நிலைவரங்களில் ஏற்படுகின்ற மேம்பாடு பல முனைகளில் பிரதிபலிக்க வேண்டும்

Published By: Digital Desk 5

09 Aug, 2022 | 11:26 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

குறுகிய காலத்தில் அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டை பெற்றிருக்கின்றது போன்று தோன்றுகிறது.உறுதிப்பாட்டை மீள ஏற்படுத்துவதற்கு இதுவரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சிகள் பயன்தருகின்றது போன்று தெரிகிறது.தீர்மானங்களை எடுத்து செயற்படுவதற்கு அரசியல் உறுதிப்பாடு அவசியமானது.

சர்வதேச ஆதரவு கிடைப்பதற்கு அது முக்கியமான ஒரு அம்சமாகும்.பல கோடி டொலர்கள் கடனுதவியை இலங்கைக்கு தருவதற்கு சர்வதேச நாணய நிதியம் அரசியல் உறுதிப்பாட்டையே நிபந்தனையாக கோருகிறது. இலங்கையினால் அளிக்கப்படக்கூடிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அத்தகைய உறுதிப்பாடு இன்றியமையாதது என்று நிதியம் நம்புகிறது.

விக்கிமசிங்க முதலில் பிரதமராகவும் பிறகு ஜனாதிபதியாகவும் தலைமைத்துவ பதவிகளுக்கு வந்த பிறகு போராட்ட இயக்கம் முன்னரைப் போன்று மிகவும்  பெருமளவில் மக்களை அணிதிரட்டவில்லை.இதை அரசாங்கத்தின் ஒரு சாதனையாக பார்க்கலாம்.சட்டத்தின் வரையறைக்குள் போராட்டங்களைச் செய்யவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு அச்சந்தருவதாக இருக்கிறது.அவசரகால சடடமாக இருப்பதால் அதை சவாலுக்குடபடுத்துவதும்  சிக்கலானதாகவுள்ளது.

அவசரகாலச் சட்டத்தை ஒரு தடுப்பு நடவடிக்கையாக பயன்படுத்துவதில் அரசாங்கம் அதன் ஆற்றலை வெளிக்காட்டியிருக்கிறது.ஜூலை 18 ஜனாதிபதி விக்கிரமசிங்க பிரகடனப்படுத்திய அவசரகாலச்சட்டத்தின் கீழ் கைது செய்ப்படக்கூடிய ஒரு நபரை மாஜிஸ்திரேட் ஒருவர் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கு முன்னர் தடுத்துவைக்கக்கூடிய காலகட்டம் 24 மணித்தியாலங்களில் இருந்து 72 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.தேடுதல் நடத்துவதற்கும் கைதுசெய்வதற்கும் அதிகாரிகளுக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.கைது செய்யப்படக்கூடிய ஆட்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை ஒரு நாளைக்கு கூறாமல் இருப்பதற்கான அதிகாரம் இராணுவத்துக்கு இருக்கிறது.

பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தடை செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பொலிசாருக்கும் பரந்தளவு அதிகாரங்களை வழங்கும் அவசரகாலநிலை எந்தவொரு பொது இடத்தில் இருந்தும் எவரையும் வெளியேறுமாறு உத்தரவிடுவதற்கு பொலிசாரையும் இராணுவத்தையும் அனுமதிக்கிறது.அவ்வாறு வெளியேற மறுப்பவர்களை உடனடியாகவே கைது செய்யவும் முடியும்.அவ்வாறு வெளியேற மறுப்பதை எதிர்ப்பை வெளிக்காட்டும்  அல்லது வதந்திகளைப் பரப்பும் ஒரு குற்றச்செயலாக கருதமுடியும்.ஆனால், சமப்படுத்தல்களும் தடுப்புகளும் (checks and Balances ) தொர்பான இலங்கையின் முறைமை இன்னமும் நடைமுறையில் இருப்பதன் ஒரு அறிகுறியாக அரசியல் கட்சிகளினாலும் பல்வேறு அமைப்புகளினாலும் ஆகஸ்ட 9 நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தடைசெய்யுமாறு பொலிசார் விடுத்த வேண்டுகோள் ஒன்றை கொழும்பு மாஜிஸ்திரேட் நிராகரித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

