ஆபத்தான பரிந்துரைகள்

Published By: Digital Desk 5

13 Aug, 2022 | 01:50 PM
image

சத்ரியன்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலத்தை செயலணிகளின் ஆட்சிக்காலம் என்று குறிப்பிடலாம்.

ஏனென்றால் அவர் பல்வேறு விடயங்களுக்கும் ஒவ்வொரு செயலணிகளை நியமிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

தன் ஆட்சியில் எத்தனை செயலணிகள் நியமிக்கப்பட்டன என்பதை அவரே, அறிவாரோ தெரியாது.

ஜனாதிபதி செயலணிகளை அமைத்தால், பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை அவரிடம் காணப்பட்டது.

அந்தச் செயலணிகள் இயங்கினவே தவிர, செயலளவில் அவை ஆரோக்கியமான விளைவுகளைத் தரவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் அமைக்கப்பட்ட செயலணிகளில் ஒன்று தான் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி.

கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் உருவாக்கப்பட்டது இந்தச் செயலணி.

பொது பல செனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக பொதுவான நம்பிக்கை இருந்தது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் பொதுபல சேனா இருந்தது என்ற குற்றச்சாட்டு இன்றைக்கும் பரவலாக உள்ளது.

ஆனாலும், வன்முறைக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை.

அதனால் தான், இது திட்டமிட்ட இனவன்முறை தான் என்று சந்தேகம் சர்வதேச அளவில் வருவதற்குக் காரணமாயிற்று.

பொது பலசேனாவை உருவாக்கியவர் கோட்டாபய ராஜபக்ஷதான் என்று கூறப்பட்டாலும் அதனை அவர் எப்போதும், நிராகரித்து வந்திருக்கிறார்.

எவ்வாறாயினும், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல, கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், ஞானசார தேரரை ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக நியமித்தார்.

அந்தச் செயலணியில் ஒரு தமிழ் பேசும் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை. தமிழ், முஸ்லிம்களிடம் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களுக்குப் பின்னரே, செயலணிக்கு தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதற்குப் பின்னரும் சில உறுப்பினர்கள் அதன் நோக்கம் குறித்து முரண்பட்டுக் கொண்டு வெளியேறி விட்டனர்.

எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த கடைசி நாட்களில், ஞானசார தேரர் தமது செயலணியின் அறிக்கையை சமர்ப்பித்து விட்டார்.

அந்த அறிக்கை இப்போது ஜனாதிபதி செயலகத்திடம் இருந்தாலும், அதனைத் தூக்கி குப்பைக்குள் போட வேண்டும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோசம், தமிழ், முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு ரீதியாக உள்ள குறித்த சில சட்ட அமைப்புகளையும் கூட, இல்லாமல் செய்யும் நோக்கம் கொண்டது.

ஞானசார தேரர் பொதுபலசேனாவை உருவாக்கியதற்குக் காரணம், பௌத்த மதத்துக்கான முன்னுரிமைகளை பாதுகாப்பதோ, அதனை வளர்ப்பதோ அல்ல.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதே அதன் பிரதான நோக்கம்.

கண்டி, அளுத்கம உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில், ஞானசார தேரருக்கும், அவரது தலைமையிலான பொது பலசேனாவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறானதொருவரின் கையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியை ஒப்படைத்ததே, சந்தேகத்துக்குரியதொரு செயற்பாடாகத் தான் பார்க்கப்பட்டது.

ஏற்கனவே கோட்டாவின் மீது நம்பிக்கையிழந்து போயிருந்த தமிழ், முஸ்லிம் மக்களுக்கு, இந்த நியமனம் கடும் அதிருப்தியையும், சந்தேகங்களையும் எழுப்பியிருந்தது.

ஆனாலும்,  குறித்த காலத்தில் தமது செயலணியின் அறிக்கையை கோட்டாவிடம் கையளித்து, அவரது உண்மையான விசுவாசி என்பதை நிரூபித்திருக்கிறார்.

அந்த அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அதனை ஞானசார தேரர் வெளியிட மறுத்ததுடன், அதனை ஜனாதிபதியே (கோட்டா) வெளியிடுவார் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், அந்த அறிக்கையை வெளியிட முன்னரே, அதனை செயற்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுக்க முன்னரே, குறிப்பாக கூறுவதானால் அந்த அறிக்கையை ஆராய முன்னரே, கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டு விட்டது.

