மக்கள் ஆணையைக்கொண்ட அரசின் தேவை குறித்து வலியுறுத்தும் நாணய நிதியம்

07 Sep, 2022 | 01:21 PM
image

    இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருட காலத்துக்கு 290 கோடி அமெரிக்க டொலர்களை கடனுதவியாக  பெறுவதற்கு கடந்தவாரம் கொழும்பில் காணப்பட்ட அலுவலர்கள் மட்ட பூர்வாங்க உடன்பாடு குறித்து அரசாங்கம் மகிழ்ச்சியடைந்திருக்கிறது.

    மக்களுக்கு சிறப்பான வாழ்வைக் கொடுப்பதற்கு அவசியமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு இருக்கும் பற்றுறுதிக்கு இந்த உடன்பாடு ஒரு அத்தாட்சி என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த அதேவேளை படுமோசமான வீழ்ச்சியைக் கண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இது ஒரு ' முக்கியமான மைல்கல் ' என்று பிரதமர் தினேஷ் குணவர்தன கூறினார். 

    ஆகஸ்ட் 24 கொழும்பு வந்த நாணய நிதியத்தின் தூதுக்குழு ஒருவாரகாலமாக  நடத்திய மும்முரமான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு காணப்பட்ட உடன்பாடு பொருளாதார மீட்சிக்கான நீண்ட பாதையில் ஒரு முதற்படி மாத்திரமே என்றும் வழமைநிலையின் ஒரு சாயல் கூட தோன்றுவதற்கு முன்னதாக பல்வேறு தடைகளை இலங்கை தாண்டவேண்டியிருக்கும்  என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.நாணய நிதியத்தின் கடனுதவியின் முதல் தொகுதியை பெறுவதற்கு முன்னதாக அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளை தூதுக்குழு முன்வைத்திருக்கிறது.

   இந்த  உடன்பாட்டை நாணய நிதியத்தின் முகாமைத்துவமும் பணிப்பாளர்கள்  சபையும் அங்கீகரிப்பதற்கு முன்னதாக இலங்கை கடனுதவியைப் பெற்ற நாடுகளுடனும் நிறுவனங்களுடனும்  பிணைமுறிகளைக் கொள்வனவு செய்தவர்களுடனும்  கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து கடன் நிவாரணத்தைப் பெறவேண்டும் ; பன்னாட்டு பங்காளிகளிடம் இருந்து அவசர மேலதிக நிதியுதவியையும் பெறவேண்டும் ; பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கு உறுதியான செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் ;ஊழலுக்கு எதிரான பலம்பொருந்திய சட்டக் கட்டமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  

   

இவை உட்பட நிதி விவகாரங்களைக் கையாளுவதில் ஔிவுமறைவற்ற தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான வேறு பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. உடன்பாட்டை எட்டுவதற்கு பட்ட கஷ்டங்களை விடவும் அதற்கு பின்னர் கடனுதவியை பெறுவதற்கு அரசாங்கம் கூடுதலாக  கஷ்டப்படவேண்டியிருக்கும் என்பதையே  இது காட்டுகிறது.

 நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் சபையின் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் 290  கோடி டொலர்களும் நான்கு வருட காலத்தில் 8 தொகுதிகளாக வழங்கப்படும். ஒவ்வொரு தொகுதியின் கொடுப்பனவுக்கு முன்னதாகவும் பணிப்பாளர்கள் சபையின் அங்கீகாரம் பெறப்படவேண்டும்.நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் பொருளாதார மறுசீரமைப்பை அரசாங்கம் முன்னெடுப்பதில் காண்பிக்கக்கூடிய முன்னேற்றத்தைப் பொறுத்தே கொடுப்பனவுகள் அமையும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

   நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட்டின் பெருவாரியான முன்மொழிவுகள் குறிப்பாக வரி அதிகரிப்புகள் மற்றும் அரசாங்க சேவை மறுசீரமைப்பு தொடர்பானவை ஏற்கெனவே கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்து சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைச் செலவு உயர்வினால் திணறிக்கொண்டிருக்கும்  மக்கள் மீது  மேலும் சுமையை ஏற்றுகின்றன. இந்த முன்மொழிவுகள் நாணய நிதியத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் அமைந்தவை என்பதில் சந்தேகமில்லை.

