(ஆர். ராம், எம். எம். மின்ஹாஜ்)

ஆவா குழுவுடன் தொடர்புடையோர் என்ற குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மேலும் இராணுவத்தினருக்கு தொடர்பேதும் உள்ளதா என்பது  குறித்து விசாரணை செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

அதேநேரம் இராணுவத்தினருக்கு  ஆவா குழுவை வழி நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் ஜே.வி.வி. தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர  திஸாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘ஆவா’ குழு என்பது கப்பம், கொள்ளை போன்ற குற்றச் செயலுடன் தொடர்புடைய கும்பலாகும். வடக்கில் இளைஞர்களினால் முன்னெடுக்கப்படும் ஒரு கும்பலாகும். ஆவா குழுவினை வழி நடத்துவதற்கு இராணவத்திற்கு எந்தவொரு தேவையும் கிடையாது. ‘ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களில் இதுவரை கைது செய்யப்பட்ட  நபர்களில் ஒரு இராணுவ வீரரும் உள்ளார். அவர் தமிழர் ஒருவர் ஆவார். அவர் தற்போது சேவையில் இல்லை.  இருந்த போதிலும் ஆவா குழுவுடன் மேலும் இராணுவ வீரர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை செய்து வருகின்றோம்.

எனவே தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ‘ஆவா’ குழு என்பது இராணுவத்தினர் வழி நடத்தும் குழு அல்ல. ‘ஆவா’ குழுவில் இராணுவ வீரர் ஒருவர் மாத்திரமே சம்பந்தப்பட்டுள்ளார்.