9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !

Published By: Digital Desk 3

05 Sep, 2022 | 04:41 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேல், சப்ரகமுவ மற்றும் வட-மேல் மாகாணங்களிலும் , கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றரை விட அதிக மழைவீழ்ச்சி பெய்யக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதே வேளை தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் , எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் அத்தனகளு, களு, களனி, கிங் மற்றும் நில்வலா ஆகிய கங்கைகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே இவற்றை அண்மித்த பிரதேசங்களில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குதிசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 - 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

எனவே புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவர்களும் அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்