழிப்பு அறிக்கையில்,

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் சபைக்குரிய 50 காணி மற்றும் கட்டிடங்கள் தொடர்பாக வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிராததுடன் காணி மற்றும் கட்டிடங்கள்  சபையினரால் முறையாக பராமரிக்கப்பட்டிருக்கவில்லை.  அவ்வாறே கிராமக் காணி மற்றும் கட்டிடங்களை மெய்மையாய்வு  செய்யப்பட்டு சபைக்கு  சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலான உரிமை உறுதிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு,  காணி மற்றும் கட்டிடங்கள் மெய்மையாய்வு செய்யப்பட்டு சபைக்கு சொந்தமான அவ்வாறான சொத்துக்கள் தொடர்பிலான உரிமை உறுதிப்படுத்தல் வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது. அதற்கு சபை கணக்கீட்டு உத்தியோகத்தர் காணி, கட்டிடங்கள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன்,காணிகளை மதிப்பீடு செய்வதற்கு மதிப்பீட்டு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என பதிலளித்திருந்தார். 

இது தொடர்பாக கட்டுரையாளனால் தகவலறியும் உரிமை சட்டம் ஊடாக  நகரசபையில் உள்ள காணிகளை பாராதீனப்படுத்துவது யார்? குறித்த காணிகளை பாராதீனப்படுத்துவதில் ஏதாவது பிரச்சினையை எதிர் கொண்டுள்ளீர்களா? என கேட்கப்பட்டதற்கு சபைக்கு சொந்தமான காணிகளை பிரதேச செயலாளரே பாரதீனப்படுத்துவதாகவும், காணிகளை பாராதீனப்படுத்துவதில் தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என நகரசபையினர் பதில் கூறியிருந்தார்கள். ஆகவே கணக்காய்வு அறிக்கையினையும் குறித்த தகவலறியும் உரிமை சட்டம் மூலம் கோரப்பட்ட தகவல்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சபைக்கு சொந்தமான காணிகளை பாராதீனப்படுத்துவதில் சபையினருக்கு எந்தவித இடையூறும் இல்லை என்பது தெளிவாக புலப்படுகின்றது. எனவே சபையினர் பல ஆண்டுகளாக தமக்கு சொந்தமான காணியை பாராதீனப்படுத்தாமல் இருப்பதற்கு அவர்களின் அசமந்தபோக்கு மட்டும் தான் காரணமாக கொள்ள முடியும். 

அதுமட்டுமன்றி  தகவலறியும் உரிமைச் சட்டம் ஊடாக பாராதீனப்படுத்தப்படாத காணிகள் பாராதீனப்படுத்தப்படாமைக்கான காரணம் என்ன? குறித்த காணிகளை பாராதீனப்படுத்துவதற்கு  தங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?  என கேட்கப்பட்டதற்கு பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், வவுனியா அவர்களுக்கு நகரசபைக்கு சொந்தமான காணிகளை நகரசபைக்கு பாராதீனப்படுத்துவதற்கான கோரிக்கை கடிதங்கள்  அனுப்பப்பட்டு கோவை செயல் மறைவில் காணப்படுகின்றது எனவும் பிரதேச செயலாளருக்கு காணிகளை நகரசபைக்கு பாராதீனப்படுத்துவற்கான கோரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என பதில் கூறியிருந்தார்கள். 

உண்மையில் கணக்காய்வு திணைக்கள அறிக்கையில் குறித்த காணி தொடர்பான பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகியும் சபையினர் தமக்கு சொந்தமான காணிகளை பாராதீனப்படுத்தவோ, காணிகளுக்கான பெறுமதியை மதிப்பீடு செய்யவோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காணிகளை பாரதீனப்படுத்துவதற்கு இறுதியாக 27.05.2020 பிரதேச செயலகத்திற்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்களே தவிர அவற்றை விரைவாக செய்து முடிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு நகரசபையினரின் அசமந்த போக்கு தான் காரணம் என்பதனை யாராலும் மறுத்துவிட முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04