ரகுலின் நடைபயணத்தால் துளிர்க்குமா காங்கிரஸ்?

Published By: Digital Desk 5

16 Sep, 2022 | 01:55 PM
image

குடந்தையான்

தமிழகத்திலிருந்து காங்கிரஸ் கட்சி தொடங்கி இருக்கும் ‘இந்திய ஒற்றுமை நடைபயணம்’ அக்கட்சிக்கு எவ்வகையிலான பலனை அளிக்கும் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளிக்கிளம்பியுள்ளன. 

பாதயாத்திரை என்பது அரசியல் கட்சிகளுக்கும், வெகுஜன மக்களுக்கும் இடையேயான அரசியல் ரீதியிலான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுமொரு உத்தி என்ற பார்வை பொதுவாகவே உள்ளதோடு, பாதயாத்திரைகள் அரசியல் தலைமைகளுக்கு வெற்றிகளை அளித்த வரலாறுகளே அதிகமுள்ளன. 

இந்நிலையில், அரசியல் ரீதியில் பா.ஜ.க.விற்கு எதிரான மாற்று அரசியல் சக்தி காங்கிரஸ் தான் என்பதை அக்கட்சி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இத்தகைய நடைபயணத்தை அக்கட்சி மேற்கொண்டிருப்பது பொருத்தமான அணுகுமுறை தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளும் ‘இந்திய ஒற்றுமை’ நடை பயணம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்டதை விட கூடுதலான ஆதரவு ‘இந்திய ஒற்றுமை’ நடைபயணத்திற்கு கிடைத்து வருவதால் கடும் ஆத்திரத்திற்குள்ளான பா.ஜ.க., இது தொடர்பாக தங்களது எதிர்ப்பினை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறது. உதாரணமாக உள்துறை அமைச்சராகவும், பா.ஜ.கவின் சக்தி மிக்க தலைவர்களில் ஒருவராகவும் திகழும் அமித்ஷா “நடை பயணத்தை மேற்கொள்ளும் ராகுல் காந்தி அணிந்திருக்கும் சேட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல என்றும், அவர் இந்தியாவின் வரலாற்றை படிக்க வேண்டும்” என்றும் பதிவிட்டிருக்கின்றமை அக்கட்சியின் மனோநிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளது.  

இவ்வாறிருக்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு ஜனதா கட்சியின் தலைவர் சந்திரசேகர்  கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை நான்காயிரம் கிலோ மீற்றர் பாதையாத்திரை மேற்கொண்டார். இதன் மூலம் அவர் ஜனதா கட்சி கட்சியை இந்தியா முழுவதும் உயிர்ப்புடன் பணியாற்ற வைக்க முடிந்தது. அவர் தேசிய தலைவராகவும் உயர்ந்தார். 

ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மற்றும் அவரது புதல்வரும், தற்போதைய முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.

தமிழகத்திலும் தி.மு.கவின் தலைவரான கருணாநிதி தலைமையில், மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரையிலான 200கிலோமீற்றர் நீதிவேண்டி பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்குப்  அந்த நடைபயணம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 

காவேரி பிரச்சினைக்காக வைகோ நடை பயணம் மேற்கொண்டார். இவர் மேற்கொண்ட நடைபயணங்களால் அக்கட்சி தற்போதுவரை உயிர்ப்புடன் இயங்கி வருகிறது. எனவே அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் இந்திய ஒற்றுமை நடைபயணம், சரியான பாதையில். சரியான நேரத்தில். எடுக்கப்பட்ட உத்வேகமான முடிவு என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

அதேதருணத்தில் இந்துத்துவா, சனாதன தர்மம், தனியார் பொருளாதாரக் கொள்கை போன்றவற்றில் உறுதியான நம்பிக்கையுடன் பயணிக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, ராகுல் காந்தியின் நடைபயணத்தை ஆரம்பத்தில் பொருட்டாக கொள்ளாது விட்டாலும் தற்போது, ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலிமையாக உள்ள மாநிலங்களில் மட்டுமே நடைபயணத்தை மேற்கொள்கிறார் என்று விமர்சனங்களை முன்வைத்து இருட்டடிப்புச் செய்வதற்கு கடும் பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றது.

