அய்மான் அல்-சவாஹ்ரியை கொன்றொழித்தலும் அல்கொய்தாவின் எதிர்காலமும்

Published By: Digital Desk 5

06 Aug, 2022 | 07:18 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

அமெரிக்கப் படைகள் வெளியேறிய ஆப்கானிஸ்தான் தலைநகரில் ஒரு விடியற்பொழுதில் அடுக்குமாடி வீட்டின் மேல் மாடியில் தாடி வைத்த முதியவர் உலவிக் கொண்டிருக்கிறார்.

ஒரு ஆளில்லா விமானம் வட்டமிடுகிறது. அதன் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்ட கமரா துல்லியமாக படம் பிடிக்கிறது. கமரா சிறைபிடித்த காட்சி கணப்பொழுதில் வானலை வழியாக பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து, பென்டகனின் அறையில் உள்ள திரையில் விரிகின்றன.

திரைக்கு முன்னால் பாதுகாப்பு அதிகாரிகள். கமராக் காட்சியை பலமடங்காக பெரிதாக்குகின்றார்கள். மாடியில் நடப்பவரின் உருவம் தெளிவாகத் தெரிகிறது. அவரே தான். திரையில் குறியிடுகிறார்கள். 

பொத்தானை அழுத்துகிறார்கள். ஆப்கான் தலைநகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானத்தில் இருந்து ஏவுகணைகள் பறக்கின்றன. ஒன்றல்ல. இரண்டு ஏவுகணைகள்.

சிறிது நேரத்தின் பின்னர், ஜோ பைடன் தொலைக்காட்சித் திரைகளில் தோன்றுகிறார். அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஸவாஹ்ரியைக் கொன்று விட்டோம் என்கிறார்.

மிகவும் திருத்தமான, துல்லியமான தாக்குதல். அடுக்குமாடி வீட்டில் இருந்த அல்-ஸவாஹ்ரியின் மனைவிக்கும், பிள்ளைக்கும் துளிக்காயமும் இல்லை. அமெரிக்காவின் இருபது வருடகால தேடல். நுணுக்கமான திட்டமிடல். 

உள்நாட்டில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஜோ பைடனைப் பொறுத்தவரையில், இது மிகப்பெரிய வெற்றி. அல்-கொய்தாவின் தலைவர், 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நியூயோர்க் நகர இரட்டை மாடிக்கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை திட்டமிட்ட சூத்திரதாரிகளில் பிரதானமானவர் என்பது ஒரு காரணம். 

சமகால உலகில் அமெரிக்காவிற்கு எதிராக பகிரங்கமாகக் குரல் கொடுக்கும் எதிரிகளில் ஒருவர் என்பது இரண்டாவது காரணமாக இருக்கலாம். இந்த வெற்றியால் ஜோ பைடன் ஆர்ப்பரிக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றே பதில் அளிக்க வேண்டும்.

அல்கொய்தா வலைப்பின்னலின் ஸ்தாபகத் தலைவர் ஒசாமா பின் லாடன். புகைப்படங்களில் இருப்பதைப் போன்று, அவருக்குத் துணையாக இருந்தவரே அல்-சவாஹ்ரி. பொதுவாக, அல்கொய்தா வலைப்பின்னலை ஒரு கட்டமைப்பிற்குள் வைத்துக் கொள்ள உதவிய இராஜதந்திரியாக (புசநல டீரசநயரஉசயவ) பார்க்கப்பட்டவர்.

2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபத்தோபாத் நகரில் அமெரிக்காவின் விசேட படைகளால் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதை அடுத்து, அல்கொய்தாவின் தலைவராகும் நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில், ஒரு தசாப்தகாலம் அல்கொய்தா வலைப்பின்னலின் நிர்வாகத்தை அவர் முன்னெடுத்துச் சென்றார். 