இப்போது இந்த செயலணியின் அறிக்கையை குப்பைக்குள் போட வேண்டும் என்று, ரணில் விக்கிரமசிங்கவிடம் நிபந்தனை விதிக்கும் பாணியில் கூறியிருக்கிறார் ரவூப் ஹக்கீம்.

ஆனால், அவரது இந்த நிபந்தனையை செத்த பாம்புக்கு உயிர் கொடுக்கும் முயற்சி என விமர்சனம் செய்திருக்கிறார் அதாவுல்லா.

கோட்டாவுடன் இந்தச் செயலணியும், அதன் செயற்பாடுகளும் அறிக்கையும் காலாவதியாகி விட்ட நிலையில், அதுபற்றிப் பேசிப் பயனில்லை என்பது அவரது வாதம்.

இந்தச் சூழலில் தான் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கையில் 43 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு, அதுபற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞானசார தேரரின் செயலணி செத்த பாம்பு என்றால், அதன் அறிக்கை ஏன் கசிய விடப்பட்டது என்ற கேள்வி உள்ளது.

அதில் சில பரிந்துரைகள் சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் புனர்வாழ்வு அல்லது சமூக மயப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு நடவடிக்கையுடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது ஒன்று.

13 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், அல்லது குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள், அரசியல் கைதிகளாக இன்னமும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் செய்த குற்றம் என்ன என்பதைக் கூட அறியாதவர்கள். சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும், சில திட்டமிட்ட பழிவாங்கல்களும், அவர்களை சிறைக்கு வெளியே வர முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறானவர்களின் விடுதலை என்பது முக்கியமொனதொரு கோரிக்கையாக தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

அதனை ஞானசார தேரரின் செயலணி உள்வாங்கியிருக்கிறது. ஜனாதிபதி செயலணி ஒன்று இவ்வாறான பரிந்துரையை, குறிப்பாக  நீதிமன்றில் பாரிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அதனை கருத்திற் கொள்ளாது அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் பரிந்துரை, கவனத்தில் கொள்ளக் கூடியது.

ஆனால், அரசியல் கைதிகளின் விடுதலை என்ற இனிப்புக்குப் பின்னால் கசப்பான பல விடயங்களை அரங்கேற்றும் முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

அவற்றில் ஒன்று,  நாட்டின் விசேட சட்டங்களாக நடைமுறையில் உள்ள கண்டிய சட்டம், தேசவழமை சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் என்பன அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். என்பது.

இதற்காக அந்த சட்டங்களை நீக்குவது மற்றும் சீர்திருத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்கான சரத்துக்களையும் அந்த செயலணி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சட்டங்கள், தமிழ், முஸ்லிம்களுக்காக நடைமுறையில் இருப்பது. இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த காலத்தில் இருந்தே, இந்தச் சட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை மாற்றுவதன் மூலம், கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும், சிறுபான்மையினரின் நலன்களை பாதிக்க கூடிய விடயங்களை தடையின்றி நடைமுறைப்படுத்தும் சூழலை உருவாக்கும் திட்டம் வகுக்கப்படுகிறது.

தேசவழமைச் சட்டம், வடக்கில் காணிகளை விற்பது, வாங்குவது தொடர்பாக வெளியிடத்தவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது.

எற்கனவே தமிழரின் தாயகப் பிரதேசங்களான வடக்கிலும், கிழக்கிலும் காணிகள் அபகரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் என்பன ஆபத்தான வகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு இடம்பெறும் சூழலில் அதனை மேலும் விரிவாக்கும் வகையிலேயே, இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அரசியல் கைதிகளின் விடுதலை நியாயமான கோரிக்கையாக இருந்தாலும், அதே சாக்கில், தமிழ், முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக எஞ்சியிருக்கின்ற சில சட்ட நடவடிக்கைகளையும் அகற்றுவது ஆபத்தானது.

இது நீண்டகால நோக்கில் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. அரசியல் கைதிகளின் விடுதலை நாட்டின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த நிலையில், அவர்களை விடுவித்து நீண்டகால நோக்கில் பேரினவாத நலன்களை அடைவதற்கு இந்த செயலணி பரிந்துரைகளை முன்வைத்திருப்பதாக தெரிகிறது.

இந்த அறிக்கையும் பரிந்துரைகளும் குப்பைக்குள் போடப்படாது போனால், ‘செத்த பாம்பு தானாகவே உயிர் பெற்று விடும்.’

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22