சர்வ கட்சி அரசமைக்கும் முயற்சி வெற்றி பெறுமா ?

Published By: Digital Desk 5

14 Aug, 2022 | 02:50 PM
image

ரொபட் அன்டனி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன  தலைமையில் சர்வ கட்சிகளையும் கொண்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  

கடந்த சில நாட்களாகவே இவ்வாறான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றன.  ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிரணியில்  அங்கம் வகிக்கின்ற கூட்டு கட்சிகள்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,  தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,  தமிழ் தேசிய கூட்டமைப்பு,  தமிழ் தேசிய மக்கள் கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி   மற்றும் விமல் வீரவன்ச, உதய கம்பன்பில,  அனுர யாப்பா அணி உள்ளிட்ட  சுயாதீன  அணிகள்  என சகல தரப்பினருடனும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்  சந்தித்து  சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

ஜனாதிபதி தெரிவுக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில்  எதிரணியில் போட்டியிட்ட  டலஸ் அழகப்பெரும  அணியும் ஜனாதிபதியை  சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.  

இந்நிலையில் ஐக்கிய மக்கள்  சக்தி ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க முடியாது என்றும் எனினும் பாராளுமன்றத்தில் அமைக்கப்படுகின்ற குழுக்களில் இடம்பெற்று தமது பங்களிப்பை வழங்குவதாகவும்  அறிவித்திருந்தது. 

சர்வகட்சி  அரசாங்கத்தில் பங்கேற்பதில்லை,    அமைச்சுப்   பதவிகளை ஏற்பதில்லை,  மாறாக பாராளுமன்றத்தில் நிறுவப்படுகின்ற குழுக்களில் பங்கேற்று நாட்டுக்கு சேவை ஆற்றுவது என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி  உறுதியாக இருக்கின்றது.  

இந்த விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக தனது உறுதியான நிலைப்பாட்டை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையிலேயே சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  

எனினும் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் ஜனாதிபதியும் பிரதமரும் ஈடுபட்டு வந்தாலும் கூட அது எந்தளவு தூரம் வெற்றி அடையும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.  காரணம் தற்போது கூட சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் நடைமுறை,  அதன் கட்டமைப்பு, அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை தொடர்பாக கட்சிகளுக்குள் பாரிய முரண்பாடுகள் எழுவதாக தெரிவிக்கப்படுகிறது.  குறிப்பாக சர்வகட்சி அரசாங்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளும் பல்வேறு யோசனைகளை முன் வைத்திருக்கின்றன. 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தேசிய சுதந்திர  முன்னணி என்பனவும் இது குறித்து   யோசனைகளை முன் வைத்திருக்கின்றன.  அதாவது அமைச்சு பதவிகளின் எண்ணிக்கை,   எவ்வளவு காலத்தில் தேர்தலுக்கு செல்ல வேண்டும் ?  போன்ற காரணங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முரண்பாட்டு  நிலைமை இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்   கிரியல்ல கூட சர்வகட்சி அரசாங்கத்தின் காலவரையறையை தெரிவித்தால் மட்டுமே தங்களால் பங்களிப்பு வழங்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.    

அதாவது தற்போதைய இந்த நெருக்கடியான நிலையில், சகலரும்  இணைந்து செயல்பட வேண்டும் என்ற விடயம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் செயற்பாட்டு ரீதியில் அதற்கு வடிவம் கொடுப்பதற்கு சகல தரப்பினரும் ஒன்றாக வருவதில் தயக்கம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதியை சந்தித்து  பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடாகியிருந்தது.  

அதாவது ஜனாதிபதி தலைமையிலான பேச்சு வார்த்தையில் பங்கேற்று அரசாங்கத்தில் பங்கேற்க மாட்டோம் என்பதை தெரிவிக்க இருப்பதாக ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் தெரிவித்தது.    ஆனால் பின்னர்   ஜனாதிபதியுடனான  சந்திப்பையும் தாங்கள் புறக்கணிப்பதாக அந்த கட்சி அறிவித்தது. 

