மஸ்கெலிய பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டு பாதீட்டில் பெண்களை வலுவூட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை

Published By: Digital Desk 5

09 Aug, 2022 | 11:54 AM
image

அருள்கார்க்கி

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலிய பிரதேச சபையானது நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பெரும் நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் கொண்ட அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஒரு பிரிவாகும். 

முன்னர் அம்பகமுவ பிரதேச சபையாக காணப்பட்ட இப்பிரதேசம் கினிகத்தனை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. இங்கு தமிழர்கள் 73 % வீதமும் சிங்களவர்கள் 24 % வீதமும் ஏனையோர் 2.4 % வீதமும் உள்ளனர்.

புதிய பிரதேச சபையாக மஸ்கெலிய பிரதேச சபை பிரிக்கப்படுவதற்கு முன்னர் இப்பாரிய சனத்தொகைக்கு முறையாக பிரதேச சபையின் சேவைகளை பெற்றுக் கொடுப்பது பாரிய சவாலாக காணப்பட்டது. 

பிரதேச சபை சட்டத்தில் காணப்பட்ட இறுக்கம் காரணமாக அம்பகமுவ பிரதேச சபையின் மூலம் பெருந்தோட்டங்களுக்கு எவ்வித சேவைகளையும் பெற்றுக்கொடுக்க முடியாமல் காணப்பட்டது.

அம்பகமுவ பிரதேச சபையில் 23 உறுப்பினர்கள் காணப்பட்டனர். அவர்களுள் 17 பேர் பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் மூலம் தெரிவுச் செய்யப்பட்ட பிரதிநிதிகளாவர். இருப்பினும் அவர்களால் பெருந்தோட்ட மக்களுக்கு எவ்வித சேவைகளையும் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. 

குறிப்பாக பெருந்தோட்டங்களைப் பொருத்தவரையில் அவர்களில் அதிகமானோர் பெண் தொழிலாளர்களாவார். எனவே பெண்களை மையப்படுத்தி எவ்வித வலுவூட்டல் செயற்பாடுகளையும் அவர்களால் வழங்க முடியவில்லை. 

அம்பகமுவ பிரதேச சபையை எடுத்துக்கொண்டால் சுமார் 103 தோட்டக் குடியிருப்புகள் அப்பிரதேச சபையின் கீழ் காணப்படுகின்றன. இன்று அவற்றில் அரைவாசிக்கும் அதிகமான தோட்டக் குடியிருப்புக்கள் மஸ்கெலிய பிரதேச சபையின் நிர்வாகத்துக்கு கீழ் உள்ளன. 

இதில் அதிகமான பெண்களே தொழிலாளர்களாக உள்ளனர். தேயிலை தோட்டங்கள், தனியார் துறை நகரத் தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலை உட்பட ஏனைய அனைத்து துறையிலும் பெண்களே அதிகமாக தொழில் புரிகின்றனர். 

எனவே மஸ்கெலிய பிரதேச சபைக்கு பெண்கள் வலுவூட்டல் தொடர்பான கணிசமான பொறுப்புடைமை உள்ளதை எவரும் மறுக்க முடியாது.

மஸ்கெலிய பிரதேச சபையானது 11 கிராம சேவகர் பிரிவுகள் கொண்ட ஒரு அதிகாரப் பிரதேசமாகும். அதேபோல் இப்பிரதேச சபை 155 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு அதிகாரப்பிரதேசமாகும். 

பொதுவாகவே பெருந்தோட்டங்களை எடுத்துக் நோக்குகையில் அங்கு பெரும்பான்மையான மக்கள் தேயிலை தொழில்துறையை பிரதான தொழிலாக கொண்டவர்களாகவே இருப்பார்கள். மஸ்கெலிய பிரதேச சபையும் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோர் பெருந்தோட்ட பெருளாதாரத்தில் தங்கி வாழ்பவர்களாவர்.

பிரதேசத்தின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் பெண்களை சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு விடயங்களில் வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. அது பிரதேச சபையின் ஒரு முக்கிய கடமையாகவும் உள்ளது. 

