குவாட் கவனத்தை திருப்பிய சீனா

Published By: Vishnu

10 Sep, 2022 | 07:56 AM
image

ஹரிகரன்

சீனா  ‘யுவான் வாங் 5’ கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்திய அதேவேளை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சொலமன் தீவுகளில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் நிறுத்துவதையும் தடுத்து நிறுத்தியது”

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுதிஸ்ரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் புதுடில்லியில் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தில், மூன்று முக்கிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதில் இரண்டு விடயங்கள் குவாட் நாடுகளுடன் நேரடியாகத் தொடர்புடைய- அவற்றின் கொள்கை சார்ந்த பொதுவான அம்சங்கள்.

மூன்றாவது விடயம், இலங்கை நிலவரங்கள் மற்றும் விவகாரங்கள் தொடர்பானது. இது குவாட் அமைப்புடன் நேரடியாகத் தொடர்பு படாதது.

குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சு உயர் அதிகாரிகளின் கூட்டத்தில், பிராந்திய பூகோள நிலைமைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதோ, திறந்த, வெளிப்படையான, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டதோ ஆச்சரியமானதல்ல.

இந்த அமைப்பின் உருவாக்கத்துக்கு இவையும் முக்கியமான காரணங்களாக இருந்தன.

ஆனால், இலங்கை விவகாரம் குவாட்டுடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கவில்லை.

இலங்கையின் பொருளாதார நிலவரங்களும், சீனாவின் நகர்வுகளும், குவாட் அமைப்பின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சீனா முக்கியமானதொரு காரணி என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக கூறப்படுகிறது.

சீனாவும் இலங்கையும் அதனை மறுத்தாலும், இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இலங்கைக்கு கடன்களை வழங்கிய போது மென்போக்கையும், அதனை அறவிடும் போது கடும் போக்கையும் கடைப்பிடித்த சீனா, மோசமான சிக்கலுக்குள் இலங்கை மாட்டிக் கொள்வதற்கு வழிவகுத்தது.

அதேவேளை, சிக்கலில் இருந்து மீள்வதற்கு சீனாவிடம் இருந்து குறிப்பிடத்தக்க உதவிகள் ஏதும் கிடைத்திருக்கவில்லை.

சேதன உர விவகாரத்தில் சீனா கடும்போக்கில் நடந்து கொண்டது. அதற்காக செலுத்தப்பட்ட 6.9 மில்லியன் டொலர்களுக்கு உரத்தை வழங்கவும் மறுத்து வருகிறது.

ஆனால், இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள் வரை உதவிகளை வழங்கியது.

ஆனாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அது போதுமானதாக இல்லை.

இவ்வாறான நிலையில், இலங்கையின் கடன் நிலுவைகளைப் பயன்படுத்தியும், தனது தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தியும், அரசியல் குழப்பங்கள் நிறைந்திருந்த சூழலில், சர்ச்சைக்குரிய ‘யுவான் வாங் 5’ என்ற கண்காணிப்புக் கப்பலை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

அந்தக் கப்பலின் இலங்கை வருகைக்கு இந்தியா வெளிப்படையான எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதும், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அதனை நிறுத்தியது.

இது இந்தியாவுக்கும், மேற்குலகத்துக்கும் சவாலானதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கும்- உதவிகளை வழங்கும் நெருங்கிய உறவுகளைப் பேணும், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இதனால் அதிர்ச்சி அடைந்தன.

தங்களின் எதிர்ப்பை மீறி- இலங்கையில் தான் எதிர்பார்க்கின்றவற்றை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் சீனா இருப்பது, குவாட் நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

யுவான் வாங் 5’ கப்பலை சீனா அம்பாந்தோட்டையில் நிறுத்திய அதேவேளை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சொலமன் தீவுகளில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் நிறுத்துவதையும் தடுத்து நிறுத்தியது.

சொலமன் தீவுகள் முன்னர் அவுஸ்திரேலியாவின் செல்வாக்குக்கு உட்பட்டதாகத் தான் இருந்தது.  ஆனால் அண்மையில் சொலமன் தீவுகளுடன் சீனா பாதுகாப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. 

அந்த உடன்பாட்டைத் தடுப்பதற்கு அவுஸ்ரேலியா மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதையடுத்து, சொலமன் தீவுகளில் சீனா தளத்தை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான போதும், சொலமன் தீவுகள் அதனை மறுத்து வருகிறது.

