தண்ணீர்க் குடங்களே எனது வாத்தியங்கள் - கட வாத்திய கலைஞர் அப்துல் ஹலிம்

Published By: Nanthini

16 Aug, 2022 | 01:26 PM
image

(மா. உஷாநந்தினி) 

குழந்தையை தலைக்கு மேல் வீசிப் பிடித்து விளையாடுவது போல் 'கடத்தை' வீசிப் பிடித்து வாசிப்பதில், தமிழ்நாட்டின் கட வாத்திய மேதை விக்கு விநாயக்ராம் போலவே வித்தை கற்றவர், தென்னிந்தியாவின் கின்னஸ் புகழ் கட வாத்திய கலைஞர் ‍டொக்டர் அப்துல் ஹலிம்

இவர் கடம், டாம்பரின், ஜெம்பே ஆகிய இசைக்கருவிகளை உலகிலேயே மிக வேகமாக வாசிப்பவர் என Record Holders Republic, UK அங்கீகரித்தமை உட்பட இசையில் பத்து சாதனைகளை நிகழ்த்தியவர்.  

உலகிலேயே 11 மீட்டர் உயரம், 2.52 மீட்டர் விட்டமுடைய பெரிய கடமொன்றை உருவாக்கி, அதை வாசித்து கின்னஸ் மற்றும் லிம்கா சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார். 

ஒரே இடத்தில் நூறு மாணவர்களை திரட்டி, நாள் முழுதும் கடம் கச்சேரி நடத்தியிருக்கிறார். இதுவே உலகின் மிகப் பெரிய கடம் கச்சேரியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 

உலக சாதனை பயிற்சியாளராக பணியாற்றி வரும் இவரது வழிகாட்டலில், 300க்கு மேற்பட்ட மாணவர்கள் இன்று இசையில் பலவிதமாக உலக சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். 

கையில் கிடைக்கிற எந்தப் பொருளையும் இசை எழுப்பக்கூடிய வாத்தியமாக மாற்றத் தெரிந்த வாத்திய வல்லுநர், அப்துல் ஹலிம் கடின உழைப்பால் சாதித்த களிப்பில் எமக்கு வழங்கிய நேர்காணல் இனி...

* உங்களை பற்றி...

நான் அப்துல் ஹலீம். சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை. தற்போது திருநெல்வேலி மாவட்டம், வடக்கன் குளத்தில் வசித்து வருகிறேன். அம்மா கேரளா, திருவனந்தபுரத்தையும், அப்பா கன்னியா குமரி, குளச்சலையும் சேர்ந்தவர்கள். 

எனது மனைவி பெயர் மஞ்சு. மகன் ஆரிஃப் இப்னு அப்துல் ஹலீம். ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். அவரும் இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார். 

* இசை மீதான ஆர்வம் எப்படி, யாரால் வந்தது?

எனது தாயின் தாலாட்டுப் பாடல்கள் தான் இசையின் மீதான ஆர்வத்தை தூண்டியது. சிறு வயதிலேயே தண்ணீர் குடங்கள் தான் எனது இசைக் கருவிகள். 

* கச்சேரிகளில் பக்க வாத்தியமாக வாசிக்கப்படும் கடத்தை பிரதான கருவியாக மாற்றும் எண்ணம் எப்படி வந்தது?

சாதாரண மண்ணால் செய்யப்படும் இசைக் கருவியிலும் அருமையான, மனதை மயக்கும் இசையை கொண்டுவர முடியும் என நிரூபிப்பதற்காகவே அதனை ஒரு சவாலாக எடுத்து செய்கிறேன். எனக்கு முன்னரே கடம் மேதைகளான திரு.விக்கு வினாயக்ராம் சார், எனது குருவான திரு. வி. சுரேஷ் அவர்களும் இதனை நிரூபித்துள்ளனர்.

* உங்கள் வாழ்க்கையில் கடம் என்பது...?

என்னை ஒரு நல்ல நிலையில் வாழ வைத்துக்கொண்டிருப்பது கடம் தான். 

கின்னஸ் உலக சாதனை, அமெரிக்க கெண்டகி மாநில அரசால் வழங்கப்படும் கெண்டகி கொலோனல் பட்டம், ஜோர்ஜியா நாட்டின் நைட் பட்டம், வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழக அரசின் கலைவளர்மணி பட்டம் என பல வெற்றிகளை பெற வைத்தது கடமும் எனது குருவும் தான்.

* இசை கற்பித்த குரு யார்? வாத்தியங்களை மீட்க எங்கு கற்றீர்கள்?

எனது முதல் குரு திரு. ஐயன்பாறவிளை கிருஷ்ணன் அவர்கள். 12ஆம் வகுப்பு படிக்கும்போது அவரிடம் தபேலா கற்றேன். 

அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி. மியூசிக் மிருதங்கம் கற்று வந்தபோது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கடம் மேதை திரு. வி. சுரேஷ் அவர்களின் அருமையான கடம் வாசிப்பில் மயங்கிப்போய், அவரிடமே கடம் கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். 

