அவமானங்கள், துன்பங்களால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்ட ஏஞ்சலின் கதை !

Published By: Vishnu

07 Sep, 2022 | 03:08 PM
image

நேர்காணல் - எஸ்.காயத்ரி

“வீட்டுக்கு தெரியப்படுத்த பாடசாலை ஆசிரியர் ஒருவரே என்னை அழைத்துச்சென்றார். எனக்கு பயமாக இருந்தது. போகும் வழியிலேயே தற்கொலை செய்து கொள்ளலாமா எனவும் தோன்றியது“ என சோகமான தொனியில் கூறுகிறார் ஏஞ்சல் குயின்ரஸ்.

“அப்பாவுக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சமும் எனக்குள்... ஆனால் ஆசிரியர் அம்மாவிடமே  சொன்னார். அம்மா இந்த விடயத்தினை கையாண்ட விதம் மிகவும் வித்தியாசமானது. குறிப்பிட்ட சில காலம் வரைக்கும் அம்மா இந்த விடயத்தினை அப்பாவிடம்  தெரியப்படுத்தவில்லை. மறு நாள் நானும் அம்மாவும் பாடசாலைக்குச் சென்றோம்.”

அதிபர் அம்மாவிடம் கூறினார் “ உங்கள் பிள்ளையை கச்சேரிக்கு மனநல ஆலோசகரிடம் அழைத்துச்செல்லுங்கள்” என்று.

கச்சேரியில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். மனிதராக பிறந்த இவரின் வாழ்க்கையும் சாதாரண ஏனைய மனிதர்களைப்போன்றே ஆரம்பித்தது. 

கல்வியை தொடரும் பருவத்தில் பல அவமானங்களையும் ஏக்கங்களையும் நரக வாழ்க்கையையும் அனுபவித்த ஏஞ்சல் என்றவளின் வாழ்க்கை பயணத்தின் கதையே இது....

ஆம்... ஏஞ்சல் என்ற இவர் ஒரு திருநங்கை. திருநங்கையாக பிறந்தது ஏஞ்சலின் தவறா ? அல்லது இவரை வித்தியாசமாக பார்ப்பது சமூகத்தின் தவறா ? என்பது புரியா புதிராகவே இருக்கின்றது.

தற்போது யாழ். திருநர் வலையமைப்பின் இயக்குனராக செயற்பட்டு வரும் ஏஞ்சல்.  முதன் முதலில் யாழ்ப்பாணத்திலே திருநர் வலையமைப்பை உருவாக்கியதாக கூறினார்.  

சரி...வைத்தியசாலைக்குச் சென்ற ஏஞ்சலுக்கு அடுத்த நடந்தது என்ன ? என்பது குறித்து நாம் அவருடன் மேற்கொண்ட உரையாடலில் பார்க்கலாம்.

“வைத்தியசாலையில் உள்ள மருத்துவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் பூரண தெளிவு இல்லாமல் இருந்தது.

நான் எனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றம் தொடர்பில், தேடி கற்ற விடயங்களை வைத்து, யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபலமான மனநல மருத்துவரிடம் தெளிவுப்படுத்தினேன், விவாதித்தேன்.

பிறகு குறித்த மருத்துவர் எனது அம்மாவையும், அதிபரையும் அழைத்து, இந்த பிள்ளையை பாடசாலையில் படிக்க விடலாம், எவ்வித பிரச்சினையும் இல்லையென கூறினார். நான் மாற்றமடைவது என்னுடைய வியூகம் என அவர் தெரிவித்தார்.

வைத்தியர் என்னுடைய விரும்பம் என்று கூறியபடியால் வீட்டில் அப்பா திட்டும்போது இவை என்னுடைய விருப்பம் என விவாதிப்பேன்.

இதனையடுத்து வீட்டிலும், பாடசாலையிலும் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்தன. தம்பிமார்கள் அடிப்பார்கள். தம்பிகளின் நண்பர்கள் கேலி செய்யும் போது அந்த கோபத்தையும் என்னிடமே காட்டுவார்கள்.

அப்பாவுக்கு தெரிந்தவர்களும் என்னைபற்றி பேசுவதனால், கேலி செய்வதனால் அப்பா அம்மா இருவரும் முரண்பட ஆரம்பித்தார்கள்.

மேலதிக வகுப்புகளுக்கு தரும் பணத்தையும் வீட்டில் நிறுத்திவிட்டார்கள். ஏனெனில் அந்த பணத்திலேயே நான் எனக்கு தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்வேன்.

நான் வைத்தித்திருக்கும் மருந்துகளை தேடி அவற்றையும் வீசிவிடுவார்கள். வெளியில் போவதற்கும் அனுமதிப்பதில்லை. இதன்போது என்னால் அழ மட்டுமே முடியும்.

