ஜெனிவாவில் இரட்டைப் பொறி

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 03:35 PM
image

கபில்

“இலங்கை அரசாங்கம் போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறவோ, நீதியை வழங்கவோ போவதில்லை என்பது சர்வதேசத்துக்கு ஏற்கனவே தெரிந்து விட்டது”

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தல் உள்ளிட்ட மனித உரிமைகளுக்கு எதிரான விடயங்களில் கோட்டாபய ராஜபக்ஷவை விட, மோசமாகவே நடந்து கொள்கிறார்”

 “எதிர்வரும்  கூட்டத்தொடரில் கூட, இலங்கை தொடர்பான தீர்க்கமானதொரு நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் எடுக்குமா என்பது சந்தேகம் தான்”

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின், 51 ஆவது கூட்டத்தொடர், வரும் செப் டெம்பர் 12ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக் டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஜெனிவா கூட்டத்தொடர், இலங்கைக்கு கடும் சவாலாக இருக்கும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் கூறியிருக்கிறார்.

அவர் அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு இதனைக் கூறவில்லை, அரசாங்கத்துக்கு வெளியே வந்து நின்று கொண்டு தான், ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைக்கு சவாலாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை வலியுறுத்தி, 2021 பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நடந்த 46 ஆவது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட 46/1 தீர்மானத்தின் காலவரம்பு இந்தக் கூட்டத்தொடருடன் முடிவடையவுள்ளமை அதற்கு முதல் காரணம்.

மேற்படி தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  பணியகம், மீறல்கள் குறித்த சாட்சியங்களையும் சான்றுகளையும் சேகரிக்கும் பணியகம் ஒன்றை உருவாக்கி, ஆவணப்படுத்தும் பணிகளை முன்னெடுத்திருக்கிறது.

இந்த சாட்சியங்களைச் சேகரிக்கும் பொறிமுறையின் முன்னேற்றங்கள் மற்றும் 46 ஆவது கூட்டத்தொடருக்குப் பின்னரான இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விரிவான அறிக்கை ஒன்றை, வரவுள்ள கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த அறிக்கை, இலங்கை தொடர்பான இன்னொரு தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்து உறுப்பு நாடுகள் மத்தியிலான கலந்துரையாடல்களில் முக்கிய பங்கை வகிக்கும்.

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார், தமது அறிக்கையில், இலங்கை தொடர்பான பல குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடும்.

போர்க்கால மீறல்கள் மற்றும் அதற்கு நீதியை வழங்கும், பொறுப்புக்கூறும் முயற்சிகள் முன்னெடுக்கப்படாமை மாத்திரம், அரசாங்கத்துக்கு சிக்கல்களை ஏற்படுத்துவதாக இருக்காது.

இலங்கை அரசாங்கம் போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறவோ, நீதியை வழங்கவோ போவதில்லை என்பது சர்வதேசத்துக்கு ஏற்கனவே தெரிந்து விட்டது.

இந்த விடயங்கள் சார்ந்து தாங்கள் செயற்படப் போவதில்லை. சர்வதேச விசாரணை முயற்சிகளுக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்றும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் தெளிவாக கூறி விட்டது.

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்த்தனவும், ஜி.எல்.பீரி ஸும் அதனை ஜெனிவா அமர்விலேயே கூறியிருந்தனர்.

இதற்கு மேல் இலங்கை இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று சர்வதேசம் எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

ஆனாலும், இலங்கைக்கு வெளியே சர்வதேச பொறுப்புக்கூறல் விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க உறுப்பு நாடுகள் தயங்கி வருகின்றன.

பூகோள அரசியல் போட்டியும், இலங்கையின் அமைவிடம் உள்ளிட்ட பல்வேறு புறக்காரணிகளும் தான், சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்குள் சிக்கிக் கொள்ளாமல், இலங்கை ஒரு தசாப்த காலத்தை கடத்தியிருப்பதற்குக் காரணம்.

வரப்போகும் கூட்டத்தொடரில் கூட, இலங்கை தொடர்பான தீர்க்கமானதொரு நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் எடுக்குமா என்பது சந்தேகம் தான்.

முன்னாள் அமைச்சர் பீரிஸ், இந்த விவகாரத்தை இலங்கைக்கு சவாலானதாக இருக்கும் என்று குறிப்பிடவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் பயன்படுத்தப்படுவது, மற்றும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவது போன்றவற்றினால் தான், நெருக்கடிகள் ஏற்படும் என்பது பீரி ஸின் கணிப்பு.

ஏனென்றால் பதிலீடான ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் வரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்று, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தாம் வாக்குறுதி அளித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

அந்த வாக்குறுதியை மீறி அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி வருவது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 46 /1 தீர்மானத்திலேயே, பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கமும், பதிலீடாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால் அந்தச் சட்ட வரைவு மோசமானது என்று எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் கூறுகிறது.

இப்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அண்மையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் மேரி லோலர் அம்மையார் வலியுறுத்தியிருந்தார்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளும் அதனை வலியுறுத்தியிருந்த போதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனைக் கண்டுகொள்ளவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் உத்தரவுகள் பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்படுகின்ற நிலையிலும், ஜனநாயக போராட்டத்துக்கான இடைவெளி குறைந்து வரும் நிலையிலும், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் சார்ந்த நெருக்கடியை தானாகவே அதிகளவில் உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிப் பொதிக்கு, முன்நிபந்தனையாக மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை முன்வைக்க வேண்டும் என்ற கருத்தும் மேற்குலக நாடுகளில் உள்ளது.

குறிப்பாக அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் இதனை வலியுறுத்தியிருக்கிறார்கள். பிரித்தானிய பாராளுமன்றத்திலும் அதேகோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்தும் அதனை தீர்ப்பதற்கு சர்வதேச உதவிகள் அவசியம் என்பது குறித்தும், மேற்குலகினால் கவனம் செலுத்தப்பட்டாலும், இலங்கையின் மனித உரிமைகள் நிலையை அவர்கள் புறம் தள்ளத் தயாரில்லை.

அதனை முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் புரிந்து கொண்டிருக்கிறார். இலங்கை அரசாங்கம் நெருக்கடியில் சிக்கியிருந்தாலும், சர்வதேச உதவிகளை எதிர்பார்த்திருந்தாலும், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற விடயங்களில், கண்மூடித்தனமாக நடந்து கொள்ளவே முற்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில், கோட்டாபய ராஜபக்ஷவை விட, மோசமாகவே நடந்து கொள்கிறார்.

இந்த நிலையில், வரப்போகும் ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கை அரசாங்கத்துக்கு இரட்டை பொறியாகவே இருக்கப் போகிறது.

கடந்தகால மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் சார்ந்த நெருக்கடிகள் கழுத்தை நெரிப்பதாக இருக்கும்.

அடுத்து நிகழ்கால மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளும், தலைக்குமேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்தப் போகிறது.

இந்த இரண்டு பொறிகளையும் தாண்டி, சர்வதேச உதவிப் பொதியை இலங்கை அரசாங்கம் எவ்வாறு வென்றெடுக்கப் போகிறது என்பது தான் இப்போதுள்ள கேள்வி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54