    உடன்பாட்டின் பிரகாரம்  கடனுதவியைப் பெறுவதற்காக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு  செலவுக்குறைப்பு என்ற பெயரில் அடுத்துவரும் மாதங்களில் அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் மக்களை மேலும் வதைக்கக்கூடிய பேராபத்து இருக்கிறது.

   இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாணய நிதியத்தை நாடுவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியிருக்கவில்லை.  மக்களின் இடர்பாடுகளைத் தணிப்பதற்கு பயனுறுதியுடைய மாற்றுத்திட்டம் எதையும் முன்வைக்கக்கூடிய ஆற்றல் எதிரணியிடமும்  இல்லை.  அதனால், தங்கள் கொள்கை நிலைப்பாடுகளின் வழியில் (அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்தில் உள்ள )நாணய நிதியத்தை நாடுவதை  வழமையாக எதிர்க்கும்  பல அரசியல் சக்திகள் கூட எதிர்ப்பை பெரிதாக வெளிக்காட்டவில்லை.ஆனால்,நாணய நிதியத்தின் கடனுதவி மீட்சிக்கு உதவக்கூடிய நிவாரணமா அல்லது மக்களை மேலும் வதைப்பதற்கு வழிவகுக்கக்கூடிய பொறியா என்பது  நாளடைவில் தெரியவரும்.

   நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கப்போகும் மேற்படி கடனுதவி இவ் வருடம் இதுவரையில் இந்தியா இலங்கைக்கு கடனாக,தொடர்கடனாக,நாணய பரிமாற்றமாக வழங்கிய உதவிகளை விடவும் எவ்வளவோ குறைவானது என்பது  கவனிக்கவேண்டியதாகும்.அதனால் இதில் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை.ஆனால் உடன்பாடு இலங்கை ஏற்கெனவே கடன் பெற்ற  நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பை முன்னெடுத்து கடன்களை மீளச்செலுத்துவதற்கு நிலைபேறான ஏற்பாடுகளை வகுக்க வசதியாக இருக்கும் என்பது அனுகூலமான அம்சமாகும்.பல நாடுகள் கடன் மறுசீரமைப்பு குறித்து பேசுவதற்கு முன்னதாக நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறு இலங்கையை வலியுறுத்திக் கேட்டிருந்தன.

   கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாடொன்றை (செப்.1) நடத்திய நாணய நிதியத்தின் தூதுக்குழு இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, மீட்சிக்கான வழிமுறைகள் குறித்து அளித்த விளக்கங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு  மத்தியில் அரசியல் உறுதிப்பாடு தொடர்பில் தெரிவித்த கருத்து கவனத்தைத் தூண்டுவதாக இருக்கிறது.

  சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு மக்களின் ஆணையைக் கொண்ட அரசாங்கம் ஒன்றுக்கான தேவை இருக்கிறது.சீர்திருத்தங்களை ஆதரித்து உள்வாங்கக்கூடியதாக சமுதாயம் இருக்கவேண்டும் என்று தூதுக்குழுவின் தலைவரான பீற்றர் புறூவர் வலியுறுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

   ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு அத்தகைய ஆணை இல்லை என்பதால் தேர்தலின் மூலம் புதிய ஆணையொன்றை மக்களிடம் இருந்து பெற்று பதவிக்கு வரக்கூடிய அரசாங்கத்தினால்தான் சீர்திருத்தங்களை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்ற அர்த்தத்தில் அவர் அவ்வாறு கூறினாரா அல்லது மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து அவர்களின் ஒத்துழைப்புடன் தற்போதைய அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறினாரா என்பது தெளிவில்லை. ஆனால்,மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் எதிர்நோக்கப்படக்கூடிய பிரச்சினைகளை உணர்ந்தவராக அவர் அந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

   அரசியல் உறுதிப்பாடு மற்றும் மக்களின் ஆணை என்று வரும்போது தற்போதைய அரசாங்கம் மிகவும் பலவீனமான நிலையில்தான் இருக்கிறது.2019 ஜனாதிபதி தேர்தலில் மக்களின் ஆணையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ச மக்கள் கிளர்ச்சியின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி பதவியைத் துறந்தார். 2020 பாராளுமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்று பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின்  பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அமைச்சர்களும் அதே மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவி விலகினர்.

