நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கும் போதைப் பாவனை : அழிவது மாணவர்கள் அல்ல நமது அடுத்த தலைமுறை

Published By: Vishnu

01 Sep, 2022 | 10:00 PM
image

குமார் சுகுணா

கொழும்பு நகரின் பல பிரதேசங்களில் இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் எந்நேரமும் போதையில் இருப்பதனை பார்த்திருப்போம். குறிப்பாக கடை தெருக்களின் ஓரமாக மயங்கிய நிலையில் பட்டப்பகலிலும் அவர்கள் போதை தலைக்கேரி வீதியிலேயே படுத்து கிடப்பர். சிலர் தெருக்களில் திரிந்துக்கொண்டிருப்பர். கறுத்த உதடுகள், சிவந்த கண்கள் அருகில் சென்றால் குடலை குமட்டும் வாசணை என அவர்களை காணும் போதே போதைப்பொருள் பாவித்திருக்கின்றார்கள் என நாம் கண்டு விடலாம். ஆனால் இது போன்றவர்கள் நகரின் பல பகுதிகளிலும் இருப்பர். இதனால் இதனை யாரும் கண்டுக்கொள்வதில்லை. நமக்கென்ன வென்று கடந்து போகின்றோம். ஆனால் இதனை விட அபாயகரமான நிலை இன்று மலையகத்தில் உருவாகிக்கொண்டிருக்கின்றது என்பதனை நாம் கவனிக்க வேண்டும். இதனை ஏனோவென்று நாம் கடந்து போகமுடியாது.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தை எடுத்து கொண்டால், இங்கு ஒரு நகருக்கு பல மதுபானசாலைகள் இருக்கின்றன. குறிப்பாக அட்டன், தலவாக்கலை  என்று நோக்கினால் தெருவுக்கு தெரு மதுபான சாலைகள் உள்ளன. காலை நேரம், இரவு நேரம் என்று பாராமல் மக்கள் குவியல் குவியலாக எந்நேரமும் மதுபான சாலைகளில் குவிந்து கிடப்பதையும் பார்க்கின்றோம். காலையிலிருந்து கடுமையாக உழைத்தவர்கள் உடல் வலிக்காகவும் குளிருக்கு இதமாகவும் மதுபானம் அருந்துவர் என்று சிலர் இதனை நியாயப்படுத்துவதனை பார்த்திருப்போம்.  ஆயினும் அதிகமான மது பாவனை பல சீரழிவுகளை ஏற்படுத்துவதால் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆயினும், இன்று மதுவுக்கு பதிலாக வேறு போதை பொருள் பாவனைகள் மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. போதைப்பொருள் விற்பனையில் சில அரசியல் பின்னணிகள் , அதிகார பின்னணிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை அதனை தடுக்கும் முயற்சிகள் கைகூடவில்லை என்றே கூற வேண்டும்.  

 அதிலும் பாடசாலை மாணவர்களை குறி வைத்து இந்த  போதை பொருட்கள் வியாபாரம் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. முன்பெல்லாம் பாடசாலைகளுக்கு அருகில் ஐஸ்கிரீம் இனிப்புகள் என்பனதான் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் இன்று ஐஸ் கிரீம்க்கு பதிலாக ஐஸ் போதை பொருள் விற்பனை செய்யப்படுகின்ற நாசகார வேலைகளில் பல சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சா, குடு. ஹெரோயின்  என்பதையெல்லாம் தாண்டி  ‘ஐஸ்’ எனப்படுகின்ற போதைப் பொருளின் பாவனை சமீப காலமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. மாணவர்களுக்கு இவ்வாறான போதைப் பொருளை விற்பனை செய்கின்ற சமூகவிரோதக் கும்பல்களும் காணப்படுவதாகத் தெரியவருகின்றது.

 குறிப்பாக அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, பொகவந்தலாவ உள்ளிட்ட  பிரதேச பெற்றோர்களுக்கு மிக பெரிய பிரச்சினையாக இந்த போதை பொருள் பாவனை அதிகரிப்பு தலைதூக்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ நகரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த போதை பொருளான 100  என்.சி டின்னுடன் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு கைதான போது இந்த விடயம் பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால்  அண்மையில் நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் வெளியிட்ட கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. , ‘’பொகவந்தலாவ பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையால் புற்று நோய்க்கு ஆளாகி உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள பிரபல பாடசாலை ஒன்றில் போதைப் பொருள் பாவனையால் இரண்டு மாணவர்கள் புற்று நோய்க்கு ஆளாகி உயிருக்கு ஆபத்து ஏற்படும் மோசமான நிலைமை உருவாகியுள்ளது.

பாதிக்கப்படும் மாணவர்களோடு நகரங்கள், தோட்டங்களில் உள்ள இளைஞர்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு பிரதேச சபைக்கு இருக்கின்றது’’ என தெரிவித்திருந்தார்.  

மாணவர்களுக்கு போதை பொருளினால் புற்றுநோய் அபாயம் ஏற்படுவது எத்தனை கொடுமை.

இது போன்று போதை பொருள் பாவனையோடு தொடர்புடைய  பல சம்பவங்கள் தற்போது நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவில் இடம்பெறுகின்றன. ஆயினும் இது பெரிதளவில் வெளிவருவதில்லை. பல பாடசாலையில் மாணவர்கள் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கின்ற நிலையிலேயே உள்ளனர்.  பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது வெளிப்படையாக தெரியவந்துள்ளதோடு. தினமும் பாடசாலை மாணவர்களின் புத்தக பைகள் பாடசாலைகளில் சோதனை செய்யப்படவும் செய்கின்றன. சிறுவயது மாணவர்கள் தொட்டு பெரியவர்கள் வரை அனைவரது புத்தக பைகளும் சோதனை செய்யப்படுகின்றன.

