8 வருடங்களின் பின் ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி 

12 Sep, 2022 | 12:18 AM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்த இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றிபெற்று 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது.

இதன் மூலம் ஓரே நாளில் இரண்டு ஆசிய கிண்ணங்களை வென்றெடுத்து இலங்கை வரலாறு படைத்தது. 

சிங்கப்பூரில் இன்று பிற்பகல் நிறைவுபெற்ற ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சிங்கப்பூரை வீழ்த்தி இலங்கை ஆசிய கிண்ணத்தை ஆறாவது தடவையாக சுவீகரித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட்டிலும் ஆசிய கிண்ணத்தை இலங்கை ஆறாவது தடவையாக சுவீகரித்து பெருமை பெற்றது.

8 வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் இருபது 20 ஆசிய கிண்ணம், இருபது 20 உலகக் கிண்ணம் ஆகியவற்றை சுவீகரித்த இலங்கை, இந்த வருடமும் அதேபோன்று இரட்டை வெற்றியை ஈட்ட அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் இலங்கை முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் பானுக்க ராஜபக்ஷ அபாரமாகத் துடுப்பெடுத்தாடி குவித்த ஆட்டமிழக்காத அரைச் சதம், வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டம், ப்ரமோத் மதுஷானனின் 4 விக்கெட் குவியல் என்பன ஆசிய கிண்ணத்தை இலங்கை சுவீகரிப்பதற்கு பெரிதும் உதவின.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானின் இன்னிங்ஸில் முதலாவது ஓவரை வீசிய டில்ஷான் மதுஷன்கவின் முதல் பந்து நோபோல் ஆனது. அதனைத் தொடர்ந்து அவர் வீசிய பந்துகள் வைட், வைட், 5 வைட், வைட், வைட் என பதிவானது. அவர் வீசிய 6ஆவது பந்து ப்ரீ ஹிட்டாக இருந்தபோதிலும் ஒரு ஓட்டமே பெறப்பட்டது. அதன் பின்னர் மதுஷன்க சிறப்பாக பந்துவீசிய போதிலும் முதல் ஓவரில் 12 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார்.

இது பாகிஸ்தானுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஆனால், அடுத்த ஓவரரை வீசிய மஹீஷ் தீக்ஷன தனது ஓவரில் 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தினார்.

4ஆவது ஓவரில் பாகிஸ்தான் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ப்ரமோத் மதுஷானின் பந்துவீச்சில் பாபர் அஸாம் (5), பக்கார் ஸமான் (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் களம்விட்டு வெளியேற பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்தது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மொஹமத் ரிஸ்வானும் இப்திகார் அஹ்மத்தும் 3ஆவது விக்கெட்டில் 59 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்தபோதிலும் பாகிஸ்தானுக்கு தேவைப்பட்ட ஓட்ட வேகம் போதுமானதாக அமையவில்லை.

இப்திகார் அஹ்மத் 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து மொஹமத் நவாஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேற பாகிஸ்தான் 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனை அடுத்து தேவையான ஓட்ட வேகம் மேலும் அதிகரிக்க பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. 

கடைசி 4 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 61 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஹசரங்க வீசிய 17ஆவது ஓவரின் முதல் பந்துதில் மொஹமத் ரிஸ்வான் சிக்ஸ் ஒன்றை விளாச முனைந்து 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஆசிப் அலியின் விக்கெட்டை வனிந்து ஹரசங்க நேரடியாக பதம்பார்த்தார்.

அதே ஓவரில் குஷ்தில் ஷாவின் விக்கெட்டையும் ஹசரங்க வீழ்த்த இலங்கையின் வெற்றி அண்மித்துக்கொண்டிருந்தது.

18ஆவது ஓவரில் மஹீஷ் தீக்ஷனவின் பந்துவீச்சில் ஷதாப் கானும் (4), 19ஆவது ஓவரில் மதுஷானின் பந்துவீச்சில் நசீப் ஷாவும் (4) ஆட்டமிழக்க பாகிஸ்தானின் ஆசிய கிண்ண கனவு தவிடுபொடியானது.

கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 32 ஓட்டங்கள் தேவைப்பட முதல் 3 பந்துகளில் 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்த சாமிக்க கருணாரட்ன, கடைசி பந்தில் பாகிஸ்தானின் கடைசி ஆட்டக்காரரான ஹரிஸ் ரவூப்பின் விக்கெட்டையும் கைப்பற்றினார்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தானின் பந்துவீச்சுகளை ஆரம்பத்தில் எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

குசல் மெண்டிஸ் (0), பெத்தும் நிஸ்ஸன்க (8), தனுஷ்க குணதிலக்க (1), தனஞ்சய டி சில்வா (28), தசுன் ஷானக்க (2) ஆகியோர் முதல் 9 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

எவ்வாறாயினும் பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க டி சில்வா ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 42 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்தத் தொடரில் முதல் தடவையாக துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய பானுக்க ராஜபக்ஷ 45 பந்துளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 71 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

அவருடன் பிரிக்கப்படாத 7 ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்த சாமிக்க கருணாரட்ன 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஹரிஸ் ரவூப் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35