அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்தமைக்கு அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ்.பி. கோமேவே காரணம் என ஹிலாரி கிளின்டன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தல் செலவுக்காக தனக்கு நிதிதிரட்டி தந்த ஆதரவாளர்களிடையே நேற்று இடம்பெற்ற ’கொன்பிரன்ஸ் கால்’ தொலைபேசி உரையாடலின் போதே ஹிலாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹிலாரி,

தேர்தல் பிரச்சாரத்தின் போது என் மீதும், டிரம்ப் மீதும் பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன. 

நான் அமெரிக்க இராஜாங்க செயலாளராக இருந்த காலத்தில் தனது சுய தேவைக்காக அரச மின்னஞ்சல்களை  பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

ஆனால் முதலில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று கூறியிருந்தனர்.

ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மின்னஞ்சல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ்.பி. கோமே பகிரங்கமாக உத்தரவிட்டார்.

 தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற மக்கள் கருத்துகணிப்பில் எனக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

பிரச்சாரப் பணிகள் உச்ச கட்டத்தை அடைந்திருந்த போது எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ்.பி. கோமே விடுத்த உத்தரவால் மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை குறைவடைந்தது. இதுவே எனது தோல்விக்கு காரணமாகவும் அமைந்து விட்டது.

 எனது தோல்விக்கு எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ்.பி. கோமே  இயக்குனர் நேரடியாக பொறுப்பு கூற வேண்டும்.

 

ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த நாட்களில் குறித்த குற்றச்சாட்டில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதனையும் ஹிலாரி கிளின்டன் இதன் போது நினைவுப்படுத்தியுள்ளார்.