   கோட்டாபய பதவியில் இருந்த வேளையில் கடந்த ஏப்ரில் மாதத்திலேயே சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றக்குழு தற்போது மூன்றாக பிரிந்து நிற்கிறது.அதனால் 2020 மக்கள் ஆணை அடிப்படையில் வலுவிழந்துவிட்டது என்ற வாதம் அரசியலமைப்பு அடிப்படையில் பொருத்தமற்றதாக இருந்தாலும் அரசியல் நியாயப்பாட்டின் அடிப்படையில் முற்றாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதேயாகும்.

   அதேவேளை, கடந்த மார்ச் மாதம் தொடக்கம்  அரசாங்கத்தில் இருந்து பெருமளவு உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தரப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100 க்கும் சற்று அதிகமானதாகவே இருக்கிறது.இதனால்  நாணய நிதியத்துடன் இணங்கிக்கொண்ட சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் நாளடைவில் ஜனாதிபதி விக்கிரமசிங்க நெருக்கடிகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்பதே அரசியல் அவதானிகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.

  அரசியல் உறுதிப்பாட்டின் சாயல் ஒன்றைக் காட்டுவதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகள் இதுவரையில் பயனளிக்கவில்லை.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிபெறுவதற்கு பொதுவேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கும் எதிரணி கட்சிகள் முன்வருவதாக இல்லை.

   விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி பதவியையும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களை பெருமளவில் கொண்ட அரசாங்கத்தையும் மக்கள் ஆணையின் இயல்பு திரிந்த வெளிப்பாடுகளாக நோக்கும்  எதிரணியினர்  புதிய தேர்தல்களை குறுகிய காலத்தில் நடத்தவேண்டும் என்று கோருகிறார்கள்.அடுத்த தேர்தல்களுக்கு தயாராகும் முயற்சிகளாக புதிய கூட்டணிகள் உருவாகிக்கொண்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேசிய தேர்தல்களை மாத்திரமல்ல உள்ளூராட்சி தேர்தல்களைத் தானும் சந்திக்கக்கூடிய நிலையில் நாடு இல்லை என்பது வெளிப்படையானது.

  இத்தகைய பின்புலத்தில், நிதிக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் இருக்கின்ற ஆற்றலை மதிப்பீடு செய்யும் சர்வதேச நிறுவனமான 'பிற்ச் ரேட்டிங் '(Fitch Ratings) இலங்கை நிலைவரம் குறித்து விடுத்திருக்கும் எச்சரிக்கை மிகுந்த கவனத்துக்குரியதாகிறது.

  " இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் அலுவலர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டியிருக்கின்ற போதிலும், படிப்படியாக அதிகரித்துவரும் அரசியல் உறுதிப்பாடின்மை உடன்படிக்கையின் உண்மையான வாய்ப்புக்களை அடைவதை நோக்கிய எந்தவொரு  முன்னேற்றத்தையும் இடையூறுக்குள்ளாக்கக் கூடும். 

  " அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவர்கள் முக்கியமான நிதித்துறை மற்றும் ஆட்சிமுறை சீர்திருத்தங்களுக்கு எதிராக எதிரணியுடன் கைகோர்த்து செயற்பட ஆரம்பித்தால், கடன் மறுசீரமைப்பு சாத்தியமானாலும் கூட நாணய நிதியத்துடனான உடன்பாடு இடர்பாட்டுக்கு உள்ளாகலாம்."

  அதனால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் ஆணையைக் கோருவதற்காக புதிய பாராளுமன்ற தேர்தலுக்கு தவிர்க்கமுடியாமல் செல்லவேண்டிய நிர்பந்தம் வருமோ என்று சில அவதானிகள் கேள்வியெழுப்புகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...

2024-04-15 14:15:52
news-image

நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'

2024-04-15 09:49:17
news-image

பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...

2024-04-10 15:23:29
news-image

கச்சதீவும் மோடியும்

2024-04-08 16:04:18
news-image

காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி

2024-04-08 10:10:33
news-image

யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...

2024-04-05 17:47:10
news-image

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான தேசிய வேட்பாளர்...

2024-04-04 13:20:01
news-image

நாமலின் நியமனத்தால் கடும் விரக்தியில் சமல்

2024-04-01 11:03:34
news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14