தமது மறைவிற்குப் பின்னர் அல்கொய்தாவின் செயற்பாடுகள் ஓய்ந்து விடக்கூடாது என்ற பிடிவாதம் அல்-சவாஹ்ரிக்கு இருந்தது. இந்த வலைப்பின்னல் தொடர்ந்து இயங்குவதற்கு உரிய சகல ஏற்பாடுகளையும் அவர் செய்து வைத்துள்ளார் என்பதையே தாலிபான் இயக்கத்துடனான அவரது ஒத்துழைப்பு புலப்படுத்துகிறது.

எனவே, ஆப்கானிஸ்தான் மண்ணில் அல்-சவாஹ்ரியைக் கொன்றமைக்கு அமெரிக்காவின் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இருந்தாலும், இதுவே அல்கொய்தாவின் முற்றுப்புள்ளியென கருத முடியாது.

நாளை அல்கொய்தாவின் தலைமைப் பதவிக்கு புதிய ஒருவர் நியமிக்கப்படலாம். அவர் அல்-சவாஹ்ரி போன்று அல்கொய்தாவை நிர்வகிப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருக்கக்கூடும். அதனைத் தாண்டி, அல்கொய்தாவின் நோக்கங்;களை முன்னிறுத்திப் போராடுவோரின் கூடுதலான அபிமானத்தை வென்றவராகவும் இருக்கலாம்.

வன்முறைகளை முன்னிறுத்திப் போராடும் பயங்கரவாதக் குழுவைப் பொறுத்தவரையில், மூன்று விடயங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில், தலைவனை இழந்த பின்னரும் குழு பிழைத்திருக்கும் என்பார்கள், அறிஞர்கள்.

அந்தக்குழுவை செயற்பட வைக்கக்கூடியதொரு கட்டமைப்பு. எந்த சூழ்நிலையிலும் மாறாத கோட்பாட்டுத் தத்துவம். தம்மைச் சார்ந்தவர்களின் ஆதரவு. அல்கொய்தா இயக்கத்தைப் பொறுத்தவரையில் மூன்றும் இருக்கிறது.

ஒசாமா பின்லாடன் அளவிற்கு அல்-ஸவாஹ்ரி புகழ்படைத்தவராக இருக்கவில்லை. எனினும், அல்கொய்தா வலைப்பின்னலை ஒரு கட்டுக்கோப்பான நிர்வாக முறைக்குள் அவர் கொண்டு வந்தார். கட்டளைகளை நிறைவேற்றக் கூடிய படிமுறைகளை உருவாக்கினார். தமது அமைப்பின் தலைவிதி, தான் உட்பட, தனியொரு தலைவரில் தங்கியிருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அல்-சவாஹ்ரியின் காலப்பகுதியிலர் அல்கொய்தாவின் விரிவாக்கம் வித்தியாசமான முறையில் நிகழ்ந்தது. நேரடியாக ஆட்களை சேர்த்து, அவர்களை முகாம்களுக்கு அழைத்து வந்து, பயிற்சி அளித்து, அங்கத்துவம் வழங்கி, சத்தியப்பிரமாணம் வாங்கிக் கொண்டு, செய் அல்லது செத்துமடி என்ற கட்டளையுடன் பணியை ஒப்படைக்கும் கட்டமைப்பு இருக்கவில்லை. 

மாறாக, ஒவ்வொரு நாடுகளிலும் இணைய வழியில் போதனை செய்து, இது தான் இலக்கு என்பதைத் தெரியப்படுத்தி, நேரடியாக பணிகளை ஒப்படைக்கும் பணி.  இந்தக் கட்டமைப்பில், தனியாக அல்லது குழுவாக அல்-கொய்தா இயக்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் நபர்கள், எங்கிருந்து கட்டளை வருகிறது, இயக்கத்தின் பதவிநிலை வரிசையில் எந்த இடத்தில் இருப்பவர் தமக்குக் கட்டளை இடுகிறார் என்பதைக் கூட அறியாதிருக்கலாம். 

