கலங்க வைத்த கப்பல்

Published By: Digital Desk 5

13 Aug, 2022 | 02:11 PM
image

சுபத்ரா

“தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான காரியங்களை இலங்கை முன்னெடுப்பதை தவிர்க்க முனையவில்லை என்றே இந்தியா சிந்திக்கிறது. அதுபோல, தனக்கு அனுமதி வழங்கி விட்டு இந்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து அனுமதியை இரத்துச் செய்திருப்பதாக சீனா கருதுகிறது”

“சீனக் கப்பல் வருகை தந்தாலும் சரி, வருகை தராவிட்டாலும் சரி அது இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்”

சீனாவின் ஏவுகணை மற்றும் செய்மதி கண்காணிப்பு ஆய்வுக் கப்பலான யுவான் வாங் 5 இன் அம்பாந்தோட்டை நோக்கிய பயணம், பிராந்திய, பாதுகாப்பு அரசியலில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருக்கிறது.

இந்தச் சிக்கலை சீனா உருவாக்கியது என்று கூறுவதை விட, ராஜபக்ஷவினர் உருவாக்கி விட்டனர் என்பதே சரியானது.

ஏனென்றால், கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த கடைசி நாளான- ஜூலை 12ஆம் திகதியே இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அந்த அனுமதியைக் கொண்டு தான், ஜூலை 14ஆம் திகதி, சீனாவின் ஜியாங்ஜின்னில் இருந்து, யுவான் வாங் 5 அம்பாந்தோட்டை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.

சீன கப்பலுக்கு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டது, அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜிஎல்.பீரிஸுக்கு தெரியாது என்று கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவே பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்திருந்தார்.

வெளிவிவகார அமைச்சருக்குத் தெரியாமல், அமைச்சின் அதிகாரிகள் இவ்வாறான முடிவை எடுப்பதற்கு, அதுவும், நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்திருந்த சந்தர்ப்பத்தில், இந்த முடிவை எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.

ஆனாலும், அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆதரவு இருந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

தனது பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் எதற்காக அவர் சிக்கலானதொரு முடிவை எடுத்தார் அல்லது எடுப்பதற்கு அனுமதித்தார் என்பது சர்ச்சைக்குரிய விடயமாகவே இருக்கிறது.

இது அவராக எடுத்த முடிவா அல்லது அவரை அந்த முடிவை எடுக்கத் தூண்டும் வகையில், சீனத் தரப்பு அழுத்தங்களைக் கொடுத்ததா என்ற சந்தேகமும் உள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலக முடிவு செய்த பின்னரே, இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக, நாடுகளின் தலைவர்கள் தங்களின் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பதுண்டு.

ஏனென்றால் அது சர்ச்சைகளையும். குழப்பங்களையும் ஏற்படுத்துவதுடன் நாட்டின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட அந்த முடிவு, இலங்கைக்குப் பெரும் இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

720 அடி நீளம் கொண்ட சீன ஆய்வுக் கப்பல் கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்திருக்க வேண்டும்.

ஆனால், இந்தப் பத்தி எழுதப்படும் வரை, அது அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடையவில்லை.

சுமார் 655 கடல் மைல் தொலைவில் அது தரித்திருப்பதாக பிந்திய தகவல்கள் கூறின.

இந்தியத் தரப்பின் எதிர்ப்புகளால், இந்தளவுக்கு நிலைமை மோசமடையும் என்று சீனாவோ இலங்கையோ எதிர்பார்க்கவில்லை.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், 2014ஆம் ஆண்டு சீன நீர்மூழ்கி கப்பல் இரண்டு முறை கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் சென்ற போது இந்தியா கடும் கோபம் அடைந்தது.

அது ஆட்சி மாற்றத்துக்கு திட்டமிடும் அளவுக்கு நிலைமைகளைக் கொண்டு சென்றது. அதன் பின்னர் தான் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார்.

அமெரிக்க, இந்திய புலனாய்வு பிரிவுகள் தான் தன்னைத் தோற்கடித்ததாக மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

அந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், மீண்டும் சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்துச் செல்வதற்கு சீனாவிடம் இருந்து அனுமதி கோரப்பட்ட போதும், அதனை அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நிராகரித்திருந்தார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது தான், வெளிவிவகார அமைச்சினால், சீன ஆய்வுக் கப்பலுக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அவர் ஜனாதிபதியாகிய பின்னர், இந்த விவகாரம் அவரது அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை தோற்றுவித்திருக்கிறது.

சீனக் கப்பல்கள் பல கொழும்பு, அம்பாந்தோட்டைக்கு மாத்திரமன்றி, திருகோணமலை துறைமுகத்துக்குக் கூட வந்து சென்றிருக்கின்றன. 

ஆனால், ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டுமே, இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுகின்றன.

