இலங்கை வரும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவுடன் இணக்கப்பாட்டை அடைந்துகொள்ள மத்திய வங்கி எதிர்பார்ப்பு - ஆளுநர்

Published By: Vishnu

18 Aug, 2022 | 09:26 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் நாட்டிற்கு வருகைதரவிருப்பதுடன் இதன்போது பொருளாதார உதவிச்செயற்திட்டம் தொடர்பான ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அதன்போது இணக்கப்பாடு எட்டப்படும் நுண்பாகப்பொருளாதார செயற்திட்டம் மற்றும் கடன்சுமையைக் குறைப்பதற்கான திட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு பல்தரப்பு கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதத்திற்கான நாணயச்சபைக்கூட்டம் 17 புதன்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்து விளக்கமளிக்கையிலேயே ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி மத்திய வங்கியின் நாணயச்சபைக்கூட்டத்தில் துணைநில் வைப்பு வசதி வீதத்தை 14.5 சதவீதமாகவும், துணைநில் கடன் வசதி வீதத்தை 15.5 சதவீதமாகவும் அதே மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை 'அத்தியாவசியமற்ற இறக்குமதி செலவினங்களைக் குறைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சுருக்கமடைந்த நாணயக்கொள்கை மற்றும் இறைக்கொள்கை என்பன இணைந்து தனியார்துறைக்கான கொடுகடனில் குறிப்பிடத்தக்களவிலான சுருக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதுமாத்திரமன்றி கடந்த 2021 ஆம் ஆண்டில் 6.1 சதவீதமாகப் பதிவான உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது, இவ்வருடம் 3.2 சதவீதமாக வீழ்ச்சியடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது' என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

 இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு:

நாம் கடந்த காலங்களில் முன்னெடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத் தற்போது நேர்மறையானதும் முன்னேற்றகரமானதுமான சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கமுடிகின்றது. 

குறிப்பாக முன்னர் நிலவிய தீவிர வெளிநாட்டுக்கையிருப்புப் பற்றாக்குறை இப்போது ஓரளவிற்குத் தணிந்திருப்பதுடன், குறுங்காலக் கடனுதவிகள் இல்லாத நிலையிலும் மிக அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளக்கூடிய இயலுமை காணப்படுகின்றது. அதேபோன்று பொருட்களின் விலைகளும் ஓரளவிற்கு தளம்பல்கள் அற்ற - நிலையான மட்டத்தை எட்டியிருப்பதை அவதானிக்கமுடிகின்றது. 

பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற போதிலும், கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது அதன் அதிகரிப்பு வேகம் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் 70 சதவீதமாக உயர்வடையும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது 65 சதவீதமாக அமையும் என்று இப்போது எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் ஏற்றுமதிகளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், ஹவாலா உண்டியல் முறை மூலமான கொடுக்கல், வாங்கல்களுக்கான மட்டுப்பாடுகள் போன்றவற்றால் இப்போது கறுப்புச்சந்தை நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளன.

 அடுத்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் நாட்டிற்கு வருகைதரவிருப்பதுடன் இதன்போது பொருளாதார உதவிச்செயற்திட்டம் தொடர்பான ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்போது இணக்கப்பாடு எட்டப்படும் நுண்பாகப்பொருளாதார செயற்திட்டம் மற்றும் கடன்சுமையைக் குறைப்பதற்கான திட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு பல்தரப்பு கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

எனவே இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் பொருளாதார மீட்சியை முன்னிறுத்திய நடவடிக்கைகள் மேலும் துரிதமடையும். 

அதேவேளை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் யுத்தக்கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களுக்கு வருகைதந்திருப்பதன் விளைவாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் பாதிப்படைவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. சுயாதீனக்கட்டமைப்பான சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார செயற்திட்டம் சார்ந்த எதிர்பார்ப்புக்களை உரியவாறு பூர்த்திசெய்வதே அவசியமானதாகும் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41