பயங்கரவாத தடைச்சட்டத்தை விளங்கிக்கொண்டுள்ள சிங்கள சமூகம்

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 11:45 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்’ என்பதை இப்போது தான் எமது நாட்டின் சிங்கள சமூகம் உணர்ந்து கொண்டுள்ளது.

கடந்த அரசாங்கத்துக்கு எதிராக சில மாதங்களாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களோடு தொடர்புடையவர்கள், பொது சொத்துகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியவர்கள், ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்கள், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு தீ வைத்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் அனைவரும் துரத்தி துரத்தி பிடிக்கப்பட்டு வருகின்றனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், போராட்டங்களோடு தொடர்பு கொண்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.  

இப்போது தான் சிங்கள கட்சிகள் தூக்கத்திலிருந்து விழித்து கொண்டது போல் பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து புலம்ப ஆரம்பித்துள்ளன. 1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம்   (PTA-prevention of terrorism Act)    அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து,    அது தமிழர்களுக்கு  மாத்திரமே என்ற மனநிலை இந்நாட்டின் சிங்கள  மக்கள் மத்தியில் இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட விடுதலை புலிகளை மாத்திரமே தெரிந்திருந்தனர்.

மேலும் பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்ற பதத்தை இந்த மக்கள் விளங்கிக்கொண்டமை மிகக்குறைவாகும்.  இதன் காரணமாக ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைக் கூட சிங்கள மக்கள் என்றுமே பயங்கரவாத செயற்பாடுகளுக்குள் அடக்குவதில்லை. அவர்களை பயங்கரவாதிகள் என்று விளிப்பதில்லை.  

அதேவேளை இந்த சட்டமானது தமிழர்களுக்காகவே கொண்டு வரப்பட்டது என்பதையும் மறுக்க முடியாது. 

யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பலர் இன்று உரிய விசாரணைகளின்றி சிறையில் வாடுகின்றனர். பலர் காணாமல் போயுள்ளனர். 

அது தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றதால், அது குறித்து  சிங்கள கட்சித் தலைவர்களோ அல்லது மக்களோ அது குறித்த எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இப்போது இந்த சட்டம்  தமக்கும் தமது  பிள்ளைகளுக்கு எதிராக திரும்புவதை கண்டு பதைபதைத்து போயுள்ளனர். 

எனினும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென வாய்திறந்து கூறாது  மெளனம் காத்து வந்த தமிழ்த்தரப்பினரும் இலங்கையில் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. 

கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி தமிழ்த்தரப்புகளும் சர்வதேசமும் குரல் எழுப்பும் போதெல்லாம் சிங்கள தேசிய கட்சிகள் வாய்திறப்பதில்லை. அல்லது இச்சட்டத்தை நீக்க வேண்டும் என எவருமே உறுதியான குரல் கொடுத்ததில்லை. 

ஆனால் இப்போது ஐக்கிய மக்கள் சக்தி , ஜே.வி.பி என பலரும் வாய் திறந்துள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை தடுத்தல் மனித உரிமை மீறலாகும் என பிரித்தானியா, கனவா, நோர்வே ஆகிய நாடுகளும்   சர்வதேச மன்னிப்புச்சபையும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு முகங்கொடுக்கவுள்ள மூவரும் எதற்காக கைதானார்கள் என்பது தான் வேடிக்கையான விடயம். கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில் இப்போராட்டத்தின் முன்னணியில் செயற்பட்டவர்களே கைது செய்யப்பட்டு விட்டனர். 

வசந்த முதலிக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளராக விளங்குகிறார். ஹஜான் ஜீவந்த  களனி பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளராவார். கல்வெவ சிறிதம்ம தேரர் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான பிக்கு சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளராவார். 

இவர்கள் மூவருமே பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்கள் என்ற ரீதியில் நோக்கப்படல் வேண்டும் என்பது முக்கிய விடயம்.     இவர்கள் கைது செய்யப்பட்டமை மனித உரிமை மீறல் என்பதை முன்வைத்து அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மாணவர் தொழிற்சங்க செயற்பாடுகளின் பின்னணியில் வலிமையான கட்டமைப்பை  ஜே.வி.பியினரே கொண்டிருக்கின்றனர். தற்போது பயங்கரவாத சட்டம் நீக்கப்படல் வேண்டும் என முதன் முறையாக   ஜே.வி.பி. கூறியமைக்கு காரணங்கள் உள்ளன.  கிளர்ச்சி ,போராட்டம் என்ற ரீதியில் இலங்கை மக்கள் அஞ்சி நடுங்கிய இரத்த  வரலாற்றை கொண்டிருந்த ஜே.வி.பியினர், ஜனநாயக வழிக்கு திரும்பி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு பாராளுமன்றம் சென்றிருந்தாலும் கூட கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் என்ற உறுதியான கொள்கையை கொண்டிருக்கவில்லை.