அதேநேரம், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் ராகுலின் நடைபயணம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவரது நடை பயணம் பா.ஜ.கவிற்கு எதிரானது அல்ல என்றும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் வரவேண்டும் என்பதற்காக, அவர் அவரது ஆதரவு தலைவர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்ளும் உட்கட்சி உத்தி” எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், மேற்படி குற்றச்சாட்டுக்களை ஒட்டுமொத்தமாக விலக்கிவிட முடியாத நிலைமைகளும் இல்லாமில்லை. 

நடைபயணத்தின் மூலமாக நாடு முழுதும் உள்ள காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திப்பதற்கு ராகுலுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பதால் அவர் தான்தான் தலைவர் என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என்ற தர்க்கத்தில் நியாயங்கள் உள்ளன. 

இவ்வாறிருக்கையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்து தமிழக பா.ஜ.க. தரப்பில் வலிமையான எதிர்ப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. வானதி சீனிவாசன் உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டுமே பெயரளவிற்கு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்திருக்கிறார்கள். 

மறுபக்கத்தில், தமிழகத்திலிருந்து ராகுலின் நடைபயணத்தை ஆரம்பித்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. குறிப்பாக நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர்; ரவி ஆகியோர்களின் நடவடிக்கைக்கு, தி.மு.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. 

அத்துடன் தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றும் திருமதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு, அந்த மாநில அரசு பாதுகாப்பு விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்காத விவகாரத்தையும், அவர்களை சிறுமைப்படுத்தும் விவகாரத்தையும் பட்டியலிட்டு, இதுபோன்றதொரு நிலை தமிழக ஆளுநருக்கு ஏற்படக்கூடும் என்ற எச்சரிப்பும் வெளிப்பட்டுள்ளது.  

அத்துடன் நீட் தேர்வு தேர்ச்சி குறித்து தி.மு.க. வழக்கமான புள்ளி விவரங்களுடன் இந்த தகுதி தேர்வின் நிலையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதற்கு பா.ஜ.க. ஆதரவு கல்வியாளர்கள் இதுவரை பதிலளிக்கவில்லை. இதன்மூலம் தி.மு.க. நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருவதை காணமுடிகிறது 

அத்துடன், காங்கிரஸின் நடைபயண அரசியலில் மக்களின் கவனம் குவிவதை திசைத்திருப்பதற்காக தமிழக பா.ஜ.க. முன்னெடுத்திருக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வாழ்த்து எனும் அரசியல் ஆயுதம், தி.மு.கவினரால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதனால் மீண்டும் பா.ஜ.க. அரசியல் களத்தில் பின்னடைவை எதிர் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தமாகின்றது.

இதேதருணத்தில் காங்கிரஸின் நடைபயண அரசியலைத் திசை திருப்புவதற்காக பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வும், தன் பங்கிற்கு மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன போராட்டத்தை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவி நீதிமன்ற உத்தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருன்கின்றது. 

அதேவேளை, பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தினை திறப்பதற்கான தடைக்கோரிக்கை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாலும் உற்சாகமாகியிருக்கும் எடப்பாடி, தமிழக அரசு எதிரான விடயங்களை பட்டியலிட்டு களமிங்குவதற்கு தயாராகிவிட்டார்.

இந்நிலையில் அ.தி.மு.கவின் வலிமையான இரண்டாம் கட்ட தலைவராக கருதப்படும் முன்னாள் அமைச்சர் வேலுமணியை இலக்கு வைத்து மீண்டும் இலஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் தி.மு.க. எதிர் அ.தி.மு.க. இடையேயான அரசியல் யுத்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட இந்திய நடைப்பயண அரசியலே காரணம் ஒருவகையில் காரணமாகியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22