அதன்படி சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் ஒரு பக்கத்தில் இடம் பெற்றாலும் கூட மறுபுறத்தில் தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் நிலைமையை காணமுடிகிறது. சகல அரசியல் கட்சிகளும் தேர்தல் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருப்பதை காண முடிகிறது.  

அதற்கான கூட்டணிகளை அமைப்பதையும் எவ்வாறு போட்டியிடுவது? எந்த சின்னத்தில் போட்டியிடுவது எந்த கூட்டணி அமைத்து போட்டியிடுவது?  என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போதைய நிலையில் கட்சிகள் மட்டத்தில் இடம்பெறுவதற்கு ஆரம்பித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. 

இது இவ்வாறு இருக்க கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ  ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும்  இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டமை அரசியல் களத்தில் தீர்க்கமானதாக காணப்படுகின்றது.  

இந்த இரண்டு தரப்பையும் ஒன்றிணைப்பதே தனது இறுதி  முயற்சி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.  இந்த முயற்சிகளும்  அடுத்த தேர்தலுக்கான சமிக்ஞையை காட்டுவதாக அமைந்துள்ளது. 

அந்த வகையில் விரைவில் தேர்தல் ஒன்றை சந்திக்க வேண்டிவரும் என்ற நிலைப்பாட்டிலேயே  பெரும்பாலான அரசியல் கட்சிகள் இருக்கின்றன.  அதற்கான வியூகங்களையும் அரசியல்  நகர்வுகளையும்  உருவாக்கிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. 

குறிப்பாக பாராளுமன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும் சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரம் கிடைக்கும்.  எனினும்  அவர் பாராளுமன்றத்தை எப்போது கலைப்பார்?  பொது தேர்தலை எப்போது நடத்துவார் என்பதை தற்போது உறுதியாக கூற முடியாது.  காரணம் தற்போது தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளும் அளவுக்கு நாட்டின் நிதி நிலைமை  பொருளாதார நிலைமை இல்லை.  

தற்போது எரிவாயு பிரச்சினை ஓரளவு தீர்ந்திருக்கிறது.  எரிபொருள் பிரச்சனை  கியு, ஆர். முறை  மூலமாக ஒரு முறையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.  ஆனால் இதுவரை முழுமையான முறையில் எரிபொருள் மக்களுக்கு கிடைப்பதாக தெரிவிக்கப்படவில்லை. இருக்கின்ற எரிபொருளை ஒரு அளவு குறிப்பிடத்தக்க வகையில் பகிர்ந்து கொடுக்கும் ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.   

இவ்வாறு எரிபொருள் பற்றாக்குறை நிதி நெருக்கடி இருக்கும்போது எவ்வாறு தேர்தல் ஒன்றுக்கு செல்வது என்பது ஒரு கேள்விக்குறியான விடயமாகும். எப்படியிருப்பினும் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் என்ற விடயம் அரசியல் கட்சிகளால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்ட வருகின்றது.  

பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய பல்வேறு அரசியல் பிரதிநிதிகள் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும்  மக்களின் ஆணையுடன் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.   

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதனை பிற்போடும் நோக்கம் இல்லை என்று பிரதமர் தினேஷ்  பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.  

எனவே உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெரும்பாலும் அடுத்த வருடம்  மார்ச் மாதம் அளவில் நடத்தப்படலாம் என்ற நிலைமை காணப்படுகிறது.  அதாவது தற்போது இந்த நெருக்கடி நிலை ஒரு அளவு குறைவடையும் பட்சத்தில்   தேர்தல் ஒன்று நடத்தப்படும் சாத்தியமிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. 

அதேபோன்று மாகாண சபை தேர்தல் பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ளது.  அதற்கு தேர்தல் முறை தொடர்பான சட்ட பிரச்சனை   காணப்படுகின்றது.  காரணம் 2017 ஆம் ஆண்டு பழைய மாகாண சபை தேர்தல் முறை மாற்றப்பட்டு புதிய முறை கொண்டுவரப்பட்டது. 

