ஆட்டம் காணப்போகும் எதிர்கால இருப்பு

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 10:03 AM
image

“வடக்கில் அபிவிருத்தியற்ற அரச காணிகளின் அனுமதிப்பத்திரத்தினை இரத்தாக்கும் செயற்பாடு தேசிய நிகழ்ச்சி நிரலை இலகுவாக்கும்”

-ஆர்.ராம்-

‘அபிவிருத்தி செய்யாத அரச காணிகளின் அனுமதிப் பத்திரத்தினை இரத்துச்செய்தல்’ எனுத் தலைப்பில் கடந்த மாதம் 25ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்று வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களின் 34 பிரதேச செயலாளர்களுக்கும் வடமாகாண காணி ஆணையாளர் திணைகளத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண காணி ஆணையாளர் அ.சோதிநாதன் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள இக்கடிதத்தில், “பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் பெருமளவானவை அபிவிருத்தி செய்யப்படாதுள்ளமை களவிஜயத்தின் போது கண்டறிப்பட்டுள்ளது. 

அத்துடன், அப்பகுதிகளில் நிரந்தரமாக குடியிருப்போர் அபிவிருத்தியற்ற நிலையில் காணப்படும் காணிகள் காரணமாக தமது வாழ்வாதார செயற்பாட்டை மேற்கொள்ளும் போது சவால்களை எதிர்கொள்வதாகவும் முறையிட்டிருந்தனர். 

எனவே, குறித்த பிரதேசத்தில் அபிவிருத்தியற்று இருக்கும் காணிகளின் உரிமங்களை முறைப்படி இரத்துச் செய்து முதலீட்டுச் செயற்பாட்டிற்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு அறியத்தாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த, அறிவிப்புக்கு அமைவாக, தற்போது வரையில் புதுக்குடியிருப்பு, கரைத்துரைப்பற்று, மாந்தை மேற்கு, வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகங்கள் தமது நிருவாக எல்லைக்குள் அபிவிருத்தியற்றுக் காணப்படும் அனுமதிப்பத்திரக் காணிகள் பற்றிய விபரங்களை அறிவித்திருக்கின்றன. 

அதேநேரம், நல்லூர், வடமராட்சி வடக்கு, நானாட்டான் உள்ளிட்ட பிரதேச செயலகங்கள் தம்மிடத்தில் அவ்விதமான காணிகள் இல்லையென்று குறிப்பிட்டுள்ளன. அடுத்துவரும் நாட்களில் ஏனைய பிரதேச செயலகங்களும் தமது அறிவிப்புக்களைச் செய்யவுள்ளன. 

அரச காணிகளை பொதுமக்களுக்கு அனுமதிப்பத்திர முறையில் (பெமிற்முறை) பகிர்ந்தளித்தல் என்பது நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற நடைமுறையாகும். அதேநேரம், பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் உரிய முறையில் முன்னேற்றம் காணப்படாது விட்டால் அவற்றை பிரதேச செயலகங்களுக்கு காணப்படுகின்ற அதிகாரங்களுக்கு அமைவாக மீளப்பெறுவதும் புதிய விடயமல்ல. 

1953ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டு வரையில் வட மாகாணத்தில் உள்ள அரச காணிகள் 2இலட்சத்து 62ஆயிரத்துக்கும் அதிகமான அனுமதி பத்திரங்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 

இதில் 2013ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் (தொலைந்த ஆவணங்கள் உள்ளடங்கலாக) 95,659 அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, மீளாய்வின் அடிப்படையில் 13,182 அனுமதி பத்திரக் காணிகள்,  அளிப்புப்பத்திரக் காணிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலையில், ஏக நேரத்தில் வடமாகணத்தின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ‘அபிவிருத்தியற்றிருக்கும் காணிகளின் உரிமங்களை முறைப்படி இரத்துச் செய்யுமாறு’ விடுக்கப்பட்ட அறிவித்தல் தான் சர்ச்சைகளையும் பொதுமக்களுக்கு பாரிய அதிருப்திகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது. 

பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் அபிவிருத்தியற்றிருப்பதற்கு இல்லாமமில்லலை. குறிப்பாக, தற்காலிக அனுமதி பத்திரங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் காணிகளைப் பயன்படுத்துவதற்கு உரிய திணைக்களங்கள் வழிசமைத்திருக்காமை, கொரோனா, பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உற்பத்தி முயற்சிகளை முன்னெடுப்பதில் காணப்படும் இயலாமை, இந்தியா உட்பட இதர நாடுகளுக்கு புலம்பெயர்ந்து மீண்டும் நாடு திரும்ப முடியாதுள்ளமை ஆகியன முக்கியமான காரணங்களாகின்றன.