மஸ்கெலிய பிரதேச சபையை பொருத்தவரையில் தவிசாளர் உட்பட 16 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்களுள் தவிசாளர் உட்பட 03 பெண் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர். தவிசாளர் தமிழராக காணப்படும் நிலையில் நிலையில் ஏனைய இரண்டு பெண் உறுப்பினர்களும் பெரும்பான்மை சிங்களவர்களாவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டும் மஸ்கெலிய பிரதேச சபையானது நேரடியாக எவ்வித பெண்கள் வலுவூட்டல் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நிதிப்பற்றாக்குறை ஒரு முக்கிய சவாலாகும். 

அந்தவகையில் வருடமொன்றுக்கான (2021) உறுப்பினர் ஒருவருக்கான நிதி ஒதுக்கீடாக ரூபாய். 100 000. 00 வழங்க தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் அத்தொகை கொவிட் பரவல் காரணமாக ரூ. 50 000.00 ரூபாயாக குறைக்கப்பட்டதாக அறியக்கிடைத்தது. இந்த நிதியானது தோட்டப்புறங்களை  அபிவிருத்தி செய்வதற்காக வழங்கப்பட்டதாகும்.

ஆனால் 2021 ஆம் ஆண்டு பாதீட்டின் படி எந்தவொரு நேரடி நிதி ஒதுக்கீடும் பெண்கள் வலுவூட்டலுக்காக முன்னெக்கப்படவில்லை. 2021 ஆண்டு செலவீனங்களை பொருத்தவரை கொவிட் தடுப்பு, வேலைத்திட்டங்கள், பொருட் கொள்வனவுகள், பாதை புனரமைப்பு, மலசலக்கூடங்களை புதுப்பித்தல், வடிகால் திருத்தம், உபகரண கொள்வனவு என்பனவே மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 

அதேபோல் தவிசாளரின் வருடாந்த அறிக்கையில் சுயதொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்பட்டிருக்கின்றது.

அவ்வகையான சுயதொழில் வாய்ப்புக்கள் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டனவா என்றும் அவற்றின் மூலம் நன்மையடைந்த குடும்பங்கள் தெரிவு, அவற்றின் தற்போதைய நிலை என்பன தொடர்பாக முழுமையான தகவல்கள் இல்லை.

2022 ஆம் ஆண்டு பாதீட்டில் சபையின் குறிக்கோள் உள்ளடக்கி முக்கிய விடயங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எனினும் நேரடியாக பெண்கள் தொடர்பான வலுவூட்டலுக்கு எவ்வித நேரடி நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதாவது அனைத்தும் உள்ளடக்கப்பட்ட வருமானமாக ரூ. 206,059,546.60 எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

அதேவேளை ஆண்டின் மொத்த சபையின் செலவீனமாக 206,050,289.71 எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனவே இப்பாதீட்டின் படி மேலதிக நிதியாக 9256.89 காணப்படுகின்றது.

இது மிகவும் ஒரு சிறிய தொகை. இதனை கொண்டு எவ்வித பாரிய வேலைத்திட்டங்களையும் சபையால் செய்ய முடியாது.

அத்தோடு இந்தச் சபையில் பல்வேறு மலையக கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அந்த கட்சிகளின் பாராளுமன்ற, மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஊடாக அவர்களுக்கு கிடைக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு பெண்கள் வலுவூட்டலுக்கான திட்டங்களை முன்மொழியலாம். ஆனால் அவ்வாறான பிரேரணைகளோ ஆலோசனைகளோ நிதித்திட்டத்துடன் முன்வைக்கப்படவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தயாரிப்பது தொடர்பில் உறுப்பினர்கள் வழங்கிய பிரேரணைகளில் சபையின் தவிசாளர் மட்டுமே நேரடியாக அதிகாரப் பிரதேசத்தினுள் பெண்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

அதற்கான நிதியாக ரூ.200000.00 மட்டுமே ஒதுக்கப்பட கோரியிருப்பதும் மிகவும் அபத்தமாக காணப்படுகின்றது. பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் 11 கிராம சேவகர் பிரிவுகளில் எவ்வாறு இந்த சிறியளவிலான நிதியைக் கொண்டு பெண்கள் வலுவூட்டலை மேற்கொள்வது என்பது கேள்விக்குறியே.

