சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5

Published By: Vishnu

10 Aug, 2022 | 09:12 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் - 5  கண்காணிப்பு கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து குவாட் அமைப்பு நாடுகளும் பாதுகாப்பு சார் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் முதலாவது வெளிக்கள இராணுவ தலத்திற்கான இலக்கை மையப்படுத்தியதாகவா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனா நகர்த்துகின்றது என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளன.

கிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபூட்டியில் சீனா ஏற்கனவே  இராணுவத்தளம் ஒன்ஐ உருவாக்கியுள்ள நிலையில் இந்தோ - பசிபிக் பகுதியிலும் உருவாக்கி விட வேண்டும் என்ற இலக்கில் சீனா பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் இலங்கை, கம்போடியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் துறைமுகங்களை பயன்படுத்தி இராணுவ தளம் ஒன்றை உருவாக்கலாம் என்ற சந்தேகம் பல தரப்புகளாலும் வெளியிடப்பட்டு வந்தன. அந்த வகையில் கம்போடியாவில் ஒரு கடற்படை தளத்தை இரகசியமாக உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. ஆனால் அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. ஆனால் மியன்மாரின் ஷட்வே துறைமுகம் மற்றும் கம்போடியாவின் நான்கு முக்கிய துறைமுகங்களில் ஒன்றும் சீனாவின் இலக்காக காணப்பட்டுள்ளது.  

இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் ' யுவான் வோங் - 5' எனும் சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.  குறிப்பாக இந்தியா இந்த கப்பலை ஓர் உளவுக் கப்பலாக சுட்டடிக்காட்டி இலங்கையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தக் கப்பலிலிருந்து 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பகுதியினை கண்காணிக்க முடியுமென இந்திய இராஜதந்திர தடங்கள் அனைத்தும் கொழும்பை நோக்கி அழுத்தங்களை பிரயோகித்தன.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் யுவான் வோங் - 5 சீன கண்காணிப்பு கப்பல் நங்கூரமிட்டால் இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள பல முக்கியமான கேந்திர நிலையங்களை கண்காணிப்பது மாத்திரமன்றி தேவையான உளவு தகவல்களையும் சேகரித்து விடும். இவ்வாறானதொரு அச்சுறுத்தல் மிக்க நிலைமை இலங்கையால் இந்தியாவிற்கு ஏற்பட அனுமதிக்க முடியாது என்பதுடன் அதனை தடுக்க எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்பதே டெல்லியின் இறுதி தீர்மானமாக அமைந்தது.

கடும் இந்திய அழுத்தங்களுக்கு மத்தியில் யுவான் வோங் - 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான விஜயத்தை ஒத்திவைக்குமாறு சீன தூதரகத்திடம் இலங்கை எழுத்து மூலமாக கோரியது. கோரிக்கை கடிதத்திற்கு எவ்விதமான நேரடி பதிலையும் வழங்காத சீனா, கப்பல் விடயம் குறித்து உயர் மட்ட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மறுப்புறம் பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிப்பது அர்த்தமற்றது என சீனா வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. அதே போன்று இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக ஏனைய நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வளர்க்க இலங்கைக்கு உரிமையுள்ளதென கப்பலின் வருகையை எதிர்க்கும் அனைத்து தரப்புகளுக்கும் சீனா பதிலளிப்பதாக கூறியது.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இவ்வகையான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விட கூடாது என்பதில் எந்தளவிற்கு இந்தியா உள்ளதோ அதே போன்று சீனாவின் மேலாதிக்க போக்கு இருக்க கூடாது என்பதில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் உள்ளன. எனவே தான் யுவான் வோங் - 5 கப்பலின் வருகை  குறித்து 'குவாட்' அமைப்பு நாடுகளும் கவனத்தில் கொண்டன.  

இந்தோ - பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா,  ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து 2007-ம் ஆண்டில்  உருவாக்கப்பட்ட அமைப்பு தான் இந்த 'குவாட்'. இந்த அமைப்பின் அடுத்த நிலையாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பையம் உருவாக்கியுள்ளன. இதுவும் சீனாவின் ஆதிக்கத்தை  பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் வகையிலேயே தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான  கரிசனையில் குவாட் அமைப்பு ஊடாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது யுவான் வோங் - 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை துறைமுக விஜயத்தை தடுப்பதற்கு சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான கூட்டணி ஒன்றிணைந்தது. இதற்கு பிரதான காரணம் இந்தியாவின் பாதுகாப்பு சூழலுக்குள் இலங்கையின் கடல் எல்லைப் பகுதிகள் இருக்கின்றமையால் மாத்திரம் அல்ல. ஹம்பந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட போது பல நாடுகள் இலங்கையை எச்சரித்தன. 

அதாவது சீனாவின் மற்றுமொரு வெளிக்கள இராணுவ தளமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம்  மாறலாம் என்பதே எச்சரிக்கையாகும்.  அதே போன்று தனது இராணுவ நலன்களுக்காக இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை, கம்போடியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் துறைமுகங்களை பயன்படுத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டன. 

எனவே அவ்வாறானதொரு நோக்கத்திற்காக தான் சீனா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி நகர்த்துகின்றதா என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பிற்கு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் காணப்பட்டதாகவே இராஜதந்திர மட்ட தகவல்கள் கூறின.  எனவே உலகளாவிய சக்தியாக மாறும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே  வெளிக்கள இராணுவ தளங்கள் அமைவதாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...

2024-03-17 12:21:53
news-image

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...

2024-03-17 06:39:41
news-image

கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?

2024-03-10 14:17:23
news-image

வலுப்பெறும் அரசியல் பிளவுகள் 

2024-03-10 12:32:34
news-image

தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...

2024-03-08 16:39:57
news-image

இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...

2024-03-05 22:00:38
news-image

மீண்டும் "Political Cabinet" 

2024-03-03 12:29:24
news-image

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள் 

2024-02-28 13:29:58
news-image

"அரசியல் கூட்டணி" குறித்து அமெரிக்காவில் மைத்திரி...

2024-02-25 11:58:43
news-image

இடைக்கிடை கிளம்பும் ஜனாதிபதி ஆட்சி முறை...

2024-02-22 13:56:59
news-image

ஜனாதிபதி கையிலெடுத்த 'லெனினின் கம்யூனிசம்'

2024-02-18 12:16:13
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் பதவியை ...

2024-02-16 14:26:30