தொடர்ந்து கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் ஆர்.எல்.வி இசைக் கல்லூரியில் எம்.ஏ. மிருதங்கம் பயின்றேன். பின்னர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் (கடம் ஆய்வு) முடித்தேன்.  

* நீங்கள் இசைக்கருவி வாசிப்பதில் புதுமை செய்ய முற்பட்டபோது பாரம்பரிய இசையை வழிபடும் மூத்த இசைக் கலைஞர்கள் உங்களது முயற்சியை வரவேற்றனரா அல்லது விமர்சித்தனரா? 

கர்நாடக இசையில் கோர்வை, மோறா, முத்தாய்ப்பு போன்ற விடயங்களை வாசிக்கும் முறையினை எனது குரு கற்றுத் தந்திருக்கிறார். அதில் நான் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஆனால், நான் இசைக் கச்சேரிகளில் வாசிக்கப்படாத சிரட்டை, தண்ணீர் குவளை, பேப்பர் போன்றவற்றை கருவிகளாக வாசிக்கும்போது, இசை கற்காதவர்களையும் அது சென்றடைகிறது. அதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. 

* என்னென்ன இசைக்கருவிகளை வாசிப்பதில் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்? 

கடம், தபேலா, டிரம்ஸ், செண்டை, ஜெம்பே, தவில் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கிறேன். 

* கடங்களில் வகைகள் இருக்கின்றனவா?

எல்லா சுருதிக்கும் வெவ்வேறு வகையான கடங்கள் உண்டு. எனது வீட்டில் கிட்டத்தட்ட 300 கடங்கள் இருந்தன.

* கடத்துக்கு எது போட்டி வாத்தியம்?

எல்லா இசைக் கருவிகளும் ஒன்றுக்கொன்று போட்டி தான். 

இசைக் கச்சேரிகளில் நல்ல பெயர் கிடைப்பது வாசிப்பவரை பொறுத்தது. அது எந்த வாத்தியமானாலும் சரி. மேடையில் நல்ல பெயர் கிடைக்க வீட்டில் நன்றாக பயிற்சி செய்ய வேண்டும். 

எமது இசைக் குழுவில் இரண்டு தவில், ஒரு கடம், பியானோ மற்றும் டிரம்ஸ் இசைக்கப்படுகின்றன. எல்லாம் ஒன்றுக்கொன்று போட்டி தான்.

* நீங்கள் உருவாக்கி வரும் புதிய கருவி? தோள் கருவியா?

ஆம். எனது குரு கடம் மேதை திரு.வி. சுரேஷ் அவர்களின் பெயரில் 'சுரேஷ புஷ்கரம்' எனும் தோள் வாத்தியத்தை தயாரித்து வருகிறேன். இது மிருதங்கம் போன்ற அமைப்பில் இருக்கும். தவில் போல விரல்களில் கூடு அணிந்து, கம்பால் வாசிக்க வேண்டும். 

எனது குருவால் தான் நான் இவ்வளவு வளர்ந்திருக்கிறேன். அவருக்கு என்ன கொடுத்தாலும் அவர் எனக்குத் தந்த நல்ல வாழ்க்கைக்கு ஈடாகாது. 

* உங்கள் கைபடாத இசைக்கருவி? 

ஆயிரக்கணக்கான இசைக் கருவிகளை கற்று வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள இந்த வாழ்நாள் போதாதே. 

* வாசிப்பில் உணரும் கடினமான விடயம்?

எனது குருவின் அசாதாரணமான வாசிப்பை கொண்டு வர பார்க்கிறேன். அந்தளவுக்கு வாசிக்க முயற்சி செய்வது கடினமாக தான் உள்ளது. 

* வெறுமனே வாத்தியக் கலைஞராக அன்றி, இசையில் சாதனை படைக்கவும் உங்களை தூண்டியது யார்? 

எனது தந்தை தான். 

நான் 5ஆம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன். குற்றாலீஸ்வரன் அவர்கள் நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்ததாக செய்தித்தாள்களில் வந்தது. அதனை காட்டி "நீயும் கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும்" என தந்தை சொன்னார். அது தான் நான் சாதித்ததற்கும், மாணவர்களை சாதனையாளர்களாக நான் உருவாக்குவதற்கும்  காரணமாக அமைந்தது. 

* இந்த சாதனைகளுக்காக நீங்கள் எத்தகைய பயிற்சிகளை மேற்கொள்கிறீர்கள்?

தினமும் 4 மணிநேரம் பயிற்சி செய்கிறேன். 

* தற்போது இளைஞர்கள், சிறுவர்கள் உங்களை குருவாக ஏற்று, இன்னும் பல கோணங்களில் சாதித்து வருகின்றனர். அவர்களை பற்றிய உங்கள் அபிப்பிராயம்?

