மே 09 ஜூன் 09 வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி விசாரணைக் குழுவை ஸ்தாபிக்கவும் - உதய கம்மன்பில

Published By: Digital Desk 3

23 Aug, 2022 | 10:57 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மே 09, ஜூன் 09 ஆகிய தினங்களில்  நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் அச்சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் ஆராய சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம். வேண்டுமென்றே பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தி நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆகாரபூர்வமாக சாட்சியளிக்க தயார் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியினை தோற்றுவித்து 69 இலட்ச மக்களின் மக்களாணையினை இல்லாதொழித்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினதும்,முன்னாள் நிதியமைச்சரின் தன்னிச்சையான தீர்மானங்களினால் முழு அரசியல் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டு எவரும் எதிர்பார்க்காத அரசியல் தலைமைத்தவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மிலேட்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

நன்மையின் அருகில தீமை இருப்பது போல ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் அரசிற்கு எதிரான செயற்பாடுகளும், சமூக விரேத செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

மே 09 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பில் ஆராய சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம். நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்வங்கள் எதிர்காலத்தில் தோற்றம் பெற கூடாது.

பொருளாதாரத்தை வேண்டுமென்றே பாதிப்பிற்குள்ளாக்கி இராச்சியத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் பொதுஜன பெரமுனவ தலைமையிலான அரசாங்கத்திற்குள் மேற்கொள்ளப்பட்டன. 

பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி தரப்பினர் தொடர்பில் அந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு  அவதானம் செலுத்த வேண்டும்,ஏனெனில் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடி மக்கள் போராட்டமாக ஆரம்பத்தில் வெளிப்பட்டது.

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம்,யார் தன்னிச்சையாக செயற்பட்டார் என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆதாரபூர்வமாக சாட்சியமளிக்க தயார்.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்ததால் சுதந்திர கட்சியின் பெரும்பாலானவர்கள் அரசியல் ரீதியில் தனித்து விடப்பட்டார்கள். இவ்வாறான நிலையில் தான் மஹிந்த எழுச்சி ஊடாக பொதுஜன பெரமுன தோற்றமாகியது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை கொள்கைக்கு முரணாக செயற்படுவதால் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் தனித்து விடப்பட்டுள்ளார்கள். இவர்களுக்காகவே எதிர்வரும் மாதம் 04ஆம் திகதி பரந்துப்பட்ட கூட்டணியை ஸ்தாபிக்கவுள்ளோம்.

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும,போராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாகவே உள்ளார்கள். சுயாதீனமாக செயற்படுவதாக அவர்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்து, எதிர்க்கட்சியாக செயற்பட்டால் கூட்டணியில் அவர்களையும் இணைத்துக்கொள்ள பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்