சொலமன் தீவுகளில் சீனா தளத்தை அமைத்தால் அது, அவுஸ்திரேலியாவுக்கு நேரடியான அச்சுறுத்தலாக அமைவதுடன், அமெரிக்காவின் மேற்குப் பகுதி தளங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது.

இந்த நிலையில், அமெரிக்கா மறைமுகமாகவும், சீனா நேரடியாகவும், அழுத்தங்களைக் கொடுத்த போதும், சீனாவுடன் சொலமன் தீவு பாதுகாப்பு உடன்பாட்டை செய்து கொண்டது.

சட்டவிரோத மீன்பிடியைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடலோரக் காவல்படையின் ‘ஒலிவர் ஹென்றி’ என்ற போர்க்கப்பலும், பிரித்தானிய கடற்படையின் ‘எச்எம்எஸ் ஸ்பே’ என்ற போர்க்கப்பலும், விநியோக தேவைகளுக்காக, சொலமன் தீவு துறைமுகத்துக்கு செல்ல முயன்ற போது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அந்தப் போர்க்கப்பல்கள் வேறு  துறைமுகங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பக்கத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் குவாட் நாடுகளின் எதிர்ப்பை மீறி சீனா தன் கண்காணிப்புக் கப்பலை நிறுத்துகிறது. 

இன்னொரு பக்கத்தில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்க, பிரித்தானிய போர்க்கப்பல்களை சொலமன் தீவுகளில் நிறுத்த விடாமல் தடுக்கிறது.

இந்தோ- பசுபிக்கில் சீனா இப்போது ஆக்ரோசத்துடன் செயற்படத் தொடங்கியிருப்பது குவாட் அமைப்புக்கு நேரடியான அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கையின் பலவீனமான அரசியல் சூழலும், பொருளாதார நெருக்கடியும் சீனாவுக்கு இடமளிப்பதாக மாறி விடக்கூடாது என்று குவாட் நாடுகள் உணர்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் சீன கற்கைகளுக்கான சென்னை நிறுவனம் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு தொடர்பான ஒரு கலந்துரையாடலை நடத்தியது.

அதில் உரையாற்றிய இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான லெப்.ஜெனரல் பி.ஆர் சங்கர், இலங்கையில் சீனாவின் தலையீட்டை தடுக்க, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயற்பட முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இரண்டு நாடுகளும் இலங்கையுடன் கொண்டுள்ள ஆழமான உறவுகள் மற்றும் உதவிகளை வழங்கிய நாடுகள் என்ற வகையில் இந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை, விடுதலைப் புலிகள் காலத்தில்  இந்திய அமைதிப்படையை அனுப்பியது போல, இந்தியா மீண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். 

இது இந்தியாவை ஓரங்கட்டுவதற்கு வழிவகுத்தது என்றும், சீனா உள்நுழைவதற்கான இடத்தை உருவாக்கியது என்றும் லெப்.ஜெனரல் பிஆர் சங்கர் தெரிவித்திருக்கிறார்.

புது டில்லியில் குவாட் நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய சந்திப்பின் போதும், இலங்கையின் அரசியல் மற்றும், பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டிருக்கின்றது.

ஆனால் அது பெரும்பாலும் நிதியுதவிகளைக் கொண்டு இலங்கையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான உத்தியாக இருக்குமே தவிர, பாதுகாப்பு ரீதியாகவோ, உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதாகவோ இருக்காது என்றே கருதப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை உறுதிப்படுத்துவதில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளால் தீர்க்கமான பங்கை வகிக்க முடியும் என்பதே, சர்வதேச இராஜதந்திரிகளின் கருத்தாக உள்ளது.

இலங்கை விவகாரத்தில் குவாட் நாடுகள் அல்லது மேற்குலக நாடுகள் முடிவுகளை எடுக்கும் போது, சீனாவை மனதில் கொண்டே, திட்டமிடல்களை  செய்ய முனைகின்றன.

ஆக, சீனா தான் இப்போது உலகின் மையப் புள்ளியாக மாறுகிறது.  தெரிந்தோ தெரியாமலோ, குவாட் நாடுகள் அதற்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04