(ஆர்.வி.கே.)

யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இருக்கின்ற வலிகாமம் வடக்கில் தமிழ் மக்களுடைய சொந்த நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தாலும் அங்கு பெருமளவிலான பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயப் போர்வைக்குள்ளேயே இருந்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் முழுமையாக இராணுவம் விலகிக் கொள்ளாத நிலையே காணப்படுகின்றது. 

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து நல்லாட்சி என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கின்ற மைத்திரி, ரணில் கூட்டு அரசாங்கம் இராணுவத்திடமிருக்கின்ற தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அனைத்தையும் மீள வழங்குவதாக வாக்குறு அளித்திருந்தது.

அதற்கமைய பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இந்தப் பிரதேசத்திலிருந்து குறிப்பிட்டளவிலான ஏக்கர் நிலத்தை மட்டுமே நல்லாட்சி அரசும் விடுவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலான நிலங்கள் பொது மக்களிடம்  விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் வசமே காணப்படுகின்றன. இதேநேரம் அவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் ஆலயங்கள் என்பன இடித்தழிக்கப்பட்டிருப்பதுடன் பாலை வனமாகவே அந்தப் பகுதிகள் காட்சியளிக்கின்றன. மேலும் விடுவிக்கப்பட்ட அந்தப் பகுதிகளிலும் இன்றைக்கும் இராணுவத்தினர்  நிலைகொண்டு தான் இருக்கின்றனர். 

இதேவேளை வலிகாமம் வடக்கில் பொது மக்களது காணிகளைக் கையகப்படுத்தி அங்கு நிலைகொண்டிருக்கின்ற இரானணுவத்தினர் ஆடம்பர விடுதிகளையும் பல்வேறு வசதிகளைக் கொண்ட ஹோட்டல்களையும் அமைத்து அதனைப் பராமரித்து வருகின்றதுடன் தோட்டங்களையும் விவசாயப் பண்ணைகளையும் நடாத்தி வருகின்றனர். ஆனால் அந்த மக்கள் தற்போதும் பல்வேறு கஷ்ட துன்பங்களுக்கு மத்தியிலும் முகாம்களில் தான் வாழ்ந்த வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் ஆட்சி அமைக்கின்ற போது வலிகாமம் வடக்கில் 6384 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து 2015 ஏப்ரல் மாதம் முதன் முதலாக பலாலி தெற்கு வசாவிளான் கிழக்குப் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக 484 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வீமன்காமம் வடக்கு வீமன்காமம் தெற்கு போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக 614 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி 800 ஏக்கரைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் 15 ஆம் திகதி 237 ஏக்கர் விடுவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தையிட்டி கிழக்குப் பகுதியில் 454 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலப்பகுதியை விட இன்னமும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு விடுவிக்கப்படாமல் இருக்கிறது. 

குறிப்பாக அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியை சேரந்த மக்கள் தற்பொது கோணப்புலம் நலன்புரியில் வாழ்கின்றனர்.  அவர்கள் நிலப்பகுதி முழுமையாக விடுவிக்கப்படவில்லை. அவ்வாறு முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தால் கோணப்புலம் முகாம் முழுமையாக மூடப்பட்டிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும். ஆனால் அவர்களுடைய அரைவாசிப் பகுதி நிலங்களே தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 105 குடும்பங்களுடைய நிலங்களே விடுவிக்கப்பட்டிருக்கின்றன. ஆக அந்த நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தால் அந்தப் பகுதியைச் சேரந்த 330 குடும்பங்களும் தமது நிலங்களில் அங்கே வாழ்கின்ற நிலைமை உருவாகியிருக்கும்.

ஆகவே அவர்களது பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் மீள்குடியேற்ற அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. மேலும் தையிட்டி கிழக்கு வள்ளுவர் புரத்திலே தற்போது போடப்பட்டிருக்கின்ற இரானுவ உயர் பாதுகாப்பு வலய வேலியானது இன்னமும் 200 மீற்றர் தூரம் பின்நகர்த்தப்பட்டால் கோணப்புலம் மற்றும் ஊரணி முகாம் மக்களின் மீள்குடியேற்றம் முழுமையடைக் கூடியதாக இருக்கும் என மீள்குடியேற்றக் குழு தெரிவித்துள்ளது.

இராணுவம் வைத்திருக்கின்ற காணிகள் மக்களுக்கே சொந்தம். ஆனால் குறிப்பிட்டளவிலான காணியை விடுவித்து விட்டு தற்பொது அங்கு உயர் பாதுகாப்பு வலய எல்லைகளை மீளவும் பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளைவே இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே உயர் பாதுகாப்பு வலய எல்லைகள் மீளவும் பின்நகர்த்தப்படுமா அல்லது உயர் பாதுகாப்பு வலய எல்லைகள் நீக்கப்படுமா என்றதே இன்றைக்கு அந்த மக்கள் மத்தயில் எழுந்திருக்கும் கேள்வியாக உள்ளது. இந்த வேலிகள் அகற்றப்பட்டாலே அந்த மக்கள் அனைவரும் தத்தம் சொந்த நிலங்களில் மீள்குடியமர்வது சாத்தியமாகுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றன.