சீனாவின் ஏவுகணை மற்றும் விண்வெளி கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, இன் அம்பாந்தோட்டை வருகையை, இந்தியா விரும்பவில்லை. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதில் ஒன்று, சீனக் கப்பலின் கண்காணிப்புத் திறன். 

750 கிலோ மீற்றர் சுற்றளவு கொண்ட பிரதேசத்தை கண்காணிக்கும் திறன் கொண்டது என்பதால், அது இலங்கையில் தரித்து நிற்கும் போது, தென்னிந்தியாவிலுள்ள முக்கியமான நிலைகள் கண்காணிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன.

கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களும் அவற்றில் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 

ஆனால், சீன ஆய்வுக் கப்பல் ஏவுகணைகள் மற்றும் செய்மதிகளை கண்காணிக்கும் வசதி கொண்ட கப்பலே தவிர, அணுமின் நிலையங்களை கண்காணிக்கும் ஒன்றல்ல.

சில சமயங்களில் வேறு கண்காணிப்பு கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கலாம். அது வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியா தனது கேந்திர நிலைகள் சீனாவினால் கண்காணிக்கப்படுவதை விரும்பவில்லை. அதனை கடுமையாக எதிர்க்கிறது.

இந்த நிலையிலேயே கொழும்பின் ஊடாக சீனாவுக்கு தடை போட்டிருக்கிறது இந்தியா.

கப்பலின் வருகை உச்சக் கட்டப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வேறுவழியின்றி சீன தூதரகம் ஊடாக கடந்த 8ஆம் திகதி ஒரு தகவலை அனுப்பியது.

யுவான் வாங் 5 கப்பலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யாவிட்டாலும், அதன் பயணத்தை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அதிகாரபூர்வமாக கோரப்பட்டது.

பயணத்தைப் பிற்போடுமாறு கோருவது, கிட்டத்தட்ட இப்போதைக்கு இரத்துச் செய்வது போலத் தான்.

அதனை மீறித் தான், 11ஆம் திகதி வரை அது 655 கடல் மைல் தொலைவு வரை நெருங்கி வந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அது தரிப்பதற்கு துறைமுக தலைமை அதிகாரியான கப்டன் நிர்மல் டி சில்வா அனுமதி வழங்கவில்லை.

கப்பலை அனுமதிக்குமாறு தமக்கு உயர்மட்ட உத்தரவுகள் எதும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன், ஏற்கனவே அரசாங்கம் பயணத்தை ஒத்திவைக்குமாறு கோரியுள்ள நிலையில், சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைவதற்கு புதிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் அந்த அனுமதியை அரசாங்கத்தினால் கொடுக்க முடியாது.

இதனால் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கையிலேயே இருந்தாலும், சீன கப்பல் அங்கு தரிப்பதற்கு வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கவலைகளையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான காரியங்களை இலங்கை முன்னெடுப்பதை தவிர்க்க முனையவில்லை என்றே இந்தியா சிந்திக்கிறது.

அதுபோல, தனக்கு அனுமதி வழங்கி விட்டு இந்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து அனுமதியை இரத்துச் செய்திருப்பதாக சீனா கருதுகிறது.

இந்த விடயத்தில் இந்தியாவின் மீது சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வெளிப்படையான தாக்குதல்களையும் தொடுத்திருந்தார்.

இந்தியாவையும், சீனாவையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்ளும் நிலை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கிறது.

கப்பலின் வருகையை தடுத்திருப்பினும், இந்தியாவினால் இலங்கையை முழுமையாக நம்ப முடியாத  நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதுபோல அனுமதி மறுக்கப்பட்டதால் சீனாவும் கடும் கோபத்துடன் உள்ளது.  இந்த விவகாரம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன கப்பலை அனுமதித்திருந்தால் இந்தியா மற்றும் அமெரிக்காவின் கோபத்துக்கு உள்ளாக நேரிட்டிருக்கும். இது இந்தியாவின் உதவிகளையும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கலாம்.

சீன கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சீனாவிடம் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை பெறும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படலாம்.

அதுமாத்திரமன்றி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுகின்ற முயற்சிகளில் கூட இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் உள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பொதியை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கையின் கடன் நிலைத்தன்மை மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக, பிரதான கடன் வழங்குநர்களின் அங்கீகாரம் அவசியம்.

இலங்கைக்கு கடன் வழங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நடைமுறைக்கு சீனா அனுமதியை வழங்க வேண்டும்.

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு நடத்துமாறு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில், சீனா விரும்பினால், இந்தச் செயற்பாட்டை நீண்டகாலத்திற்கு இழுத்தடித்து, தாமதப்படுத்தப்படலாம்.

இதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மோசமான வெளிநாட்டுக் கொள்கை அல்லது, ராஜபக்ஷவினரின் தவறான கொள்கை, அல்லது சூழ்ச்சியினால் இப்போது ஒட்டுமொத்த நாடும் பிராந்திய அதிகாரப் போட்டியில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து இப்போதைக்கு வெளிவருவது கடினமானதாகவே தெரிகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right