60 வீத தொகுதிமுறை 40 வீத விகிதாசார முறை என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட தேர்தல் முறைக்கு அமைய உருவாக்கப்பட்ட எல்லை நிர்ணய  பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.  பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை நிராகரிக்கப்பட்டதனால் புதிய தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.  

மேலும்  பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதாயினும்கூட அதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதுவரை அந்த நடவடிக்கைகள் எதுவும் இடம் பெறவில்லை.   மேலும்  மாகாண சபை தேர்தலும் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்ற விடயமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.  

காரணம் கடந்த பல வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி  இயங்கிக் கொண்டிருக்கின்றன.  ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளினால் மாகாண சபைபள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  மக்களின் அன்றாட செயல்பாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்ற மாகாண சபைகள்  இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயல்படக்கூடாது என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகிறது. 

இந்த பின்னணியில் சர்வகட்சி  அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன.  எனவேதான் தற்போது அரசியல் கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கத்தில் பங்கேற்று செயல்பட முயற்சிக்கின்றனவா?    அல்லது   தேர்தல் ஒன்றை நடத்தி அதனூடாக புதிய பிரதிநிதித்துவங்களை பெறுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.  

காரணம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் கட்சிகள் எந்தளவு தூரம் அர்ப்பணிப்பை வெளிக்காட்டினாலும் அது செயல் வடிவம் பெறுவதில் தொடர்ச்சியாக நெருக்கடி இருப்பதை காண முடிகிறது.  ஜனாதிபதியும்  பிரதமரும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான வியூகங்களை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  தொடர்ச்சியான  பேச்சுவார்த்தைகளை  நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் இது தொடர்பில் முழுமையான ஒரு இணக்கப்பாட்டை எடடிக்கொள்ள  முடியாத நிலைமையும் நீடித்துக் கொண்டிருக்கின்றது. 

  

எனினும்  தற்போது  முதலில் நாட்டு மக்களை  பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை காணப்படுகின்றது என்பதை சகலரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதுமட்டுமின்றி சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஸ்திரமான அரசியல் நிலைமை காணப்படும் பட்சத்தில் மட்டுமே சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.  அதேபோன்று சர்வதேச கடன் மறுசீரமைப்புகளை செய்து கொள்ள முடியும்.  சர்வதேச நாணய நிதியத்தின் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும்.  

எனவே இதற்கு ஒரு ஸ்திரமான அரசாங்கம்  உருவாக்கப்பட வேண்டும்.     மாறாக தற்போதைய சூழலில் தமது அரசியல் எதிர்கால தொடர்பாக கணக்குப் போட்டுக் கொண்டிருப்பது நாட்டுக்கு  எந்தளவுத்துறை நன்மை பயக்கும்  என்பதனை  சிந்தித்து பார்க்க வேண்டும்.  

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவிலிருந்து பிரிந்து  சுயாதீன அணிகளாக செயல்படுகின்ற தரப்பினர் ஒரு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இது  தொடர்பான அறிவிப்பு சில தினங்களில்  வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது  இந்த கூட்டணி முயற்சியும்   தேர்தலை நோக்கிய நகர்வாகவே காணப்படுகின்றது.  அதாவது விரைவில் ஒரு தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் எந்த ஒரு முகாமாக, அணியாக போட்டியிடுவது என்பதற்கான முயற்சியாகவே இது உள்ளது.      

மேலும்  ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்பும்  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.  குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளும்  இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.     

இந்த பின்னணிகளுக்கு மத்தியில் சர்வ கட்சி அரசாங்க முயற்சி  நிறைவேறுமா? அந்த முயற்சிகள் வெற்றி பெறுமா ?   என்பது கேள்விக்குறியாக பார்க்கப்படுகிறது.  எப்படியிருப்பினும் நாட்டின் தற்போதைய நெருக்கடியை போக்குவதற்கான நோக்கம் கருதி சகல தரப்புக்களும்  செயல்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. என்ன செய்யப் போகின்றார்கள்  என்பதை மக்களும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04