உலகில் அதிகரிக்கும் நவீன அடிமைத்தனம்

Published By: Digital Desk 5

16 Sep, 2022 | 12:58 PM
image

சுவிசிலிருந்து சண் தவராஜா

நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக மனித குலம் பறைசாற்றிக் கொண்டாலும், விலங்குகளோடு விலங்காக காடுகளில் வாழ்ந்த காலத்தை முற்றுமுழுதாக மறந்துவிட முடியாத ஒரு விலங்காகவே மனிதன் இன்றும் வாழ்கிறான் என்பதை நினைக்கக்கூடிய பல எடுத்துக் காட்டுகள் மனித வாழ்வில் தற்போதும் உள்ளன. 

அதில் ஒன்றாக மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் குணாம்சமும் உள்ளது. மிருகங்களைக் கட்டுப்படுத்தி மந்தைகளை உருவாக்கிய மனிதன், அவற்றைப் பண்டங்களாகக் கருதி விற்பனை செய்யும் நடைமுறை காலங்காலமாகத் தொடர்கிறது. 

ஒரு காலகட்டத்தில் மனிதர்களை அடிமைப்படுத்தி பண்டங்களாக விற்பனை செய்ததை வரலாற்றின் ஏடுகளில் காண முடிந்தது. வெட்கக்கேடான அந்த நடைமுறை ஜனநாயகப் போராட்டங்களின் மூலம் ஒழிக்கப்பட்டு விட்டாலும் அது ஏதோவொரு வழிமுறையில் தொடரவே செய்கின்றது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று.

நவீன அடிமைத்தனம் தொடர்பிலான உலகளாவிய மதிப்பீடு தொடர்பில் சர்வதேச தொழிலாளர் நிறுவனம், சர்வதேச குடிபெயர்வாளர் நிறுவனம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பான வோல்க் பிரி (Walk Free) என்பவை இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் செப்டெம்பர் 12ஆம் திகதி வெளியானது. 

அந்த ஆய்வு முடிவுகளின்படி உலகளாவிய அடிப்படையில் 50மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர். இதனை வேறு விதமாகக் கூறினால் உலகில் வாழும் மனிதர்களுள் ஒவ்வொரு 150பேரில் ஒருவர் நவீன அடிமையாக உள்ளார். 

மொத்தத்தில் 28மில்லியன் மக்கள் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, 22மில்லியன் பேர் கட்டாய திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் 24.9மில்லியன் மக்கள் கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

15.4 மில்லியன் மக்கள் கட்டாய திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டிருந்தனர். எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் புதிதாக 10 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் அந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

நவீன அடிமைத்தனத்தை 2030ஆம் ஆண்டில் முற்றாக ஒழிக்கும் இலக்கை ஐக்கிய நாடுகள் சபை கொண்டிருந்த போதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு அந்த இலக்கைக் குறித்த காலத்தில் எட்டுவது தொடர்பிலான ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிட்டிய கடந்தகாலத்தில் உலகம் எதிர்கொண்ட கொரோனாப் பெருந்தொற்று, ஆயுத மோதல்கள் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணிகளே இந்தச் சடுதியான அதிகரிப்புக்குக் காரணம் என்கின்றது அறிக்கை.

கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 22மில்லியன் பேரில் 11.8 சதவீதம் பெண்களாவர். நிர்ப்பந்திக்கப்பட்ட திருமண பந்தத்தில் 14.9 சதவீதம் பெண்கள் உள்ளனர். இவர்களில் 85 சதவீதமானோர் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாகவே கட்டாய திருமண பந்தத்தில் இணையவேண்டிய நிலை உள்ளது. 

கட்டாய வேலையில் ஏறக்குறைய அரைவாசி பெண்களாக உள்ள நிலையில் கட்டாய திருமண பந்தந்தில் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. ஆண் மைய உலகில் பெண்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் அடக்குமுறையை இந்தப் புள்ளிவிபரங்கள் துலாம்பரமாக உணர்த்தி நிற்கின்றன. 

அதேவேளை கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படுவோரில் 3.3 மில்லியன் பேர் சிறார்கள் ஆவர். இதனை வேறு விதமாகச் சொல்வதானால், கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படுவோரில் எட்டில் ஒருவர் சிறாராக உள்ளனர்.

