‘இந்திய ஒற்றுமை பயணம்’ காங்கிரஸுக்கு பலனளிக்குமா ?

Published By: Digital Desk 5

03 Sep, 2022 | 08:12 PM
image

குடந்தையான்

இந்தியாவின் ஆளுங்கட்சியாக திகழும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக தேர்தல் அரசியலுக்கென ஒரு முகம், ஆட்சி, நிர்வாகத்திற்கென இன்னொருமுகம், ஏனைய கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கென மறுமுகமென பல்வேறு முகங்களுடன் செயற்படுகிறது

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ எனும் கோஷத்துடன் தன் அரசியல் பயணத்தில் ஆதிக்கத்துடன் செல்லும் பா.ஜ.க.விற்கு எதிராக, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ எனும் புதிய கோஷத்துடன் காங்கிரஸ் கட்சி நடை பயணம் ஒன்றை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முன்னெடுக்கிறது. 

இந்த நடைபயணம் அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தலைமையில் நடைபெறுகிறது. செப்டம்பர் 7ஆம் திகதியன்று கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த நடை பயணம் 150நாட்களில், 12 மாநிலங்களை கடந்து, மொத்தம் 3500கிலோமீற்றர் தொலைவிற்கு பயணிக்கவிருக்கிறார்கள். 

மக்களை சந்தித்து, விலைவாசி உயர்வு வேலையில்லா திண்ட்டாட்டம் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தி, பா.ஜ.கவிற்கு எதிராக மேற்கொள்ளும் ‘இந்திய ஒற்றுமை பயணம்’, என்ற நடைபவணி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு பலனை தருமா? தராதா? என்பது தான் தற்போதைய பேசு பொருளாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ தமிழகத்திலிருந்து தொடங்குவதால், அதன் பிரதான கூட்டணி கட்சியான தி.மு.கவின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், தி.மு.க. தலைமையிடனும், தலைமை கழக நிர்வாகிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

இருப்பினும் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ளவிற்கும் ‘இந்திய ஒற்றுமை பயணத்திற்கு’ தி.மு.க. எம்மாதிரியான ஆதரவை வழங்கவிருக்கிறது என்பதனை, தமிழக பா.ஜ.கவும், ஏனைய அரசியல் கட்சிகளும் கண்கொத்தி பாம்பாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. 

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணத்திற்கு’ எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் மறைமுகமாக ஆதரவளிக்க கூடும் தகவல்கள் வெளியாகி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. 

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மேற்கொள்ளும் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ தமிழக அளவில் அக்கட்சிக்கு ஊக்கம் அளித்தாலும், தொடர்ந்து வேறு மாநிலங்களில் பயணிக்கும் போது பல அசம்பாவிதங்களை எதிர்கொள்ள கூடுமென அக்கட்சியினர் கருதுகிறார்கள். 

இந்நிலையில் இந்த ஒற்றுமை பயணத்தை சீர்குலைக்கும் வகையில் அக்கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், ‘ராகுல் காந்தி தகுதியற்ற தலைவர்’ என்று எதிர்மறையான பிரசாரத்தினை தொடர்ந்து வருகின்றார். இதன் மூலம் ராகுல் காந்தியை தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதை பா.ஜ.க. ஒரு உளவியல் உத்தியாக தொடர்ந்து கொண்டு வருகிறது.

மேலும் இந்த இந்திய ஒற்றுமை பயணம், சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் குஜராத்தில் காங்கிரஸிற்கு ஆதரவாக மாற்றம் பெற்றுவிடக்கூடாது என்பதில் ஆளும் பா.ஜ.க. திட்டமிட்டு பல தடைகளை உருவாக்க காய் நகர்த்தி வருகிறது.

இந்நிலையில் குலாம் நபி ஆசாத்தின் விலகல் குறித்தும், அவர் புதிய கட்சி தொடங்குவது குறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், “குலாம் நபி ஆசாத் தவறான முடிவை மேற்கொண்டிருக்கிறார். கடந்த முறை பஞ்சாப் சட்ட பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த அமிர்தர் சிங்கிடம் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி, அவரை அக்கட்சியிலிருந்து விலக்கி தனிக்கட்சி தொடங்க வைத்து, தற்போது அரசியல் அடையாளம் இல்லாதாக்கியுள்ளது. அதேபோன்ற முடிவு தான் குலாம் நபி ஆசாத்திற்கும் ஏற்படும் என்று குறிப்பிடுகின்றனர். 

இந்நிலையில், தேசிய அளவில் சிறந்த அரசியல்வாதிகளாக அறியப்படும் நிதிஷ்குமார், சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், பினரயி விஜயன் போன்றவர்கள் வலிமை மிக்க கூட்டணியை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவோ அல்லது தேர்தலுக்கு பின்பாகவோ ஒருங்கிணைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. 

மக்கள் செல்வாக்கு மிகுந்த எதிர்கட்சித் தலைவர்கள் ஒருமித்த குரலில் பா.ஜ.கவுக்கு எதிராக குரலெழுப்பக்கூடும். அதற்கு ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ ஒரு தூண்டுகோலாக திகழும் என்று நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதேதருணத்தில் காங்கிரஸ், பா.ஜ.கவை விரும்பாத ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை குறிப்பிடுகையில், “இந்தப் பயணம் மக்களுக்கானதல்ல. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தெரிவுச் செய்யப்படவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் கட்சி அரசியல் உத்தியென்று” விமர்சனம் செய்துள்ளனர்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு, மாவட்ட செயலாளர்களின் ஆதரவு என்று பெரும்பான்மையான கட்சி பிரதிநிதிகளின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்தாலும், பன்னீர்செல்வத்திற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. நேரடியாகவும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க. மறைமுகமாகவும் ஆதரவு தெரிவிப்பதால், தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமி மௌனமாக இருப்பதைவிட வேறெந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இயலாத நிலை தொடர்கிறது. 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் பன்னீர்செல்வம், ஆளும் தி.மு.க. தலைமை மீதான தன்னுடைய நட்பினை பயன்படுத்தி, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக நீதியரசர் அருணா ஜெகதீசன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அளித்துள்ள அறிக்கையின் படி, தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் முகாமில் இருக்கும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சசிகலா, மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் மீது விசாரணை நடத்த தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள்.

அதேநேரம், நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசை மையப்படுத்தி மாநில நிதித்துறை அமைச்சர் பி. டி.ஆர்.பழனிவேல் ராஜன், வட இந்திய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் வட இந்திய அரசியல்வாதிகளிடமும், வட இந்திய அரசியல் கொள்கை வகுப்பாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதனால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற மத்திய அரசின் துறைகள், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனை குறிவைத்து இயங்க தொடங்கியிருக்கிறது. 

மாநில கட்சிகளின் வளர்ச்சியை ஓரளவு அங்கீகரித்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் தேசிய அளவில் எழுச்சி பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக திகழ அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளவிருக்கும் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ பலனை அளிக்கும் என்று ஜனநாயகத்தின் மீதும், மத சார்பற்ற கொள்கைகள் மீதும் தீவிரமான ஈடுபாடு கொண்டவர்கள் உறுதியாக தெரிவிக்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்குமா என்பது தான் இப்போதைய கேள்வி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13