கடன் மறுசீரமைப்பில் திண்டாடும் இலங்கை : சர்வதேச உதவி மாநாட்டை நடத்துவதன் மூலம் உதவிக்கரம் நீட்டுகிறது ஜப்பான்

Published By: Vishnu

29 Aug, 2022 | 09:19 PM
image

ரொபட் அன்டனி 

இலங்கை தற்போதைய நிலையில் ஒரு பாரிய பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற சூழலில் மிகப்பெரிய ஒரு கடன் நெருக்கடியிலும் சிக்கி இருக்கின்றது. இலங்கையானது சர்வதேச மட்டத்தில் கிட்டத்தட்ட 52 பில்லியன் டொலர்களை கடனாகக் கொண்டிருக்கின்றது.  எனினும் உடனடியாக அதாவது எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கை 29 பில்லியன் டொலர்களை    சர்வதேசத்துக்கு செலுத்த வேண்டியிருக்கின்றது.  அந்தவகையில் அந்த கடன்களை தற்போது செலுத்த முடியாத சூழலில் இலங்கை இருக்கின்றது. 

அதுமட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை  தம்மால் கடன் செலுத்த முடியாது என்ற வங்குரோத்து நிலையை உலகத்துக்கு பிரகடனம் செய்தது.  அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இலங்கை    சர்வதேச மட்டத்தில் எந்த ஒரு கடன் தவணைப்பணத்தையும் மீள் செலுத்தவில்லை.  அதன் பின்னரே இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு நீண்ட கால கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. 

முதலில் இலங்கை தூது குழுவினர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதனை அடுத்து சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  தற்போது உத்தியோகஸ்தர் மட்ட இணைக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

கடன் மறுசீரமைப்புக்கான அவசியம் 

இந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலேயே தற்போது சர்வதேச மட்டத்தில் கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கின்றது.   சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற நாடுகள்,  சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் கடன் மறுசீரமைப்பு  இணக்கப்பாட்டை செய்து கொள்ளும் பட்சத்தில் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும். எனவே சர்வதேச நாணய நிதியத்தின்  உதவியை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற தரப்பினருடன் இலங்கை கடன் மறுசீமைப்பை செய்து கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகிறது.  

  எனினும் அந்த கடன் மறுசீரமைப்பு  செயற்பாடுகள்  தற்போது இலங்கைக்கு ஒரு சவால் மிக்கதாக காணப்படுகிறது.  காரணம் இலங்கைக்கு பல மட்டங்களில் சர்வதேச கடன்கள் கிடைத்திருக்கின்றன.  பரிஸ் கிளப் நாடுகள் என்று கூறப்படுகின்ற நாடுகள் இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்றன.  மேலும்  சீனா மற்றும் இந்தியா ஆகியள நாடுகள் கடன் வழங்கியுள்ளன.    அதுமட்டுமின்றி சர்வதேச நிதி நிறுவனங்கள் பிணைமுறை ஊடாக இலங்கைக்கு கடன் வழங்கியிருக்கின்றன.  இந்த சகல விதமான கடன்களையும் மீள் செலுத்துவதை இலங்கை தற்போது நிறுத்தி இருக்கின்றது.  அதுவும்  கடன் மீள் செலுத்த முடியாது என்ற வங்குரோத்து நிலையை  அரசாங்கம்  பிரகடனம் செய்திருக்கின்றது.  அதனால்    கடன் வழங்கிய தரப்பினருடன் இலங்கை கடன் மறுசீரமைப்பை  செய்து கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது.    

கடன் மறுசீரமைப்பு கருவிகள்  

  இலங்கை கடன் மறுசீரமைப்பை சர்வதேச மட்டத்தில் மூன்று முறைகளில் கடன் வழங்கினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்து செய்து கொள்ள முடியும். முதலாவது இலங்கை ஏற்கனவே பெற்றிருக்கின்ற கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்க முடியும்.  இரண்டாவதாக இலங்கை ஏற்கனவே சர்வதேச கடன்களை  மீள் செலுத்துவதற்கான காலத்தை மேலும் நீடிக்க முடியும்.  இடையில் ஒரு நிவாரண கால பகுதியை பெற்றுக்கொள்ள முடியும். மூன்றாவதாக இலங்கை சர்வதேச தரப்பினரிடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற கடன்களில் ஒரு தொகையை கழித்து விடுவதற்கான இணக்கப்பாட்டை எட்டலாம்.  இதனை  Haircut  என்று கூறுவார்கள்.   இவ்வாறு  மூன்று முறைகளை கடன் மறு சீரமைப்பில் அரசாங்கம் பின்பற்ற வேண்டி இருக்கின்றது.  

சவாலான நிலை ஏன் வருகிறது? 