மொத்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் இரண்டு தலைப்புகளின் கீழும் 22.8 மில்லியன் ஆண்களும் 26.7 மில்லியன் பெண்களும் 12.3 மில்லியன் சிறார்களும் அடங்குகின்றனர். 

மனிதர்கள் வலுக் கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்படும் போக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் ஏதோவொரு வகையில் நடைமுறையில் உள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனினும், பிராந்தியங்களின் அடிப்படையில் நவீன அடிமைத்தனம் அதிகமாக உள்ள பிராந்தியமாக ஆசிய பசுபிக் பிராந்தியம் உள்ளது. 

இங்கே 29.3 மில்லியன் மக்கள் நவீன அடிமைத்தனத்தின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தொகையின் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் இந்தப் பிராந்தியத்திலேயே வாழ்கின்றனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்தப் பிராந்தியத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கட்டாயத் திருமணங்கள் அதிகமாக நிகழும் பிராந்தியமாகவும் இதுவே உள்ளது. 65 சதவீதமான கட்டாயத் திருமணங்கள் இங்கே நிகழ்கின்றன. அடுத்ததாக கட்டாயத் திருமணங்கள் அதிகளவில் நிகழும் நாடுகளாக அரபு நாடுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கு 4.8 என்ற விகிதத்தில கட்டாயத் திருமணங்கள் நிகழ்கின்றன.

ஆபிரிக்கக் கண்டத்தில் 7 மில்லியன் மக்களும், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் 6.4 மில்லியன் மக்களும் நவீன அடிமைத்தனத்தின் கீழ் உள்ளனர். அமெரிக்கப் பிராந்தியத்தில் 5.1 மில்லியன் மக்களும், ஆகக் குறைவாக அரபு நாடுகளில் 1.7 மில்லியன் மக்களும் நவீன அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்த அறிக்கை.

'கட்டாய வேலை என்பது வறிய நாடுகளில் மாத்திரம் காணப்படும் ஒரு நிலைமை என நம்புவது தவறானது" என்கிறார் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கை ரைடர். நிர்ப்பந்திக்கப்பட்ட பணியாளர்களில் உள்ளூர் வாசிகளோடு ஒப்பிடுகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று மடங்கு அதிகமாக உள்ளனர். 

அதேவேளை, கட்டாய வேலைவாய்ப்பில் 86 விழுக்காடு தனியார் துறையில் உள்ள போதிலும், 14 விழுக்காடு அரசாங்கங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்ற உண்மையையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. சிறைக் கைதிகளாக உள்ளோரை நிர்ப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிகளில் ஈடுபடுத்தும் போக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் உள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவில் பெண்களும் குழந்தைகளுமே அதிக அபாயத்தை எதிர்கொள்பவர்களாக உள்ளனர். கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படும் ஐந்தில் ஒருவர் சிறாராக உள்ள நிலையில் இவர்களுள் அரைவாசிப் பேர் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நவீன அடிமைத்தனத்தில் சிக்குண்டுள்ள மக்களுள் 23 விதமானோர் பாலியல் துறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஐந்தில் நால்வர் பெண்களாக உள்ளனர்.  

மனித குலத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலான இந்தப் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனை எவ்வாறு செய்வது?

ஒரு செயற்பாட்டின் முதற்படியாக விளங்குவது விழிப்புணர்வே. ஐ.நா. சபையின் இந்த அறிக்கை விழிப்பணர்வை ஏற்படுத்தும் செயன்முறையின் முதற்படியாக உள்ளது. இந்த விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் பொறுப்பு மக்கள் நலப் பணியாளர்களுக்கு உரியது. தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் இணைந்து இந்தப் பணியை முன்னோக்கி எடுத்துச் செல்லக் கடமைப்பட்டவர்கள். 

எனினும், நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கும் வல்லமை அரசாங்கங்களின் கைகளிலேயே பெரிதும் தங்கியுள்ளது. கட்டாய வேலைவாய்ப்பின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது குழந்தைத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள முடிவு இந்தத் திசையில் முதலாவது காலடி எனலாம். எனினும், செல்ல வேண்டிய இலக்கோ வெகு தொலைவில் உள்ளது என்பதே கசப்பான உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48