சர்வகட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் நிலை

Published By: Digital Desk 5

13 Aug, 2022 | 02:10 PM
image

எம்.எஸ்.தீன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்பதற்கு சர்வகட்சி அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார். 

அதிலொரு கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சர் நசீர் அஹமட்டை தவிர ஏனையவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளனர். 

ஆனால், மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் தலைமையில் சென்ற குழுவில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறவில்லை. இதேவேளை, ஜனாதிபதியுடன் முஸ்லிம் கட்சிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் முன்வைத்த விடயங்கள் வெளியிடப்படவும் இல்லை. 

நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு சர்வகட்சி அரசாங்கமொன்றினை அமைத்து அதனூடாக தீர்வு காண்பதே சிறந்த வழியென்று அடையாளங் காணப்பட்டுள்ளதால் முஸ்லிம் கட்சிகளும் அதற்கு தமது ஆதரவை வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது. 

ஆனால், சர்வகட்சி அரசாங்கம் என்பது தனியே நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் தீர்வுக்காக மட்டும் அமைக்கப்படும் ஒன்றாக இருக்க முடியாது. நாட்டின் தற்போதைய நிலைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. 

அவற்றில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எடுக்காமையும், சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தாமையும் முக்கியமானவை. ஆதலால், சர்வகட்சி அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வையும், சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.

அவற்றை செய்யாது விட்டால் நாட்டில் நிரந்தர அமைதியை அடைய முடியாது. பொருளாதார மற்றும் அரசியல் உறுதிப்பாட்டிற்கு நாட்டில் நிரந்தர அமைதியும், ஆட்சியாளர்களின் மீது சிறுபான்மையினருக்கு நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். 

ஆதலால் சர்வகட்சி அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு வழங்குகின்ற அதேவேளையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களுக்குரிய தீர்வும் கிடைக்கப் பெறவேண்டும். 

பெறுமனமே அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு சமூகத்தின் பிரச்சினைகள், உரிமைக்ள விடயங்களில் மௌனமாகவும், பார்வையாளர்களாகவும் முஸ்லிம் கட்சிகள் இருக்க முடியாது. 

அவ்வாறு இருப்பதற்கு முஸ்லிம் கட்சிகள் அவசியமுமில்லை. கடந்த காலங்களில் எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்தில் பங்காளிகள் என்றும், அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டும் இருந்தன. ஆனால் முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினைக்கும், உரிமை விவகாரங்களுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. 

அதேமுஸ்லிம் கட்சிகளே சர்வகட்சி அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கவுள்ளன. கடந்த காலங்களைப் போன்று சர்வகட்சி அரசாங்கத்திலும் செயற்பட முடியாது. அவ்வாறு முஸ்லிம் கட்சிகள் செயற்படுமாயின் முஸ்லிம்கள் அதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். 

மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவிட்டு ஊமைச் சமூகமாக முஸ்லிம்கள் தொடர்ந்தும் இருக்க முடியாது. ஒரு சமூகம் தனது நிலையை உணர்ந்து செயற்படவில்லையாயின் அச்சமூகம் தமது எதிர்காலத்தை இருளில் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்கையை ஆட்சி செய்தவர்கள் நீதமாக நடக்காது பௌத்த சிங்கள மக்களை மாத்திரம் திருப்திபடுத்திக் கொண்டும், இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டும், இனவாத அமைப்புக்களுடன் அரசியல் தேவைக்காக உறவுகளை பேணியும், தமிழ், முஸ்லிம் சமூகங்களை ஒடுக்கியும் நடந்தமையின் உச்சக்கட்டத்தையே தற்போது இலங்கை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 

அதனால், இலங்கையை ஆட்சி செய்த பேரினவாதக் கட்சிகளின் போக்கு தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் நல்லதொரு பாடமாக இருக்கின்றது. அதனால், முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் காணி உள்ளிட்ட நீண்ட காலப் பிரச்சினைகளுக்கும், இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களும் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் சர்வகட்சி அரசாங்கம் அமையும் போது தீர்மானங்களை மேற்கொள்வதற்குரிய நகவுர்களை எடுக்க வேண்டும். 