" இந்த அவசரகாலச்சட்ட ஏற்பாடுகள் கருத்துவெளிப்பாட்டு சுந்திரம், அமைதியாக ஒன்றுகூடுதல், இயக்கம் நடத்துதலுக்கான சுதந்திரத்தை மீறும் வகையில் அளவுக்கதிகமானவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன"என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் ( Human Rights Watch ) சுட்டிக்காட்டியிருக்கிறது.பிரதான போராட்டக்களமான கொழும்பு காலிமுகத்திடலில் மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலமாக முகாமிட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அரசாங்கத்துடன் மோதலுக்கு போவதில் உள்ள சிக்கலை உணர்த்துகிறது.அந்த நள்ளிரவு தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் கறுப்பு சீருடையில் முகமூடி அணிந்தவண்ணம் வந்தவர்கள் நிராயுதபாணிகளான போராட்டக்காரர்களை தாக்கியதை காண்பித்தன.

அடையாளத்தை வெளிப்படுத்தும் பட்டி எதையும் இந்த கறுப்பு சீருடைக்காரர்கள் அணிந்திருக்கவில்லை என்பதால் அவர்கள் உத்தியோகபூர்வ பாதுகாப்பு படைகளைச் சேர்ந்தவர்களா அல்லது பாதுகாப்பு படைகளுடன் செயற்படும் வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வி எழுகிறது.இந்த நடவடிக்கை அதை மேற்கொண்டவர்களுக்கு  அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதுடன் நாட்டின்  நலன்களை மனதிற்கொண்ட இலங்கையர்களையும் சர்வதேச சமூகத்தையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

போராட்ட இயக்கத்தின் தலைமைத்துவம் வலுவிழக்கச்செய்யப்படுவதை உறுதிசெய்வதற்கும் கொடூரமான இந்த சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியிருக்கிறது.அவர்களில் பலர் கைதுசெய்ப்பட்டனர். சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இது மற்றைவர்களுக்கு பீதியூட்டும் செய்தியொன்றை அனுப்பியிருக்கிறது.

தன்னுடன் இணைய தயாராயிருப்பவர்களுக்கு உயர்பதவிகளை வழங்குவதற்கான விருப்பத்தையும் அரசாங்கம் வெளிக்காட்டியிருக்கிறது.இது போராட்ட இயக்கத்தில் தீவிரமாக செயற்பட்ட இரு தொழிற்சங்கத் தலைவர்கள் மிகவும் வேறுபட்ட முறையில் நடத்தப்படுவதற்கு வழிவகுத்தது.ஒருவருக்கு உயர்பதவியொன்று வழங்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, மற்றையவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். என்றாலும் அவருக்கு இப்போது பிணை வழங்கப்பட்டிருக்கிறது.

பொது மக்களிடமிருந்து வரக்கூடிய நெருக்குதல்கள் மற்றும் மனித உரிமை அக்கறைகளை உணர்ந்து செயற்படக்கூடியவர் தன்னை காட்டிக்கொள்ளும் ஒரு அறிகுறியாக ஜனாதிபதி விக்கிரமசிங்க கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினுடன் தொலைபேசியில் பேசினார்.முறைமை மாற்றம் ஒன்று தொடர்பில் பேசுகிற போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களை மெச்சுவதாக ஸராலினிடம் ஜனாதிபதி  தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 பொருளாதார உறுதிப்பாடு

அரசியல் உறுதிப்பாட்டு தோற்றப்பாட்டுக்கு புறம்பாக பொருளாதார உறுதிப்பாடும் படிப்படியாக ஏற்படுகிறது என்ற ஒரு தோற்றப்பாட்டையும் காணக்கூடியதாக இருக்கிறது.சமையல் எரிவாயு,பெட்ரோல் டீசல் தட்டுப்பாடுகள் மற்றும் 13 மணி நேர மின்வெட்டு ஆகியவை போராட்ட இயக்கத்தை ஊக்குவித்த பிரதான காரணிகளில் அடங்கும்.நீண்ட நேர மின்வெட்டு காலகட்டத்தில் வீடுகளுக்குள் இருப்பதென்பது தாங்கமுடியாத ஒன்றாகும்.இதையடுத்து அயலவர்கள் நகரில் உள்ள சந்திகளில் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி எதிர்ப்பைக்காட்ட ஆரம்பித்தனர்.