இதன்பிறகு நான் ஹோர்மோன் தெரபி (hormone therapy) மருத்துவர் ஒருவரிடம் கொழும்பில் சிகிச்சைபெற்று வந்தேன். பாடசாலையிலும், வீட்டிலும் பொய்களை கூறியே இந்த சிகிச்சைகளை பெற்றுவந்தேன்.

சரி ஏஞ்சல் நீங்கள் எத்தனை வயதில் உங்களை ஒரு பெண்ணாக உணர்ந்தீர்கள் என்பதை கூறுங்களேன்... என அவரிடம் கேட்டபோது,

”எனக்கு 8 வயதாகும்போது நான் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேன். பெண்களுடன் பேசுவதற்கே பிடிக்கும். பெண்களின் ஆடைகளை அணிவதற்கே விருப்பம். எனது பாடசாலை நண்பர்களுக்கு இது பற்றி தெரியும். இதை பற்றி யாரிடம் சொல்வது என்றுகூட தெரியவில்லை. பயமாக இருந்தது.

அப்போது நான் திருநங்கை, திருநம்பிகளை பற்றி  அறிந்திருக்கவில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே வெளிப்படுத்த ஆரம்பித்தேன்.

ஆனால் படிக்கவேண்டும், படித்தால்தான் சமூகத்தில் வாழமுடியும் என்றொரு எண்ணப்பாடு எனக்குள் வந்தது. ஏனென்றால் திருநங்கை என்கின்றபொழுது சமூகத்தின் பார்வை வித்தியாசமானது.

நான் கா.பொ.த உயர்தரத்திற்கு சென்ற பிறகே, சில நண்பர்களுடன் இணைந்து திருநங்கை என்றால் என்ன என்பதைப்பற்றி இணையத்தில் தேடிப்பார்த்தேன்.

அதன்பிறகே, எங்களால் மாற முடியும் என்பதனை அறிந்து மருத்துவரின் ஆலோசனைக்கமைய ஒரு சில மருந்துகளையும் பெற்றுக்கொண்டேன்.

இந்தவிடயம் முதலில் பாடசாலைக்கு தெரியவந்தது. பின்னர் பாடசாலை மூலம் வீட்டுக்கு தெரியவந்தது. இதுமிக்பெரிய பிரச்சினையாக தோற்றம்பெற்றது.

அன்று முதல் பாடசாலை வாழ்க்கை முடியும் வரை நரக வாழ்க்கையையே வாழ்ந்து வந்தேன். நானொரு திருநங்கை என்பதனை எனது பாடசாலை அறிந்தவுடன், படிப்பதற்கு இடமளிக்கவில்லை. அனைத்து விடயங்களிலிருந்தும் ஒடுக்கப்பட்டேன். குறைகளை மட்டுமே கூறினார்கள்.

அதேபோன்று வீட்டிலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தேன். வீட்டிலுள்ளவர்கள் ஏற்றுக்கொண்டாலும், சுற்றுச்சூழல் விட்டுவைக்கவில்லை.

அதுமட்டுமா, இந்த சமூகத்திற்கு நானொரு திருநங்கை என்பது தெரியவந்ததுடன், பல்வேறு ஒடுக்குமுறைகளை எனக்குள் திணித்தார்கள்.

பாடசாலை, வீடு, சமூகம் என்ற இந்த 03 அம்சங்களிலும் பல்வேறு துயரங்களை அனுபவித்தேன். இந்த 03 தடைகளையும் தாண்டியே நான் எனது கற்றல் நடவடிக்கைகளையும் நிறைவுசெய்தேன்.

நான் எனது  ஒட்டுமொத்த சுதந்திரத்தையும் இழந்து, ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்தேன். என்னடா இந்த வாழ்க்கை என்று தோன்றியது” என ஏஞ்சல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தான் பிறந்தபோது பெற்றோர் வைத்த பெயரை குறிப்பிட விரும்பாத ஏஞ்சல், தனக்கு  ஏஞ்சல் குயின்ரஸ் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்ற கதையையும் கூறினார்.

சமூகம் என்னை கேலிக்கைக்காக ஏஞ்சல் என அழைத்தது. அந்தபெயர் எனக்கு பொருத்தமாகவும் இருந்தது. எவவே தான் ஏஞ்சலுடன் குயின்ரஸை சேர்த்து எனது பெயராக வைத்துக்கொண்டேன்.

“இரண்டாவது முறை காபொத உயர்தர பரீட்சை எழுதுவதற்காக நான் எனது பொதுச்சான்றிதழை மாற்றினேன்.