பெரிய மாணவர்கள் போதை பாவனையில் ஈடுபடலாம்.  அதனால் அவர்களின் பைகள் சோதிக்கப்படலாம். ஏன் சிறிய மாணவர்களின் பைகள் சோதிக்கப்படுகின்றன என்ற கேள்வி எழலாம். ஏன் என்றால். சிறிய மாணவர்களின் புத்தக பைகளின் ஊடாக போதைப்பொருட்கள் பாடசாலைகளுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளேயே விநியோகம் செய்யப்பட்ட சந்தர்பங்கள் பல உள்ளதாக கூறப்படுகின்றது.

பாடசாலைகளில் இதற்கென மாணவ குழுக்களும் அதைனை விநியோகிக்க ஒரு மாணவன் தலைவராக செயற்படுவதாகவும் அவர்தான் ஏனோயோருக்கு வழங்குவதாகவும் கூறப்படுகின்றது.  

தற்போது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து  கஞ்சா ,  குடு மற்றும் இன்றி ஐஸ் உள்ளிட்ட போதை பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கொழும்பில் கிடைக்கின்ற அத்தனை  போதைப்பொருட்களுமே தற்போது மிக விரைவில் மலையகத்துக்கு கிடைத்து விடுகின்றன.

பாடசாலை கல்வியை இடை நிறுத்தி விட்டு கொழும்புக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் போதை பாவனைக்கு அடிமையாவதோடு அதனை ஊர்களிலும் பரவ செய்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆயினும்  இதனை விட மோசமான விடயம் உள்ளது. அதாவது சில வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வியாபார நோக்கத்தோடு மலையகத்தில் அதிகளவில் தற்போது குடியேறிவிட்டனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் அட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை போன்ற பிரதேசங்களில் அதிகளவில் குடியேறிவிட்டனர். இவர்கள் பாடசாலைகளுக்கு அருகில் சிறு கடைகளை நடத்துவதோடு அங்கேயே இந்த போதை பொருட்களை மாணர்களுக்கும் விற்பனை செய்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இனிப்புகள் மூலம் இதனை கலந்து விற்பனை செய்ப்படுவதாக கூறப்படுகின்றது.

கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவரின் தாய் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், பிரபலமான  பாடசாலைக்கு அருகில் புதிதாக வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களால் உருவாக்கபட்ட சில்லரை கடையில்  போதைப்பொருட்களை கடையிலேயே விற்பனை செய்தனர். எனது பிள்ளைகளும் இதில் பாதிக்கப்பட்டு வடுவரோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் பின்னர் இது தொடர்பில் பிரச்சினைகள் வந்ததும் அவர்கள் கடையை காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டனர். இப்போது கடைகள் இங்கு இல்லை.

அட்டன் பிரதேசத்திலும் இது போன்று போதை பொருள் பாவனையில் மாணவர்கள் ஈடுபடுவதோடு இதன் காரணமாக இளம்வயது திருமணங்கள் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோல  பல பிதேசத்திலும் போதை பொருட்களின் பாவனைகள் அதிகரித்து விட்டன. பாடசாலைக்கு போதை பொருளை பாவித்தவாறு மாணவர்கள் வருவதாகவும் அவர்களை கட்டுப்படுத்துவது கடினம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது…

சில மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுப்படுத்தினால் பெற்றோர்  உண்மையறியாது எதிர்ப்பை வெளியிடுகின்ற நிலையும் உள்ளது. அதனைபோல சில ஆசிரியர்களும் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை விட இதற்கென முகவர்களும் மிக பெரிய வலையமைப்பும் உள்ளதாகவும் அவர்களே மலையகத்திற்கு இதனை கொண்டு வருவதாகவும்.. அவர்கள் ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலம் மாணவர்களுக்கு விநியோகிக்கின்றனர். சில இடங்களில் இதனை தடுக்க வேண்டிய பாதுகாப்பு அதிகாரிகள் கூட இலஞ்சம் பெற்றுக்கொண்டு கண்காணிப்பதில்லை. மாறாக போதை வியாபாரிகளுக்கு உதவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

எது எப்படியோ போதைப்பொருள் பாவனையால் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகள் வருகின்றன. இதனால் மாணவ பருவம் அழிவதோடு  திறமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. மலையகத்தை பொருத்த வரையில் ஏற்கனவே அரசியல் சமூக ரீதியாக பல பிரச்சினைகள் உள்ள நிலையில் தற்போது போதை பொருள் மிக பெரிய பிரச்சினையாக சமூகத்தில் உருவாகியுள்ளமை வேதனையளிபபதாக உள்ளது. இவை எல்லாம் மிக பெரிய வலையமைப்புகளுடனும் முகவர்களுடனும் தொடர்பு பட்டுள்ள விடயங்கள் என்பதால் அதனை உடனடியாக தடுக்கமுடியாது. ஆனால்  பெற்றோர்களினால் தங்களது பிள்ளைகளை பாதுகாக்க முடியும். ஆசிரியர்களினால் தங்களது மாணவர்களை பாதுகாக்க முடியும். அவர்களது நட்பு வட்டாரங்கள் , நடத்தைகள் தொடர்பில் கவனம் செலுத்தி போதை உலகில் இருந்து  அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே நாளைய சமூகத்தை நாம் காப்பாற்ற முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08