முந்நூறுக்கு மேற்பட்ட எனது சாதனை மாணவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ்களால் பல சலுகைகள், வேலை வாய்ப்புகள், மேற்படிப்புக்கான உதவிகள் கிடைத்துள்ளன. அதனால் பல மாணவர்கள் ஆர்வமுடன் இசையை கற்று வருகின்றனர். 

ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கும் நான் இலவச பயிற்சி அளிக்கிறேன். 

* சாதனை நோக்கினை கடந்து, கொரோனா பாதுகாப்பு, கண்தானம் என சமூகத்துக்கு வேண்டிய விழிப்புணர்வையும் இசையோடு இணைத்து வழங்க உங்கள் மாணவர்களை  உற்சாகப்படுத்தி வருகிறீர்கள். சமூக அக்கறையை அடுத்த தலைமுறைக்கு பாய்ச்சும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

நம் வாழ்வு நிலையில்லாதது. இதில் பலருக்கு உதவி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதனையே எனது மாணவர்களுக்கும் கற்பித்து வருகிறேன். 

எனது மகன் ஆரிஃப் இப்னு அப்துல் ஹலீம் கண் தானம் செய்துள்ளார். மற்றவர்களுக்கு உதவி செய்ய நானும் எனது மாணவர்களும் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். 

* ஆணி விரிப்பில் உட்கார்ந்து தவில் வாசிப்பது போன்ற கடுமையான சாதனைகளை உங்கள் மாணவர்கள் நிகழ்த்துவதும், அவர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிப்பதும் மிக ஆபத்தான விடயமாயிற்றே.... இது எப்படி சாத்தியமானது?

ஆபத்தையும் தாண்டி 'ஜெயிக்க வேண்டும்' என நினைக்கும் மாணவர்கள் கண்டிப்பாக சாதிப்பார்கள். 

* "கடம், தவில் இரண்டையும் ஒரே நேரத்தில் வாசிக்க முடியாது" என விக்கு விநாயகராம் ஐயா ஒரு முறை பேட்டியில் கூறினார். நீங்கள் இரண்டையும் வாசிப்பதில் கைதேர்ந்தவர்.  கச்சேரிகளில் இவ்விரண்டு வாத்தியங்களையும் சம நேரத்தில் வாசித்த அனுபவத்தை பற்றி கூறுங்கள்...

நிறைய நிகழ்ச்சிகளில் நான் தவிலுடன் கடம் வாசித்துள்ளேன். கடம் இருந்தால், கூட சேர்ந்து வாசிக்கும் நல்ல தவில் கலைஞர்கள் கொஞ்சம் சத்தத்தை குறைத்து வாசிப்பார்கள். 

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் திரு. ஆரூரன் அவர்களது இசை நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் கடம் மற்றும் தவில் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. 

* சில மூத்த இசை மேதைகளால் இசைக்கருவிகளை கையாள்வதில் கட்டுப்பாடுகள், வரம்பு வரைமுறைகள் கற்பிக்கப்படுகிறது... இதை நீங்கள் ஏற்கிறீர்களா? 

அந்த கட்டுப்பாடுகளுக்குள்ளும் சில புதுமைகளை செய்வதுதான் சவாலானது. அதனை எல்லா நிகழ்ச்சிகளிலும் சந்தித்து வருகிறேன். 

* இன்றைக்கு இசைத்துறையில் உள்ள குறைபாடாக நீங்கள் கருதுவது? 

குறைகள் எல்லா துறைகளிலும் இருக்கவே செய்யும். அதையும் தாண்டி, ஜெயிக்கும் வெறி இருந்தால் வெற்றி தானாக தேடி வரும். ஒரு வழியை அடைத்தால், அடுத்த வழியை தேடி முன்னேற வேண்டும். 

* நீங்கள் இந்திய திரையிசையில் வாசித்திருக்கிறீர்களா? 

 வாசித்ததில்லை. 

எனினும், அப்துல் ஹலீம்'ஸ் டால், 'க்ளேபாட்' ஆகிய இசை அல்பங்களை தயாரித்தேன். பல்கேரியா நாட்டு இசைக் கலைஞரான திரு. ஜியார்ஜி ஆங்கலோவ் அவர்களுடன் வாசித்து 'கிராஸ் ரோட்ஸ்' எனும் இசை அல்பத்தினை அமைத்தேன். 'செபிர் சோன்' மற்றும் 'கடம்' என இரண்டு இசைக் குறும்படங்களை தயாரித்துள்ளேன்.

* உங்களது மிக உயர்ந்த இலக்கு என்ன?

எனது குருவை போல அசாதாரணமாக வாசிக்க வேண்டும் என்பது சவாலான இலக்கு. அது இந்த வாழ்வில் நடக்குமா என தெரியவில்லை. இசைத்துறையின் உயர்ந்த விருதான கிராமி விருதை வாங்க வேண்டும். குறைந்த பட்சம் ஆயிரம் மாணவர்களையாவது கின்னஸில் இடம்பிடிக்கச் செய்து, பல சலுகைகளையும் உயரங்களையும் தொட வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right