ஆனால் இங்குதான் சிக்கல் ஏற்படுகின்றது.  காரணம் கடன் மறுசீரமைப்பை செய்து கொள்வதற்கு சீனா தயாராக இல்லை.  இலங்கைக்கு சகல உதவிகளையும் செய்வதற்கு தயார் என்று சீனா அறிவித்திருக்கிறது.  கடந்த வெள்ளிக்கிழமை கூட சீனா இவ்வாறு  ஒரு அறிவிப்பை விடுத்தது.  ஆனால் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா தயக்கம் காட்டி வருகின்றது. இலங்கை பெற்றுள்ள சர்வதேச கடன்களில் சீனாவிடம் 10 வீதமான கடன் பெறப்பட்டுள்ளது.    காரணம் சீனா இலங்கைக்கு மட்டும் இவ்வாறு கடன்  மறுசீரமைப்னை  செய்து கடன் தொகையை குறைக்கும் நிலை ஏற்பட்டால் ஏனைய கடன் பெற்றுள்ள  நாடுகளும் அதனை பின்பற்றுவதற்கு முயற்சிக்கும்.  அது தமக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சீனா கருதுகிறது.  எனவே கடன் மறுசீரமைப்பை செய்து கொள்வதற்கு   சீனா தயங்குகிறது. 

ஐ.எம்.எப். முன்வைக்கும் நிலைப்பாடு என்ன? 

இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள  சகல தரப்புகளுடனும்  கடன் மறுசீரமைப்பை செய்து கொண்டால் தான் சர்வதேச நாணய நிதியம்  இலங்கைக்கு கடன் உதவி வழங்கும்.  சர்வதேச நாண நிதியம் இவ்வருட இறுதியில் இலங்கைக்கு உதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அதற்கு முன்னர் கடன் வழங்கிய தரப்பினருடன் இலங்கை கடன் மறுசீரமைப்பை செய்துகொள்ள வேண்டும்.  ஆனால் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது இலங்கைக்கு  நிரந்தரமான தீர்வாக அமையப்போவதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.  ஆனாலும் தற்போதைய சூழலில் பலவிதமான நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு,   நிதி ஸ்திரத் தன்மை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு சர்வதேச நாணயத்தின் உதவிக்கரம் அவசியமாகின்றது.  எனவே சீனாவுடன்  பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடன் மறுசீரமைப்பை    செய்துகொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகிறது. 

ஜனாதிபதியின் கோரிக்கை 

அண்மையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா இந்த விடயத்தில் தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்   என்று திட்டமிட்டமாக கோரியிருந்தார். இந்தநிலையில் சீனா என்ன செய்யப் போகிறது என்பது இங்கு முக்கியமானதாக இருக்கின்றது.  ஒரு புறத்தில் சீனா முழுமையாக இலங்கையை பொருளாதார ரீதியில் மீண்டுவருவதற்கு உதவுவதாக அறிவித்திருக்கின்றது.  கடன் மறுசீரமைப்பை செய்வதற்கு தயக்கம் காட்டுகிறது.  எனவே எவ்வாறான முடிவை விரைவில் சீனா எடுக்கப்போகிறது என்பது இங்கு மிக முக்கியமானது.  

ஜப்பானின் உதவி அனுகுமுறை 

இந்த பின்னணியிலேயே   தற்போது ஜப்பான் இலங்கைக்கு உதவி செய்வதற்கு முன்வந்திருக்கின்றது.  அதாவது சர்வதேச மட்டத்தில் இந்த கடன் மறுசீரமைப்பு   தொடர்பாக  நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு சர்வதேச இலங்கைக்கான உதவி மாநாட்டை நடத்துவதற்கு ஜப்பான் முன் வந்திருப்பதாக அறிவித்திருக்கிறது.  சர்வதேச மட்டத்தில் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கு இலங்கைக்கு ஜப்பான் உதவ வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.  அந்த அடிப்படையில் ஜப்பான் இந்த சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு முன் வந்திருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அடுத்த மாதம்  நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்கின்றார். எனவே அந்த விஜயத்தின் போதும் இந்த கடன் மறுசீரமைப்பு   மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக ஜப்பானுடன் தீவிரமான பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனடிப்படையில் தற்போது   இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருக்கான மாநாட்டை நடத்தவிருக்கின்றது.  அந்த மாநாட்டில் இந்த கடன் வழங்கிய தரப்பினருடன் ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு  செயல்பாட்டை விரைவுபடுத்தி  அதற்கான உதவிகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜப்பானின் இந்த செயற்பாடு ஒரு திருப்புமுனையாகவே இலங்கையின் பக்கத்திலிருந்து பார்க்கும் போது அமைந்திருக்கிறது.  ஆனாலும் அந்த சர்வதேச மாநாடு எவ்வாறு அமையப்போகிறது என்பது சகல தரப்பினரதும் ஈடுபாட்டிலேயே தங்கி இருக்கின்றது. 