ஆனால் இப்போது சமையல் எரிவாயு,பெட்ரோல்,டீசல் விநியோகம் கணிசமானளவுக்கு மேம்பட்டிருக்கிறது.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு  முன்பாக மைல் கணக்கில் வரிசைகளை இப்போது பெருமளவுக்கு காணமுடியவில்லை.வாகனங்களுக்கு வாராந்த அடிப்படையில் எரிபொருள் கோட்டா வழங்குவதற்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற கியூ.ஆர். குறியீட்டு முறைக்கே இதற்கான பெருமை சாரும்.

பொது மக்களுக்கு கடுமையான இடர்பாடுகளைக் கொடுக்கக்கூடிய முக்கிய பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லாமல் பொருளாதார நிலைவரத்தை தொடர்ந்தும் உறுதியானதாக வைத்திருப்பதே அரசாங்கம் எதிர்நோக்கும் சவாலாகும்.விநியோகிப்பதற்கு பெட்ரோலும் டீசலும் இருந்தால்தான் கியூ.ஆர்.குறியீட்டு முறை பயனுடையதாக இருக்கும்.அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக உலகவங்கியிடமிருந்து கடைக்கப்பெற்ற கடனுதவி ஒன்றே தற்போதைய சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும்  டீசல் இறக்குமதியைச் சாத்தியமாக்கியது.

ஆனால் இந்த நிதி விரைவில் தீர்ந்துபோகும்.அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பதே கேள்வி.கடுமையான தட்டுப்பாடுகள் நிலவக்கூடிய சூழ்நிலை மீண்டும் ஏற்படும் என்ற அச்சம்  இருக்கிறது.எதிர்காலம் தொடர்பில் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது அவசியமானதாகும்.அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.

இலங்கைக்கு மேலும் உதிவியை வழங்குவதானால் தங்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய முயைில் நிலைவரத்தில் மேம்பாடு ஏற்படவேண்டும் என்பதை உலகவங்கி கூறியிருக்கிறது.இம்மாத ஆரம்பத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட உலகவங்கி மோசமான பொருளாதார நிலைவரம் குறித்தும் இலங்கை மக்கள் மீதான அதன் தாக்கம் குறித்தும் ஆழ்ந்த கவலை வெளியிட்டது. அதேவேளை போதுமான பெரும்பாக பொருளாதார கொள்கைக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படாத வரையில் இலங்கைக்கு புதிதாக நிதியுதவி செய்யும் திட்டம் எதுவும் இல்லையென்று கடந்த ஞாயிறன்று உலக வங்கி அறிவித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அவசர தேவைகளுக்காக இதுவரையில் அந்த வங்கி 16 கோடி அமெரிக்க டாலர்களை வழங்கியிருக்கிறது.பெரிய கடனுதவிக்காக இலங்கை நம்பிக்கை கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் உலகவங்கி நெருங்கிய தொடர்புடையது எனமபதால் இது மிகவும் முக்கியமானதாகும்.

 அரசியல் உறுதிப்பாடு

சர்வதேச உதவியைப் பெறுவதற்கு அவசியமானதாக  அரசியல் உறுதிப்பாட்டை அரசாங்கம் முக்கியத்துவப்படுத்துகிறது.அவசரகால சட்டத்தின் மூலமாக போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதை நியாயப்படுத்துவதற்கும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தையே அரசாங்கம் முன்வைக்கிறது.வெளிநாட்டு உதவிகளும் மூதலீடுகளும் வருவதை தடுக்கக்கூடிய முறையில் அரசியலில் உறுதிப்பாடின்மையை ஏற்படுத்தியதாக போராட்ட இயக்கத்தின் மீது வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால் முழுமையான நிலைவரத்தையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியமாகும்.சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் உதவிகளை வழங்கக்கூடிய வேறு வட்டாரங்களும் தங்களது உதவிகள் அடிப்படையில் எந்த நோக்கத்துக்காக வழங்கப்படுகின்றனவோ அந்த நோக்கங்களுக்கே பயன்படுத்தப்படவேண்டுமே தவிர ஊழல்தனமான நடவடிக்கைகளுக்கும் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை பேணுவதற்கும் பயன்படுத்தப்படக்கூடாது என்று விரும்புகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற செயற்திட்டம் பெரும்பாக பொருளாதார உறுதிப்பாட்டை மீண்டும் ஏற்படுத்துவதையும் கடன் மறுசீரமைப்பையும்  நோக்கமாக கொண்டிருக்கின்ற அதேவேளை,  வறியவர்களையும் வசதிகுறைந்த பிரிவினரையும் பாதுகாப்பதற்கும் நாட்டின் வளர்ச்சி ஆற்றலை கட்டவிழ்த்துவிடுவதற்கும் உதவவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.கடந்த மாதம் இலங்கைக்கு வந்திருந்த  சர்வதேச நாணய நிதிய தூதுக்குழு ஊழலைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை பற்றி வலியுறுத்தியிருந்தது.அத்துடன் பணவீக்க மட்டத்தைக் கட்டுப்படுத்துவது, சென்மதி நிலுவை நெருக்குதல்களை கையாளுவது, வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய சீர்திருத்தங்களை முன்னெடுப்பது போன்றவற்றின் அவசியத்தையும் அது சுட்டிக்காட்டியது.