சபையின் தவிசாளர் முன்வைத்த யோசனைகளில் அபிவிருத்தி, கட்டுமானம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி ரூ.26.6 மில்லியன் ரூபாய்கள் பிரேரிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் ஒட்டுமொத்த 11 கிராம சேவகர் பிரிவுகளிலும் ரூ.200000.00 கொண்டு எவ்வாறு பெண்கள் வலுவூட்டலை மேற்கொள்வது இந்த நிதியின் போதாமை அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்றதாக அமைகின்றது. 

இது அவ்வாறு இருக்க ஏனைய எந்தவொரு உறுப்பினரும் பெண்களை சமூக, பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான பிரேரணைகளை வரவுசெலவு திட்ட தயாரிப்புக்கு பிரேரிக்கவில்லை.

பாதீட்டை தயாரிப்பதில் தமது பிரேரணைகளை சமர்ப்பித்த அமைப்புகளும் இந்த விடயத்தை கவனத்திலெடுக்க தவறியுள்ளன. சீத்தாகங்குல 320 B பிரிவைச் சேர்ந்த குறிஞ்சி மக்கள் அபிவிருத்தி சங்கம், பிரவுன்லோ 320 N பிரிவைச் சேர்ந்த ஐக்கிய கிராம அபிவிருத்திச் சங்கம், மஸ்கெலிய 320 A பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய கிராம அபிவிருத்தி சங்கம், மறே 320 H பிரிவை  சேர்ந்த சிவன் நற்பணி மன்றம் என்பன தமது பிரதேசங்களை மையப்படுத்தி வரவுசெலவு திட்டத்துக்கு தமது பிரேரணைகளை சமர்ப்பித்திருப்பினும் அவற்றும் நேரடியாக பெண்களை வலுவூட்டுவதற்கான  முன்மொழிவுகள் காணப்படவில்லை.

மேலும் இப்பிரதேச சபையின் பாதீட்டை தயாரிப்பதற்கான யோசனைகளில் பெண்கள் அமைப்புகள் எவையும் பங்கெடுக்கவில்லை.

என்பதும் முக்கிய ஒரு பிரச்சினையாகும். பிரதேசத்தில் இயங்கும் பெண்கள் அமைப்புக்கள் பாதீடு தயாரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தாமை, அது தொடர்பாக தெளிவின்மை, நடைமுறைகள் தொடர்பான விளக்கமின்மை என்பனவும் இதற்கான காரணங்களாகும்.

மஸ்கெலிய பிரதேச சபையானது மக்கள் அமைப்புக்களுடன் நேரடியாக தொடர்பை பேணுவதும் அவர்களை பாதீடு உருவாக்கத்தில் பங்கேற்க ஊக்குவிப்பதும் அவசியம்.

இது மக்கள் பங்கேற்பை மேலும் வலுவாக்கும். குறிப்பாக பெண்களை சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ரீதியாக வலுவூட்டுவதனூடாக சமூக அபிவிருத்தியை மேலும் விரிவாக்கலாம். பெருந்தோட்ட தொழில்துறையில் உள்ள பெண்கள் காலங்காலமாக பல்வேறு சமூக, பொருளாதார இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 

அவர்களை பலப்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினர் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு உந்துதலாக அமையும்.

அந்த  மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் பிரதேச சபை உறுப்பினர்களிடம் இந்த பொறுப்பு உள்ளது. அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புடன் வருடத்திற்கொரு வேலைத்திட்டத்தையாவது முன்னெடுத்து பிரதேச பெண்களின் சமூக, பொருளாதார, அரசியல் பங்கேற்பை திடமாக்க வேண்டியது அந்த பிரதிநிதிகளின் தலையாய கடமையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04