அதன்போதே நான் என்னை பெண்ணெனவும், எனது பெயரை ஏஞ்சல் எனவும் மாற்றிக்கொண்டேன்” என சிறு புன்னகையுடன் கூறினார்.

வாழ்கை முழுவதும் பல்வேறு கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து மன அழுத்தத்திற்கு உள்ளாகிய ஏஞ்சல், இதுவும் கடந்து போகும். இந்த வாழ்க்கை நிச்சியமாக ஒரு நாள் மாறும் என தனக்குத் தானே நம்பிக்கைகொடுத்து அவரின் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார்.

போராட்டத்திற்குரிய வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிக்கும்  ஏஞ்சலுக்கு பாடசாலைக்கு முறையாக சமூகமளிக்க முடியாமலும் போனது.

 இதன்போது அவரின் ஒருசில நண்பர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவிசெய்ததையும் அவர் கூற மறக்கவில்லை.

எம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சம்பவமொன்று பதிவாகியிருக்கும். அதுவும் மறக்க முடியா வேதனைக்குறிய சம்பவம் என்றால்....  அவ்வாறு ஏஞ்சலின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களில் ஒரு சம்பவத்தை பதிவுசெய்தார்.

”நான் பாடசாலையில் சிறப்பு புள்ளிகளை பெற்றதனால், சிரேஷ்ட மாணவ தலைவர்களுக்கான பதவி எனக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பிருந்தது.

இதன்போது ஒருசில ஆசிரியர்கள், அந்த பதவியை பெற்றுகொள்வதற்கான தகுதி எனக்கில்லையென அதனை நிராகரித்தார்கள்.

என்னை கேவலமாகவும், நான் தீய செயலில் ஈடுபட்டதைப் போன்றும், அருவருப்பாகவும் பார்த்தார்கள். எனக்கு சிரேஷ்ட மாணவ தலைவர்களுக்கான பதவியை தருவதற்கு மறுத்தார்கள்.

நான் ஒரு திருநங்கை என்று தெரிந்ததும், எனக்குக் கிடைக்கவிருந்த அனைத்து வாய்ப்புக்களையும் இல்லாமல் செய்தார்கள். அதனை என்னால் மறக்கவே முடியாது. என்னை அடித்தார்கள்.... அவமானப்படுத்தினார்கள்..... கேலி செய்தார்கள்....” என தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

ஏஞ்சல் நீங்கள் திருநர் வலையமைப்பை உருவாக்கி அதில் இயக்குநராக செயற்பட்டு வருவதாக கூறினீர்கள்... எதற்காக இந்த திருநர் வலையமைப்பு உருவாக்கப்பட்டது....  இதில் எவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.. என்பதை பற்றி நாம் அவரிடம் வினவினோம்.

“நான் குறிப்பிட்ட வயதிலிருந்தே இந்த சமூகத்தில் பல்வேறு, பிரச்சினைகளையும், ஒடுக்குமுறைகளையும் அனுபவித்தேன். அனுபவித்துக்கொண்டு இருக்கின்றேன்.

எனவே, எதிர்காலத்தில் இனிவருகின்ற திருநர்கள் முகங்கொடுக்கும் சவால்களை சிந்தித்தே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

திருநர்கள் சார்ந்தும் LGBTQIA+ சமூகம் சார்ந்தும் பேச கூடிய களமாகவே திருநர் வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் எமது நண்பர்களுடன் வீதியில் நின்றுகூட பேசமுடியாத நிலையில் இருக்கின்றோம், ஏனென்றால் இந்த சமூகத்தின் பார்வை பொல்லாதது. வன்முறை சம்பவங்கள் நடப்பதற்குக்கூட வாய்ப்பிருக்கிக்கின்றது.

ஆதலாலே, நாம் சிந்தித்தோம். எங்களுக்கான ஒரு களத்தை உருவாக்க வேண்டும். நாங்கள் சந்திப்பதற்கான ஒரு வாய்பை ஏற்படுத்த வேண்டும். எங்களுக்குள்ளும் பல்வேறு திறமைகள் உண்டு. இந்த திறமைகளை வெளிக்கொணர வேண்டும்.

திருநர் வலையமைப்பை உருவாக்கும்போது ஆரம்பத்தில் 05 பேர் மட்டுமே இருந்தார்கள்... இந்த சமூகம் ஆண், பெண் என்ற கோணத்திலிருந்து வெளியில் வந்து, அதையும் தாண்டி ஒரு சமூகம் இருக்கின்றது என்பதை உணர வேண்டும்.

பால், பால்நிலை, பாலியல் ஈர்ப்புத்தன்மை இருக்கின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருநர் வலையமைப்பு உருவாக்கப்பட்டது.”

