எங்கே செல்வார் ரணில்?

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 03:36 PM
image

ஹரிகரன்

 “சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அரசாங்க இறுதிச் சடங்கு,  வரும் செப் டெம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள  நிலையில் அதில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கத் திட்டமிட்டிருக்கிறார்”

“பொருளாதார நெருக்கடிகளை அடுத்து இலங்கையில் 12திட்டங்களை ஜப்பான் இடைநிறுத்தி வைத்திருக்கிற  நிலையில் அதனிடம், 3.5பில்லியன் டொலர் கள் உதவிக் கோரிக்கையை இலங்கை விடுத்திருந்த போதும், அது இறுதி செய்யப்படவில்லை”

இலங்கையில் அரச தலைவர்களாகப் பதவியேற்றுக் கொள்பவர்கள் முதலில் இந்தியாவுக்கும், அடுத்து சீனாவுக்கும் அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்வது வழக்கம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அவ்வாறு தான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி, சீனாவுக்கு தனது இரண்டாவது பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

கொரோனா தொற்றும், அதனையடுத்து காணப்பட்ட அரசியல், பொருளாதார சூழல்களும், சீனாவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்ட போதும், கோட்டாபய  ராஜபக்ஷ அரச விருந்தினராக பீஜிங்கில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ தனது இரண்டரை ஆண்டு பதவிக்காலத்தில் தவறவிட்ட எத்தனையோ வாய்ப்புகளில் இதுவும் ஒன்று.

இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணம் எந்த நாட்டுக்கு இடம்பெறப் போகிறது என்ற கேள்வி பரவலாக காணப்படுகிறது.

மரபுகளுக்கு அமைவாக அவர், புது டில்லிக்குத் தான் முதல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.  பதவியேற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும், இன்னமும் அவ்வாறான பயணத்துக்கான முன்முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கவில்லை.

இந்தியாவிடம் இருந்து அதிகாரபூர்வ அழைப்பு வர வேண்டும். அதனை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதி புதுடில்லி செல்ல வேண்டும்.

ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வாரம் கழித்தே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த வாழ்த்துச் செய்தியில், எங்கள் மக்களின் பரஸ்பர நலனுக்காக உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடி,  ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு எதையும் விடுக்கவில்லை.

அதேவேளை, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புது டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியத் தலைவர்களிடம் இருந்து புதிய அழைப்பு வந்தால் தான், அதனை ஏற்று அவர் அங்கு செல்ல முடியும்.

ஆனால் இப்போதைய நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு புது டில்லி அழைப்பு விடுக்கும் சூழல் இருப்பதாக தெரியவில்லை.

சீனாவின் ஏவுகணை மற்றும் செய்மதி வழித்தடக் கண்காணிப்புக் கப்பலான, யுவான் வாங்-5 விவகாரத்தில், இந்தியாவின் நலன்களையோ, கரிசனைகளையோ, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில், அவரது புது டில்லிப் பயணம் என்பது உடனடிச் சாத்தியமானதொன்றாக இருக்குமா என்பது சந்தேகம்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியவர் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தான்.  அதையடுத்து, ரஷ்ய ஜனாதிபதி புடினும், அதன் பின்னரே இந்தியப் பிரதமர் மோடியும், வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.

ராஜபக்ஷவினரின் தயவுடன் ஆட்சிக்கு வந்திருப்பதால் தான், ரணிலுக்கு சீனா முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்தது என்று கருத்து காணப்பட்டது.

யுவான் வாங் கப்பல் விவகாரத்தில், அதற்கான நன்றிக்கடனை ரணில் விக்கிரமசிங்க செலுத்தியிருக்கிறார். இவ்வாறான நிலையில், ரணில் விக்கிரமசிங்க அடுத்து சீனாவுக்குத் தான் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால் புது டில்லிக்குச் செல்லாமல், முதலில் சீனாவுக்குச் சென்றால், அது ரணில் விக்கிரமசிங்கவை நெருக்கடிக்குள்ளாக்கும்.

சீனாவின் செல்லப்பிள்ளையாக கருதப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவே, இரண்டரை ஆண்டுகளில் சீனாவின் பக்கம் செல்லாத போது, ரணில் விக்கிரமசிங்க முதல் பயணத்தை பீஜிங்கிற்கு மேற்கொண்டால் அது சர்ச்சையைக் கிளப்புவது நிச்சயம்.