 மிக முக்கியமாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தென்னிலங்கையின் எந்த சிங்கள கட்சிகளும் தமிழ்க்கட்சிகளோடு இணைந்து குரல் கொடுத்திருக்கவில்லை. அவை பேரினவாதத்தில் ஊறிப்போனவை என்பதால் ஆச்சரியங்களை ஏற்படுத்தவில்லை. 

ஆனால் போராட்ட வீரர்களாகவும் புரட்சிகர கருத்துக்களால் மக்களை ஈர்த்து வருபவர்களும் ஜனநாயக வழி அரசியல் பயணத்தை முன்னெடுக்கும் ஜே.வி.பியினர் இந்த விடயத்தில் குரல் கொடுக்காமலிருந்தமையானது அவர்களையும் பேரினவாத சிந்தனை கொண்ட அமைப்பாகவே பார்த்த நேர்ந்தது.  

தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தமது அரசியல், போராட்ட செயற்பாடுகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக இருப்பதால் அவர்களை விடுதலை செய்யுமாறும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் கூறுகின்றது ஜே.வி.பி. இப்போது கூட ஜே.வி.பியை இடதுசாரி முற்போக்கு எண்ணம் கொண்ட பிரிவினர் என்று பார்ப்பதற்கு ஜனநாயகவாதிகள் தயங்குவதற்கு இதுவே காரணம். முற்போக்கு என்றால் அது இன,மத,மொழி கடந்த செயற்பாடுகளாகும். 

யுத்த காலக்கட்டத்தில் நாட்டின் இறைமை மற்றும் தேசப்பற்று ஆகிய கொள்கைகளை அடிப்படையாக வைத்து , தமிழர்களின் உரிமைகள் மற்றும் ஏனைய விடயங்களை ஜே.வி.பி பேசவில்லை என வைத்துக்கொண்டாலும், யுத்தம் முடிவுற்ற பிறகும் அவ் அணியினர் தமிழர் பிரச்சினைகள் பற்றி குரல் கொடுக்கவே இல்லை. 

அரசுக்கு எதிரான கிளர்ச்சி அல்லது போராட்டங்களில் சிங்களத் தரப்பினர் பாதிக்கப்படும் போது ஜே.வி.பி கவலை கொள்கின்றது. அவர்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கின்றது.  பயங்கரவாதச் சட்டம் என்றால் அது தமிழர்களுக்கு மட்டும் தான், அவர்களையோ அது தாக்கும் என்று நினைத்திருந்த பலர் இன்று ஆடிப்போயுள்ளனர். அச்சட்டத்தால் தமிழர்கள் சின்னாபின்னமாகி போனதை கண்களால் கண்டறிந்தும் மெளனம் காத்து நின்ற சிங்கள தரப்பு இப்போது சுயநலபோக்கோடு மெல்ல வாய் திறக்க ஆரம்பித்துள்ளது. 

சில சந்தர்ப்பங்களில் இந்த போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் எவராவது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்குமாயின், அது கடந்த 44 வருடங்களாக வழமையாக இடம்பெற்று வரும் சம்பவம் தானே என அவரவர் தமது வேலைகளை கவனிக்க சென்றிருப்பர். 

பயங்கரவாத தடைச்சட்டம் தேசிய பாதுகாப்பு சட்டம் என்று திருத்தங்களுடன் மாற்றியமைக்கப்படும் என அரசாங்கம் கூறினாலும் பெயர் தான் மாறப்போகின்றது. மற்றும்படி உள்ளடக்கங்கள் அப்படியே தொடரப்போகின்றன.  

இந்த நாட்டின் சிங்கள மக்களும் தலைவர்களும் ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். காலங்காலமாக தமிழர்களை  சிதைக்கவும் அவர்களை மெளனிக்க செய்யவும் அரசாங்கங்கள் கொண்டு வந்த பல அடக்குமுறைகள் தற்போது சிங்கள மக்களுக்கு எதிராகவும் திரும்பியுள்ளன. இது அதிசயமல்ல. இந்த காலச்சுழற்சி கர்மா பற்றி சிங்கள மக்கள் பாடங்கற்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22