ஏஞ்சலினால் உருவாக்கப்பட்ட திருநர் வலையமைப்பு தற்போது யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளிலும் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

“ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், தற்போது வட மாகாணம், கிழக்கு மாகாணம்  போன்ற பகுதிகளிலும் திருநர் வலையமைப்பு இயங்கி வருகின்றது.

யாழ் திருநனர் வலையமைப்பினூடாக, திருநர்களுக்கு சுயதொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கின்றோம். அதாவது 15 பேருக்கு, தையல், அழகுக்கலை போன்ற சுயதொழிலை பெற்றுக்கொடுத்து சமூகத்துடன் இணைந்து செயற்படும்வகையில் யாழ். திருநர் வலையமைப்பு செயற்பட்டு வருகின்றது.

திருநர்கள் தொடர்பான விழிப்புணவர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எமது வலையமைப்பு செயற்பட்டுக்கொண்டு வருகின்றது.

நான் திருநர் வலையமைப்பை ஆரம்பித்தபோது சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டுமென்பதே எனது நோக்கமாக இருந்தது. நாமும் இந்த சமூகத்திலேயே வாழ்ந்துவருகின்றோம். எமக்கான இடமும் இந்த சமூகத்தில் இருக்க வேண்டும்.

LGBTQIA+ சமூகத்தினர் தனது உரிமைச்சார்ந்து குரல் கொடுக்கும்போது பொது சமூகத்தின் ஆதரவும் தமக்கு கிடைத்ததையும் ஏஞ்சல் கூறுவதற்கு தவறவில்லை.

என்னை, பெற்றோர்கள், ஆசிரியர்கள், இந்த சமூகம் ஏற்றுக்கொண்டு இருந்தால் நான் என்னுடைய தேவைகளுக்கு மட்டுமே கவனம் செலுத்தியிருப்பேன் எனவும், ஒடுக்குமுறைகளே தான் என்னை ஒரு சமூக ஆர்வலராக மாற்றியது... எனவும் கூறிய ஏஞ்சல் தனக்கு தேவையான அனைத்து சிகிச்சை செலவுகளையும், யாருடைய உதவியும் ஒத்தாசையும் இன்றி, தானே பார்த்துக்கொண்டதாகவும் கூறினார்.

இந்த சமூகத்தில் ஒரு சிலர், LGBTQIA+ சமூகத்தில் TRANSGENDER (திருநங்கை, திருநம்பி) களை ஏற்றுக்கொள்ள தயாராகயிருந்தாலும், ஓரினச்சேர்க்கை கொண்டவர்களை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லையே.. அதனை நீங்கள் எவ்வாாறு பார்க்கின்றீர்கள்?

“அனைவருமே மனிதர்கள்... காதல், அன்பு என்பது அவரவர்களின் சுதந்திரமாகும்.

நான் ஒரு திரு நங்கை. எனது பாலியல் ஈர்ப்பு என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் ஒரு LESBIAN ஆகக்கூட இருக்கக்கூடும். அது என்னுடைய உரிமை, எனது சுதந்திரம்.

யார், யார் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்பதை யாராலும் வற்புறுத்த முடியாது.

அன்பு அன்பு தான்.. அதனை வகைப்படுத்த முடியாது. அனைவருடைய உணர்வுகளையும் காதலையும் மதிக்க வேண்டும் என கூறிய ஏஞ்சல் (LOVE IS LOVE) என நிறைவு செய்தார்.

எவ்வித குறையுமின்றி பிறந்த நாம், ஒரு சில பிரச்சினைகளை கண்டு, அஞ்சுகின்றோம், விலகிச்செல்கின்றோம், ஏன் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாது தற்கொலை செய்துக்கொள்கின்ற சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

ஆனால் ஏஞ்சலின் வாழ்க்கையை பாருங்கள்... எத்தனை போராட்டங்கள், எத்தனை அவமானங்கள், எத்தனை தடைகள், ஒடுக்குமுறைகள்..

அத்தனையும் தாண்டி தனது வாழ்கை பயணத்தில் ஜெய்க்க விரும்புகின்றார் ஏஞ்சல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...

2024-04-15 14:15:52
news-image

நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'

2024-04-15 09:49:17
news-image

பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...

2024-04-10 15:23:29
news-image

கச்சதீவும் மோடியும்

2024-04-08 16:04:18
news-image

காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி

2024-04-08 10:10:33
news-image

யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...

2024-04-05 17:47:10
news-image

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான தேசிய வேட்பாளர்...

2024-04-04 13:20:01
news-image

நாமலின் நியமனத்தால் கடும் விரக்தியில் சமல்

2024-04-01 11:03:34
news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14