மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள், இன்று (16) காலை வந்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்போது, குறித்த இடத்திற்கு சிங்கள மக்கள் வாகனங்களில் இருந்து வருகைத்தந்ததை அடுத்து பெரும் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதனையடுத்து குறித்த பிரதேச தமிழ் மக்கள் வருகைத்தந்ததை அடுத்து நிலமையை கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொண்டபோதும், பலனளிக்கவில்லை.


குறித்த தனியார் கணிக்குள் விகாராதிபதி அத்துமீறி நுளைந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் நிலமையை பொலிஸாருக்கு தெளிவுபடுத்தியதும் உடனடியாக காணியில் இருந்து வெளியேறுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நீதிமன்ற சட்டத்தையும் மீறி பிக்கு அத்து மீறி நுளைந்துள்ளார், குறித்த இடத்தில் பௌத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்ததாகவும் கூறி, தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்துகொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


குறித்த பிரதேசம் சிங்களவர்களுக்கு சொந்தமானது என்றும் அங்கு விகாரை ஒன்றை அமைத்து சிங்கள மக்களை குடியேற்றப்போவதாகவும் கூறிய பிக்கு அங்கிருந்த அரச மரத்தடியின் கீழ் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதற்காக குறித்த பிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பல சிங்கள குடும்பங்களையும் வாகனங்களில் அழைத்துவந்து குறித்த இடத்தில் அமரவைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பிக்குவை அங்கிருந்து அகன்று செல்லுமாறு பொலிஸ் அதிகாரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் கூறியபோது “நான் இந்த இடத்தில் இருந்து எழும்ப மாட்டேன் அரசாங்க அதிபர் வந்தால் மட்டும்தான் எழும்புவேன் அவரை வரச்சொல்லுங்கள்” என்று பிக்கு கூறியுள்ளார்.


அதனை தொடர்ந்து உடனடியாக தொலைபேசியுடாக அரசாங்க அதிபரை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அரசாங்க அதிபரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அரசாங்க அதிபர் அங்கு வரமறுத்ததுடன் பொலிஸாரை கொண்டு பிரச்சினையை தீர்க்குமாறு குறிப்பிட்டுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டதுடன் குறித்த இடத்திற்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனுடன் இணைந்து பௌத்த பிக்குவை பொலிஸாரின் உதவியுடன் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.