இக்காரணங்களை விடவும், காணிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் உள்நாட்டில் பிற இடங்களில் வசிக்கின்றமை மற்றும் முறையற்ற வகையிலான பகிர்ந்தளிப்பு ஆகியனவும் காணிகள் அபிவிருத்தியற்றிருப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. 

இந்நிலையில், தற்போது வழங்கப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்களை இரத்துச்செய்தலுக்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளமையால், தற்காலிக அனுமதி பத்திரங்கள் மூலம் பெற்ற காணிகளை மட்டுமே நம்பியிருப்போர், தமது காணிகள் பறிபோய்விடுமா, தாம் காணிகளற்றவர்களாகிவிடுமோ என்று பதற்றத்துக்குள்ளாகியுள்ளனர். 

காணி ஆணையாளரின் தெளிவு படுத்தல்

இவ்வாறான நிலையில், வடமாகாண காணி ஆணையாளர் அ.சோதிநாதனுடன், இவ்விடயம் குறித்து வினவியபோது, அவர் தனது ‘அதிகார’ எல்லைக்குள் நின்று பதிலளிப்புக்களைச் செய்திருந்தார். 

குறிப்பாக, “வடக்கு மாகாணத்தில் 22,500பேர் காணியற்றவர்களாக பதிவாகியுள்ளனர். அதில் 14,000பேர் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே அவர்களுக்கான காணிகள் பற்றியும் கரிசனை கொள்ள வேண்டியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “வடமாகாணத்தில் இதுவரையில் தற்காலிக அனுமதிப்பத்திரம் மூலம் வழங்கப்பட்ட காணிகளில் அபிவிருத்தி செய்யப்பட்ட காணிகள், குறைநிலை அபிவிருத்திக் காணிகள், அபிவிருத்தியற்ற காணிகள் என்ற மூன்று வகை காணப்படுகின்றன. 

அதில் எமது களவிஜயத்தின் பின்னரே அபிவிருத்தியற்ற காணிகள் தொடர்பான தகவல்களைப் கோரியுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

 

மேலும், “அபிவிருத்தியற்ற காணிகளின் தகவல்களைக் கோருவதானது, உடனடியாக காணிகளை மீளப்பெறுவதென்று அர்த்தமாகிவிடாது. 

கிராம சேவகரின் அவதானிப்பின் கீழ், பிரதேச செயலகங்களே அந்தக் காணிகள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தினைக் கொண்டுள்ளன. 

ஆகவே, தற்காலி அனுமதிப் பத்திரக் காணிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு காணிகளை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். 

எனினும், “நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால நெருக்கடிகளுக்கு அமைவாக, உள்ளுர் உற்பத்திகளை அதிகரிப்பதன் ஊடாக, வாழ்வாதார மேம்பாட்டை அடைய முடியும் என்ற அடிப்படையில், நீண்டகாலமாக அபிவிருத்தியற்ற நிலையில் உள்ள காணிகளின் அனுமதிகளை இரத்துச் செய்து காணியற்றவர்களுக்கும், முதலீடுகளுக்கும் வாய்ப்பளிப்பது பொருத்தமான செயற்படாக இருக்கும் என்றே கருதுகின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நீண்டகாலமாக பயன்படுத்ததாக அனுமதிப்பத்திரக் காணிகள் சிறுகாடுகளாக காட்சியளிக்கும் நிலையில், காலவோட்டத்தில் அவை, வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் சூழலும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், 8இலட்சத்து 88ஆயிரத்து 400 ஹெக்டெயர் நிலப்பரப்பில் 3இலட்சத்து 92ஆயிரத்து 164ஹெக்டெயர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 44சதவீதம் வனப்பகுதியாக வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறான நிலையில், வளமான காணிகள் வனங்களாக அடையாளப்படுத்தப்படுவதற்கான சூழல்களை ஏற்படுத்தக்கொடுப்பது பொருத்தமற்றது என்ற வடமாகாண காணி ஆணையாளரின் நிலைப்பாடு நியாயமானதே. 

தேசிய நிகழ்ச்சி நிரல்

மக்கள் புரட்சியால் நாட்டைவிட்டு தப்பியோடி தாய்லாந்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவே, நாடாளவிய ரீதியில் பயன்பாட்டில் இல்லாத அரச காணிகளை விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார்.

கோட்டபாய மக்கள் ஆணையை இழந்துவிட்ட நிலையில் அவருடைய பணிப்புரையை ஏனைய எட்டு மாகாணங்களும் துரித கதியில் முன்னெடுக்காத நிலையில் வடக்கு மாகாணம் மட்டும் அதீத கரிசனையைக் கொண்டிருப்பது ஏன் என்பது முதலாவது விடயம். 

வடமாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைத்தல் என்பது தென்னிலங்கையின் ‘தேசிய நிகழ்ச்சி நிரல்’ என்பது வெளிப்படையானது. அந்த நிகழ்ச்சி நிரலின் அடுத்தகட்டத்திற்கு தற்போது சேகரிக்கப்படும் அனுமதிப்பத்திர ‘அபிவிருத்தியற்ற காணிகள்’ பற்றிய தரவுகள் எத்துணைபுரியும் என்பது இரண்டாவது விடயம்.

அபிவிருத்தியற்ற காணிகள் இரத்துச்செய்யப்படும் பட்சத்தில் அந்தக் காணிகள் யாருக்கு வழங்கப்படவுள்ளன என்பதும் முதலீடுகளின் பெயரால் ‘வெளியாரின் உள்வருகை’ அந்த குடிப்பரம்பலை மாற்றும் நிகழ்ச்சி நிரலை இலகுவாக்கும் என்பது மூன்றாவது விடயம். 

ஏற்கனவே வழங்கப்பட்ட காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் ‘தேசிய அதிகார கரங்களால்’ முறையவகையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மறுசீரமைப்புச் செய்யாது குறிப்பிட்ட காணிகள் இரத்துச்செய்வதும், பகிர்ந்தளிக்க முனைவதும் சமநிலையை உறுதிப்படுத்தாது என்பது நான்கவது விடயம்.

போர், இடப்பெயர்வு, உள்நாட்டு பொருளாதாரத்தடை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவே பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கு உரித்துடையவர்கள் இருக்கையில் அவர்களை வினைத்திறனான உற்பத்தியாளர்களாக்குவதற்கு ‘முறையான’ செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்காமையும், வழங்கப்பட்ட கால அவகாசம் போதாமையும் ஐந்தாவது விடயம். 

அனுமதிப்பத்திரங்கள் இரத்தாக்குதல் தமிழக முகாம்களில் உள்ள அகதிகளும் வேறு நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளவர்களும் மீண்டும் தமது தாயகத்திற்கு திரும்புதல் என்ற சிந்தனையை முழுமையாக சிதைக்கும் என்பது ஆறாவது விடயம். 

இவற்றைவிடவும், யாழ் மாவட்டத்தில் 143ஏக்கர்கள் அரச காணிகளும், கிளிநொச்சியில், 1200ஏக்கர்கள் அரச காணிகளும், 1380ஏக்கர்கள் அரச திணைக்களம் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளும் முப்படையினர் வசம் உள்ளன. குறிப்பாக கிளிநொச்சியில் 580ஏக்கர்கள் விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமானவை படைகளிடத்தில் உள்ளன. 

அதேபோன்று, முல்லைத்தீவில் 3600ஏக்கர்கள் அரச காணிகளும், 3000ஏக்கர்கள் வரையிலான திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளும் வவுனியாவில் 960ஏக்கர்கள் அரச காணிகளும், 1500ஏக்கர்கள் வரையிலான திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளும் மன்னாரில் 1800ஏக்கர்கள் அரச காணிகளும், 4000ஏக்கர்கள் வரையிலான திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளும் படைகளிடத்தில் உள்ளன. 

மேற்படி ஐந்து மாவட்டங்களில் படைகளிடத்தில் உள்ள அரச மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளும் வளங்கள் நிறைந்தவை தான். உற்பத்திக்கு ஏதுவானவை தான். 

அத்தோடு, யாழ்ப்பாணத்தில் தனியாருக்குச் சொந்தமான 3567ஏக்கர்களும், கிளிநொச்சியில் 450ஏக்கர்களும், முல்லைத்தீவில் 840ஏக்கர்களும், மன்னாரில் 680ஏக்கர்களும், வவுனியாவில் 540ஏக்கர்களும் படைகளிடத்தில் உள்ளன. இதில் வாழ்வியல் மற்றும் வாழ்வாதார காணிகளும் உள்ளடக்கம். 

அக்காணிகள் சிலவற்றில் படைகளே விவசாய நடவடிக்களை மேற்கொண்டு சந்தைப்படுத்தல்களைச் செய்வது அக்காணிகளின் செழிப்பான வளத்திற்கு சான்று. அவ்விதமான காணிகளைப் பறிகொடுத்து வெறும்கையுடன் இருப்பவர்களிலும் மாகாண மற்றும் தேசிய பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தியவர்களும் உள்ளனர். 

ஆகவே, அபிவிருத்தியற்ற காணிகளின் அனுமதிகளை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை கையிலெடுக்கும் செயற்பாடானது இனமொன்றின் எதிர்கால இருப்பில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற புரிதல் முதலில் ஏற்பட்டால் தேவலை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04