வரலாறு திரும்புகிறதா?  

 ஜப்பானுக்கு இலங்கைக்கு உதவி செய்வதற்கான ஒரு கடப்பாடு இருப்பதாகவே பல்வேறு தரப்பினரும் கருதுகின்றரை்.   காரணம் இரண்டாவது உலக மகா யுத்தத்தில் கடுமையாக  பாதிக்கப்பட்ட ஜப்பான் மீண்டு வருவதற்கு இலங்கையின் முன்னாள் தலைவரான ஜே.ஆர். ஜயவர்த்தன  வழங்கிய பங்களிப்பு மிகவும் மகத்தானதாக காணப்படுகிறது.    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் ஜப்பானை சகல நாடுகளும் புறக்கணித்தபோது இலங்கையின் சார்பில் அப்போது பிரதிநிதியாக கலந்து கொண்டிருந்த ஜயவர்த்தன  ஜப்பானை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும்,  அதற்கு சகலரும் உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தார்.  அதன் பின்னரே ஜப்பான் மீண்டெழுவதற்கு சகல நாடுகளும் ஜப்பானுக்கு உதவின.   

எனவே ஜப்பான் இலங்கைக்கு இந்த விடயத்தில் உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  எனினும் கடந்த காலங்களில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது. கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை  ஜப்பான் மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிக்கப்பட்டது.  ஆனால் இலங்கை அதனை இரண்டு நாடுகளுக்கும் வழங்கவில்லை.  அதே போன்று ஜப்பான் கொழும்பில் இலகு ரயில் திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை  எடுத்திருந்தது.  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த அரசாங்கம் அதனை நிறுத்தியது.  இந்த செயற்பாடுகளின் காரணமாக ஜப்பான் இலங்கை உறவில்  ஒரு விரிசல் ஏற்பட்டது.  

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுடனான    உறவை மீள பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்ததுடன் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரையிலும் ஜப்பானுக்கு நன்றி தெரிவித்ததுடன்  ஜப்பானுடன் மீண்டும் உறவுகளை வலுப்படுத்த போவதாக அறிவித்திருந்தார்.  

அந்தவகையில் ஜப்பான் இலங்கைக்கு தற்போது உதவி செய்வதற்கு தயாராகின்றது என்று தெரிகிறது.  ஆனாலும் அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பது இன்னும் தெளிவாக இல்லை.  எப்படியிருப்பினும் இலங்கைக்கு கடன்   சகல நாடுகளுடனும் கடன் மறுசீரமைப்பு   செய்துகொள்ளும்  பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும்.   அதில்  சீனா தற்போது தயக்கம் காட்டி வருவதால் சீனாவை   இணங்கி கொள்ள செய்வது மிக முக்கியமானதாக இருக்கிறது.  அது தொடர்பாக சீனாவுடன் இராஜதந்திர  பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  அதுமட்டுமின்றி இலங்கைக்கு கடன் வழங்கிய சர்வதேச நிதி நிறுவனங்கள் சர்வதேச அமைப்புகள் என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக கடன் மறுசீரமைப்பு   செய்து கொள்ள வேண்டும்.  ஏற்கனவே இந்த விடயங்களை மேற்கொள்வதற்கு இலங்கை இரண்டு சர்வதேச ஆலோசகர்களை நியமித்துள்ளது. 

நெருக்கடி நிலை 

தற்போதைய நிலையில் மிகப்பெரிய   பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை  இருக்கின்றது.    அதிலிருந்து மீண்டு வர வேண்டும். அதற்கு  சர்வதேச மட்ட  உதவி மிக அவசியமானதாக இருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தொடர்பாக பல விமர்சனங்கள் காணப்படுகின்றன.  காரணம் சர்வதேச நாணய நிதியம் பாரிய நிபந்தனைகளை இலங்கைக்கு முன்வைக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  அதில் விமர்சனங்கள் இருந்தாலும் கூட இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும் இலங்கையின் இந்த டொலர் நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க அளவில் தீர்வை நோக்கி பயணிப்பதற்கும் ஒரு நீண்ட கால நிரந்தர செயல்பாட்டை மேற்கொள்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கின்றது.  எனவே ஜப்பான் தற்போது இந்த சர்வதேச உதவி வழங்கும்  மாநாட்டை இல்லாவிடின் கடன் மறுசீரமைப்பு   மாநாட்டை ஏற்பாடு செ செய்யப்போகிறது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் மற்றும்  அடுத்த கட்டமாக என்ன நடக்கப் போகிறது என்பது இங்கு முக்கியமானதாக இருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54