ஊழல் நடவடிக்கைகளை எதிர்க்கும் விடயத்தில் சரவதேச நிதி நிறுவனங்களும் போராட்ட இயக்கமும் ஒரே பக்கத்திலேயே நிற்கின்றன.போராட்ட இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் முழு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவேண்டும் என்பதே பாரதான சுலோகமாக இருந்தது.வெளிநாட்ட செலாவணி கையிருப்பு காலியானதற்கு இவர்களின் ஊழல் நடவடிக்கைகள்தான் காரணம் என்று நம்பியதால் போராட்ட இயக்கம் அந்த கோரிக்கையை முன்வைத்தது.ஒரு அணி ஊழல்தலைவர்களை இன்னொரு அணி ஊழல் தலைவர்களினால் பதிலீடு செய்வது இதற்கு மாற்று மருந்து அல்ல.ஊழலுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் மீண்டும் முக்கிய பதவிகளுக்கு வந்திருப்பது பெரும் குழப்பத்தை தருகிறது.

முறைமை மாற்றமே போராட்ட இயக்கத்தின் அடிப்படைக் கோரிக்கையாக இருந்தது.தொடர்ந்தும் இருந்து வருகிறது.தொழிற்சங்கத்தலைவர் ஜோசப் ஸ்ராலினுடனான சம்பாசணையின்போது முறைமை மாற்றத்தைக் கோருபவர்களை மெச்சுவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறியதும் கவனிக்கத்தக்கது.

ஔிவுமறைவற்றதும் சட்டத்தை மதிக்கின்றதும் நாட்டின் செல்வத்தை சூறையாடாததுமான ஒரு அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவது உன்னதமான  ஒரு இலக்காகும்.இந்தியாவில் மகாத்மா காந்தியும் அமெரிக்காவில்மார்ட்டின் லூதர் கிங்கும் நடத்திய ஒத்துழையாமை இயக்கங்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் புனிதம் குறைந்ததல்ல.போராட்ட இயக்கம் மீண்டெழுவற்கான காரணிகள் தொடரவே செய்கின்றன.முறைமை மாற்றம் ஒன்றுக்கான சான்றுகளும் நம்பிக்கை தருவனவாகவே இருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...

2024-03-17 12:21:53
news-image

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...

2024-03-17 06:39:41
news-image

கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?

2024-03-10 14:17:23
news-image

வலுப்பெறும் அரசியல் பிளவுகள் 

2024-03-10 12:32:34
news-image

தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...

2024-03-08 16:39:57
news-image

இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...

2024-03-05 22:00:38
news-image

மீண்டும் "Political Cabinet" 

2024-03-03 12:29:24
news-image

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள் 

2024-02-28 13:29:58
news-image

"அரசியல் கூட்டணி" குறித்து அமெரிக்காவில் மைத்திரி...

2024-02-25 11:58:43
news-image

இடைக்கிடை கிளம்பும் ஜனாதிபதி ஆட்சி முறை...

2024-02-22 13:56:59
news-image

ஜனாதிபதி கையிலெடுத்த 'லெனினின் கம்யூனிசம்'

2024-02-18 12:16:13
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் பதவியை ...

2024-02-16 14:26:30