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் இனவாதத்தை கட்டவிழ்த்த இனவாத தேரர்களும், அமைப்புக்களும் இன்றைய நெருக்கடியான சூழலில் அமைதியாகவும், தலைமறைவானவர்கள் போன்றும் இருந்து கொண்டிருக்கின்றனர். ஆயினும், இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு இருப்பார்கள் என்றோ, திருந்திவிட்டார்கள் என்றோ முடிவு செய்திட முடியாது.

இவர்கள் எந்த வேளையிலும் தமது பிரதிபலிப்பை வெளிக்காட்டுவார்கள். இனவாதம் மூலமே அரசியலில் வெற்றி கொள்ளலாமென்று நம்புகின்ற அரசியல்வாதிகள் பௌத்த இனவாத தேரர்களை குத்தகைக்கு அமர்த்தலாம். 

நாட்டின் நலனுக்காக சர்வகட்சி அரசாங்கம் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், அரசியல் கட்சிகள் யாவும் தமது அரசியல் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்குரிய மறைமுக திட்டங்களையும் கொண்டுள்ளன என்பது உண்மையாகும். தங்களின் இந்த மறைமுகத் திட்டத்திற்கு இனவாதிகளையும் துணைக்கு வைத்துக் கொள்வார்கள் என்பதே கடந்த கால கசப்பான அனுபவமாகும். 

2010ஆம் ஆண்டுகளின் பின்னர் பேரினவாதக் கட்சிகளின் அதிகாரப் பசிக்கு முஸ்லிம் சமூகம் பலியாகிக் கொண்டது. அதன்போதெல்லாம் முஸ்லிம் கட்சிகள் பொம்மைகள் போன்றே இருந்தன. சமூகம் பற்றிய உணர்வும், அக்கறையும் இல்லாதவர்களையே முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள்.

 அத்துடன் முஸ்லிம் கட்சிகளிடம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு எந்தவொரு திட்டமும் கிடையாது. அவை மாமூலான அரசியலையே செய்;து கொண்டிருக்கின்றன. மாமூலான அரசியல் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை. கரடுமுரடான இலங்கையின் அரசியல் பாதையில் சமூகம் குறித்த திடமான பற்றுதலும், உறுதியும் கொண்டவர்களே முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அரசியல் கட்சியாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் சமூகம் இத்தகையவர்களை பெற்றுக் கொள்ளவில்லை. 

சுயநலவாதிகளும், நன்றி மறந்தவர்களுமே முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர். முஸ்லிம் சமூகம் தேர்தல்களில் தொடர்ச்சியாக பிழையான முடிவுகளை எடுத்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

முஸ்லிம் கட்சிகளையும், அவற்றின் தலைவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் சுற்றி இருப்பவர்களில் அறிவார்ந்தவர்கள் மிகக் குறைவாகவே உள்ளார்கள். இது மிகப் பெரிய குறைபாடாகும். சுயநலக்காரர்களும், குறைமதியுடையவர்களும் சூழ்ந்துள்ளார்கள். இவர்கள் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்து கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் புகழ்ந்து போற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 

தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இத்தகையவர்கள் இருப்பதே தமக்கு நல்லதென்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலைமாற வேண்டும். மாறும் போது மாத்திரமே முஸ்லிம் சமூகத்தினால் தமது எதிர்காலத்தை ஒளிமயமாக்கிட முடியும். 

ஆனால், அவ்விதமான நிலைமை அண்மைய காலத்தில் ஏற்படும் என்று கூறுவதற்கு இல்லை. எது எவ்வாறாயினும், தற்போது முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நகரவேண்டும். 

அதனைவிடுத்து மீண்டும், அமைச்சுப்பதவிகளை மையப்படுத்தி பேரம்பேசுவது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் செய்யும் துரோகமாகும் என்பதை கட்சிகளின் தலைவர்கள் நினைவில் கொள்வது சாலச்சிறந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22