மறுக்கப்படும் நீதி

Published By: Vishnu

16 Sep, 2022 | 12:23 PM
image

கபில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில், இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைகள் தொடங்கி விட்டன.

இலங்கையின் நிலவரங்கள், முன்னேற்றங்கள், பின்நோக்கிய செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்பணியகத்தின் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து, இலங்கையில் மனித உரிமைகளை உறுதி செய்வதற்கும், மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்குமான வழிகள் மற்றும் அழுத்தங்கள் குறித்தே இப்போது கவனம் செலுத்தப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைப் பொறுத்தவரையில் இலங்கையுடன் இணைந்து மனித உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய சூழல்கள் இல்லை.

ஏனென்றால், இலங்கை அரசாங்கம் மீறல்கள் நடந்ததை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலையிலும் இல்லை, அதற்கு சரியான நியாயங்களை வழங்க கூடிய நிலையிலும் இல்லை.

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமீறல்கள் இடம்பெற்றன என்று சர்வதேச அறிக்கைகள் உறுதி செய்திருக்கின்றன.

ஆனாலும், ஜெனிவாவுக்குப் புறப்பட முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜெனிவாவில் எமக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தினால் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

படையினர் சிலர் போரின் போது மீறல்களை நிகழ்த்தியிருக்கலாம் என்றும், அதற்காக ஒட்டுமொத்த படையினரையும் குற்றவாளியாக்குவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் கூட, போரின் இறுதிக்கட்டத்தில் மீறல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும், அதற்கு நீதியை வழங்கும், பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.

இப்போதும் கூட, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறிதல் அல்லது உண்மையை ஒப்புக் கொள்ளுதல் என்பது, காலம் தாழ்த்திய ஒரு நடவடிக்கையாகும்.

போர் முடிந்து 13 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் தான், உண்மை கண்டறியும் பொறிமுறையை உருவாக்கப் போவதாக அரசாங்கம் கூறுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள், உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவும் கூட, மீறல்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கவில்லை.

சில இடங்களில் மீறல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்றே அந்த அறிக்கை கோடிகாட்டியிருந்தது. 

அதுகுறித்து விசாரணைகளை நடத்தி, குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரை பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்கான பொறிமுறைகளை அரசாங்கம் உருவாக்கவில்லை.

இந்த நிலையில் தான் இப்போது உண்மை கண்டறியும் பொறிமுறை என மீண்டும் உள்நாட்டுப் பொறிமுறைக்குள் இழுத்தும் செல்லும் முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார் அலி சப்ரி.

இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், அலி சப்ரி சர்வதேச விசாரணையை தடுக்க முயல்கிறார் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கை விடயத்தில் சர்வதேச சமூகம் காட்டுகின்ற அதிக அக்கறையை இலங்கை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வந்திருக்கிறது.

தொடர்ச்சியாக ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகளை அது நிராகரித்து வந்த போதும், இலங்கை அரசாங்கத்தைப் புறக்கணித்து, வெளியக பொறிமுறை ஒன்றை வலுவானதாக நிறுவுவதற்கு சர்வதேசம் இன்னமும் முன்வரவில்லை.

சில விசாரணைப் பொறிமுறைகள் செயற்படுத்தப்பட்ட போதும், இப்போது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்து பாதுகாக்கும், குழுவொன்றை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் உருவாக்கியுள்ள போதும், பொறுப்புக்கூறலை நோக்கி நகர்த்துகின்ற எந்தவொரு கட்டமைப்பும் இன்னமும் உருவாக்கப்பட்டவுமில்லை.

அதனை நோக்கி சர்வதேசம் செயற்படவுமில்லை.

பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மீறி வரும் நிலையில் அல்லது அதற்கு இணங்க மறுத்து வரும் நிலையில், சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று தான் இதற்குத் தீர்வாக அமைய முடியும் என்பது பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.

அதுவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்தி இடம்பெற்ற மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று, தமிழர் தரப்பு கோரி வருகிறது.

இந்தக் கோரிக்கை இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை.

இவ்வாறான ஒரு விசாரணைப் பொறிமுறைக்குள் கொண்டு வரப்பட்டால், அது இலங்கையில் தங்களுக்குள்ள “வெளி”யை இல்லாமல் செய்து விடும் என்ற கவலை அனுசரணை நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிடம் உள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் தொடக்க அமர்வில் உரையாற்றிய சீனப் பிரதிநிதி, சென் சூ,  இலங்கைக்கு ஆதரவாக வெளிப்படுத்திய கருத்துக்கள், அனுசரணை நாடுகளையோ, இந்தியாவையோ யோசிக்க வைக்க கூடியவை.

ஜெனிவாவில் இலங்கையைப் பாதுகாப்பதில் சீனப் பிரதிநிதி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதில் காட்டிய அக்கறை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை எந்தவொரு நாடும் சுயலாபத்திற்காக பயன்படுத்த முயற்சிப்பதை சீனா எதிர்க்கிறது என்ற அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்க மனித உரிமைகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் உள்விவகாரங்களில் தலையிடும் நடைமுறையை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறான பின்புலச் சூழலில், சர்வதேச சமூகத்தினால், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு தயக்கம் வெளியிடப்பட்டு வருகிறது.

இலங்கை அரசாங்கம் உண்மை கூறவில்லை என்பதை பேரவையில் அளிக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்பதை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், அதனை ஒதுக்கி விட்டு, முன்நோக்கிச் செல்வதற்கு தயாராக இல்லை என்பது தான் அவலமான நிலை.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜெனிவாவில் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுநர்களை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கு இணங்கி,  அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் பின்னர் தடம் மாறியது வரலாறு.

இவ்வாறான நிலையில் இப்போது இலங்கை கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புவதும் கடினமானதாகவே உள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குழுவின் 23ஆவது அமர்வு, கடந்த வாரம் ஜெனிவாவில் இடம்பெற்ற போது, அங்கு உரையாற்றிய காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான சந்தியா எக்னெலிகொட,

“பின்தங்கிய சட்ட அமைப்பைக் கொண்ட, தண்டனையிலிருந்து தப்பித்தலை அதிகாரப்பூர்வமற்ற கொள்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டில், வறுமை, தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு மத்தியில், பாதிக்கப்பட்டவர்கள் இப்போது செய்யக் கூடிய ஒரே விடயம், நாட்டின் தெருக்களில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு அழுவதும் புலம்புவதும் மட்டும் தான் ”என்று குறிப்பிட்டிருந்தார்.

இது பாதிக்கப்பட்டவர்களின் இயலாமையையும், ஆற்றாமையையும் அடையாளப்படுத்துகிறது. எல்லாத் தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது நம்பிக்கையிழக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் அழுது அழுது கண்களில் நீர் வற்றி வரண்டு விட்டது.

வீதிகளில் அழுது புரண்டு தங்களின் ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்ட அவர்கள் இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் நீதிக்குப் போராடப் போகிறார்கள்?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையோ, அதன் உறுப்பு நாடுகளோ மீறல்களை அடையாளப்படுத்தும் அளவுக்கு அவற்றுக்கு நியாயத்தை தேடிக் கொடுக்கத் துணிவதில்லை.

அரசியல் மயப்படுத்தப்பட்ட, இராஜதந்திர நலன்கள் மற்றும் பூகோள நலன்சார் அமைவிடத்தை கொண்டுள்ள ஒரு நாடு, பொறுப்புக்கூறலையும், நீதியையும் தன் போக்கிற்கு வளைத்துக் கொள்ள  முடியும் என்பதற்கு இலங்கை இன்று வரை உதாரணமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49