ஆப்கானுக்கு பதிலடி கொடுத்த இலங்கை 4 விக்கெட்டுகளால் அபார வெற்றி

03 Sep, 2022 | 11:48 PM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றின் ஆரம்பப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை 4 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டியது.

ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் முதல் சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இலங்கை உரிய பதிலடி கொடுத்தது.

பங்களாதேஷ் அணியுடனான தீர்மானம் மிக்க ஏ குழுவுக்கான முதல் சுற்று போட்டியில் அதிர்ஷ்டத்துக்கும் கடும் சவாலுக்கும் மத்தியில் வெற்றியீட்டிய இலங்கை, ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் மிகத் திறமையாக விளையாடி வெற்றியீட்டியது.

சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட இந்தப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ். தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ ஆகியோரது திறமையான துடுப்பாட்டங்கள் இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 62 ஓட்டங்களைக் குவித்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டமிழந்த குசல் மெண்டிஸ் 19 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன் 36 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 80 ஓட்டங்களாக இருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 35 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.

இந்த சுற்றுப் போட்டியில் 3ஆவது தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய சரித் அசலன்க 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

துடுப்பாட்ட வரிசையில் தன்னை உயர்த்திக்கொண்ட அணித் தலைவர் தசுன் ஷானக்க நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தனுஷ்க குணதிலக்கவும் பானுக்க ராஜபக்ஷவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

தனுஷ்க குணதிலக்க 20 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து வெற்றி இலக்குக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பானுக்க ராஜபகஷ அவசரத் துடுக்கை காரணமாக ஆட்டமிழந்தார். 14 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன ஆட்டமிழக்காமல் 5 ஓட்டங்களையும் பெற்று இலங்கையை வெற்றி அடையச் செய்தனர்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

குறிப்பாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 45 பந்துகளில் 6 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றார்.

13 ஓட்டங்களைப் பெற்ற ஹஸ்ரத்துல்லா ஸஸாயுடன் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த குர்பாஸ் 2ஆவது விக்கெட்டில் இப்ராஹிம் ஸத்ரானுடன் மேலும் 93 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

இப்ராஹிம் ஸத்ரான் 40 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட நஜிபுல்லா ஸத்ரான் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆரம்ப பந்து வீச்சாளராக பயன்படுத்தப்பட்ட சுழல்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 29 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

சுப்பர் 4 சுற்றில் இன்னும் ஒரு வெற்றியை சிறப்பான ஓட்ட வேகத்துடன் இலங்கை ஈட்டுமாக இருந்தால் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான அதன் வாய்ப்பு அதிகரிக்கும்.

சுப்பர் 4 சுற்றில் இந்தியாவை 6ஆம் திகதியும் பாகிஸ்தானை 9அம் திகதியும் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை நடைபெறவுள்ள சுப்பர் 4 போட்டியில் மோதவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22