திரைத்துறையின் உயரிய விருதை வென்றார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா

Published By: Vishnu

12 Sep, 2022 | 05:24 PM
image

குமார் சுகுணா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா திரைத்துரையின் மிக உயரிய விருதான எம்மி விருதை வென்றுள்ளார்.

சில அரசியல் தலைமைகள் ஆட்சியில் இருக்கும் போதே வாக்களித்த மக்களினால் விரட்டியடிக்கப்படுகின்ற சம்பவங்கள் உலக வரலாற்றில் இடம் பெறுகின்றன. ஆயினும் சில அரசியல் தலைமைகள்  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலக மக்கள் அனைவரினாலும் கொண்டாடப்படுகின்ற சந்தர்பங்களும் உள்ளன. அப்படி உலக மக்களினால் கொண்டாடப்படுகின்ற ஒருவர்தான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா.

அமெரிக்க அரசியலில் பாரக் ஒபாமா ஒரு புயலைப் போல வந்துச் சென்றார். அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், செனட் சபையின் உறுப்பினரான ஐந்தாவது ஆபிரிக்க - அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஒபாமாவின் எளிமையும் பண்புகளும், உலக மக்களிடம் அவருக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது.

அதுவரை அமெரிக்கா ஜனாதிபதியின் கதிரையை வெள்ளை இனத்தவர்கள் மட்டுமே அலங்கரித்து வந்தனர்.  ஆனால் முதலாவது கறுப்பினத்தவராக அமெரிக்கா ஜனாதிபதி கதிரையை  ஒபாமா அலங்கரித்தார். இந்த அதிகார மாற்றம் சுலபமாக நடந்துவிடவில்லை. அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தின் 47 வயது செனேட்டரான ஒபாமா, யாரும் தொட முடியாத உச்சிக்கு வருவதற்குக் கிட்டத்தட்ட 21 மாதங்கள் சுழன்று சுழன்று பிரசாரம் செய்யவேண்டியிருந்தது.

வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில் உச்சபட்ச பதவியில் சென்று அமர்ந்ததே வாழ்நாளுக்குமான வரலாற்றுச் சாதனைதான். அதுவரை ஓரங்கட்டப்பட்ட பல இலட்சம் கறுப்பின அமெரிக்கக் குழந்தைகளின் நம்பிக்கைகளும், கனவுகளும் மீண்டும் புத்துயிர் பெற்றன. அதுவரை தங்களின் வாழ்வையும், உயிரையும் அவர்களே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு அடங்கிப் போயிருந்தனர். அந்த மனப்பான்மை ஒபாமாவின் பதவியேற்பின் போதே முற்றிலுமாக மாறிப்போனது.

 உலக அரசியலிலும், அமெரிக்க அரசியல் வரலாற்றிலும் ஒபாமாவின் 8 ஆண்டுகால ஆட்சி மிக முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் கூறுவதுண்டு.

பராக் ஒபாமா அதிகாரத்திலிருந்த எட்டு ஆண்டுகளில் செய்த சாதனைகள், எடுத்த முக்கிய முடிவுகள் பல உண்டு. இரண்டாவது பொருளாதாரப் பெருமந்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தது, ஒபாமா கேர் எனப்படும் நோயாளி காப்பு மற்றும் தாங்கத்தகு கவனிப்பு சட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டில் புரட்சி செய்தது, வேலைவாய்ப்பின்மையை 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதத்துக்குக் கொண்டு வந்தது, வீழ்ச்சியிலிருந்த ஒட்டோமொபைல் துறையை நிமிரச் செய்தது, உச்சநீதிமன்றத்திற்கு முதல் லத்தீன் அமெரிக்க நீதிபதி உட்படப் பெண் நீதிபதிகளை நியமித்தது, காலநிலை மாற்றம் என்ற ஒன்றை முக்கியமான பிரச்சினையாகக் கையில் எடுத்துக் கொண்டது, அமெரிக்காவின் பிரதான எதிரியாகப் பார்க்கப்பட்ட, பல தீவிரவாத கொடுஞ்செயல்களைச் செய்த ஒசாமா பின்லேடனை வீழ்த்தியது என அவரின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2009ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது.

பராக் ஒபாமாமக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் குழு அறிவித்தது.

ஆனால், அப்போதும் அந்த விருதைப் பெறுவதற்கான தகுதி தனக்கில்லை என்றே ஒபாமா கருதினார். நோபல் அறிவிக்கப்பட்டபோது "நோபல் பரிசா, எதற்கு?" என்று தனக்குத் தோன்றியதாக 2020-ஆம் ஆண்டு தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் மட்டுமின்றி இசை, விளையாட்டு என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார் ஒபாமா. அதனால், அவரது அனைத்து நடவடிக்கைகளும் மக்களால் உற்றுநோக்கிப் பார்க்கப்படுகிறது. கூடைப் பந்து வீரரான ஒபாமா, சினிமாத் துறையிலும் கலக்கி வருகிறார்.

அதனை நிரூபிக்கும் வகையில் இப்போது எம்மி விருதையும் வென்று அசத்தியுள்ளார். டுவைட் ஐசனோவருக்குப் பிறகு, எம்மி விருதை வென்ற 2ஆவது அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமை ஒபாமாவுக்கு கிடைத்துள்ளது. ஜசனோ கடந்த 1956ஆம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை பெற்றார்

'Our Great National Parks' எனும் Netflix நிறுவனத்தின் ஆவணத்தொடரில் இடம்பெற்ற காட்சிகளுக்கு பரக் ஒபாமா பின்னணி விளக்கக்குரல் கொடுத்திருந்தார்.

அதற்காக அவருக்கு தற்போது இந்த எம்மி (Emmy) விருது வழங்கப்பட்டுள்ளது. கரீம் அப்துல்-ஜப்பார், டேவிட் அட்டன்பரோ, லூபிடா நியோங்கோ உட்பட, பலரும் இந்த பிரிவில் ஒபாமாவுடன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஒபாமாவுக்கு ஏற்கனவே இரண்டு கிராமி (Grammy) விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசை வென்றவர் ஒபாமா

"The Audacity of Hope", "Dreams from My Father" என்ற தலைப்புகளில் வெளியிடப்பட்ட அவரது வாழ்நாள் நினைவுக் குறிப்புகளுக்கான ஒலிப்பதிவுகளுக்கு Grammy விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 2008ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் பாரக் ஒபாமா. அனைத்துலக நட்புறவு, மக்களிடையிலான ஒத்துழைப்புப் போன்றவற்றில் அவர் பெரிய அளவிலான முயற்சிகள் மேற்கொண்டதற்கு அங்கீகாரமாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஒபாமாவுக்கு எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து 'ஹையர் கிரவுண்ட்' என்கிற பெயரில் இணையத் தொடர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் 'அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்த தொடர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது. இந்ந நிலையில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52