சீனாவின் உதவியும், அனுசரணையும் இலங்கைக்கு இப்போது தேவைப்படுகின்ற போதும், சீனாவை மட்டும் நம்பியிருக்க முடியாத நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இருக்கிறது.

ஏனைய சர்வதேசப் பங்காளிகளின் உதவியுடன் தான் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்பதால், சீனாவை மட்டும் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது அரசாங்கம்.

யுவான் வாங் கப்பல் விவகாரம், இந்திய, மற்றும் அமெரிக்க தரப்புகளுக்கு, சினத்தை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், அதனை மேலும் ஆழப்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்க பீஜிங்கிற்கு செல்ல முற்படமாட்டார்.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அல்லது வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று அமெரிக்காவுக்கானது. இன்னொன்று ஜப்பானுக்கானது.

ஐ.நா.பொதுச்சபையின் 77ஆவது அமர்வு வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி தொடங்குகிறது. அந்த அமர்வின் பொது விவாதத்தில், ஐ.நா.உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றுவது வழமை.

கடந்த ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இந்தமுறை ரணில் விக்கிரமசிங்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நியூயோர்க் செல்ல முடியும்.

அங்கு உலகத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். ஆனால், இதுவரையில் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க பயணத்துக்குத் திட்டமிடவில்லை.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை அனுப்பி வைக்கும் திட்டத்திலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து, ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குச் செல்வதற்கு ஒரு வாய்ப்பு அடுத்த மாத இறுதியில் கிடைத்துள்ளது.

கடந்த ஜூலை 8ஆம் திகதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அரசாங்க இறுதிச் சடங்கு,  வரும் செப் டெம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

டோக்கியோவில்  விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகள் இடம்பெறும் மிகப் பெரிய அரங்கான, நிப்பொன் புடோகனில் நடைபெறவுள்ள இந்த அரசாங்க இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கு, தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக டோக்கியோவில் இடம்பெற்றிருந்தது. முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஒருவருக்கு அரச இறுதிச்சடங்கு, 1967ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதல் முறையாக நடைபெறவுள்ளது.

இதில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கத் திட்டமிட்டிருக்கிறார். ஷின்சோ அபே, ராஜபக்ஷவினருடன் மாத்திரமன்றி ரணில் விக்கிரமசிங்கவுடனும் கூட நெருக்கமாக இருந்தவர்.

அவரது இறுதிச்சடங்கிற்காக ரணில் விக்கிரமசிங்க முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வது யாருக்கும் வலியை ஏற்படுத்தாது. சர்ச்சையாகவும் இருக்காது. 

அதேவேளை, சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை அடுத்து இலங்கையில் 12திட்டங்களை ஜப்பான் இடைநிறுத்தி வைத்திருக்கிறது.

ஜப்பானிடம், 3.5பில்லியன் டொலர் கள் உதவிக் கோரிக்கையை இலங்கை விடுத்திருந்த போதும், அது இறுதி செய்யப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டுக்குப் பின்னரே, உதவி வழங்கல் குறித்து முடிவெடுக்க ஜப்பான் திட்டமிட்டிருக்கிறது.

இந்தநிலையில், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் தோன்றியிருக்கின்ற நெருக்கடிகளை தீர்த்து, அதனுடன் மீண்டும் உறவுகளைப் பலப்படுத்த அரசாங்கம் விரும்புகிறது.

ஜப்பானின் முதலீட்டில் கொழும்பில் இலகு ரயில் திட்டத்தை முன்னெடுக்க செய்து கொண்ட உடன்பாட்டை இரத்து செய்ததன் மூலம், கோட்டாபய ராஜபக்ஷ ஜப்பானுடனான உறவுகளை கெடுத்துக் கொண்டார்.

தற்போதைய அரசாங்கம் ஜப்பானுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமான தேவையாக உள்ளது.

அபேயின் இறுதிச் சடங்கிற்குப் பின்னர் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பேச்சுக்களை ரணில் திட்டமிட்டிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க இப்போது எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்பதை விட, எவ்வாறு நாட்டின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறார் என்பதே முக்கியமானது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18