ஆபிரிக்காவின் மாலியில் இருந்து தெற்காசியாவின் காஷ்மீர் வரை அல்கொய்தா இயக்கத்திற்காக குண்டு வைப்பவர்கள் இருந்தாலும், இவர்கள் ஒரு இயக்கத்தின் அங்கத்தவர்களாக பயிற்சி பெற்றவர்கள் அல்ல. தலைமைபீடத்தின் தலையீடு இல்லாமலும் தமக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு கட்டமைப்பாக இயங்குவார்கள். தலைவர் இல்லாமல் போனால் சிதறிச் செல்லாத கட்டமைப்பு.

இரண்டாவதாக, அல்கொய்தா இயக்கத்தின் வன்முறைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் பிரகாரம், இலக்குகளைத் தேர்ந்தெடுத்து அழித்தொழிக்க தலைவரின் கட்டளையில் தங்கியிருக்க வேண்டிய தேவை இல்லை. அல்கொய்தா இயக்கம் உருவாவதற்கு முன்னதாகவே இந்தக் கோட்பாடுகள் சில சமூகங்களில் வேரூன்றியிருந்தன. புறக்கணிக்கப்பட்டவர்கள் இலகுவாக வன்முறைக் கோட்பாடுகளை வரித்துக் கொண்டார்கள்.

எனவே, சிரியாவாக இருந்தாலென்ன, பாரிஸாக இருந்தாலென்ன ஓரங்கட்டலும், ஒதுக்கப்படுதலும் தொடர்ந்து நீடிக்கும் வரை, வன்முறைக் கோட்பாடுகளை வரித்துக் கொள்வோருக்கு குறைவிருக்காது. தமக்கு விமோசனம் தமக்கு இன்னல் செய்பவரை ஒழிப்பதே என்று நம்புகிறவர்கள் இருக்கும் வரையில், அல்கொய்தாவின் கோட்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும். தலைவன் இறந்து விட்டான் என்பதற்காக, இந்தக் கோட்பாடுகள் அழியப் போவதில்லை.

மூன்றாவதாக, அல்-கொய்தா வலைப்பின்னல் எங்கெல்லாம் செயலூக்கமான முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறதோ, அங்கெல்லாம் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் அல்-சவாஹ்ரி வழிநடத்தினார். ஐ.எஸ்.ஐ.எல். முதலான இயக்கங்களின் தலைவர்கள் மிகவும் இறுக்கமானவர்களாக இருந்தார்கள். 

தாம் சொல்வது தான் சரி, தாம் சொல்வதையே செய்ய வேண்டுமென வற்புறுத்தும் ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களாக இருந்தார்கள். அல்-சவாஹ்ரி அப்படியல்ல. தமது கட்டுப்பாட்டில் உள்ள குழுக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. மாறாக ஒத்துழைப்பைக் கோரினார். 

உதாரணமாக காஷ்மீரில் அல்கொய்தா இயக்கத்திற்கு ஆதரவாக குழுவொன்று இயங்குவதாக வைத்துக் கொள்வோம். அந்தக் குழுவின் இலட்சியங்கள் அல்கொய்தா வலைப்பின்னலின் கோட்பாடுகளுக்கு மாறானதாக இருக்கலாம். 

அந்த சந்தர்ப்பத்தில், நான் சொல்வதை செய் என்று கட்டளையிடுவதை விடவும், உன் தேவைகளை நிறைவேற்ற நான் உதவி செய்கிறேன், என்னுடன் ஒத்துழைத்து நட என்று தலைமைபீடம் கேட்டுக் கொள்ளக்கூடிய முறையை அல்-சவாஹ்ரி அல்கொய்தா வலைப்பின்னலில் உருவாக்கினார். 

இதன் காரணமாக, ஐ.எஸ்.ஐ.எல் முதலான போட்டிக்குழுக்களின் ஆதிக்கத்தில் இருந்தும் தப்பிப் பிழைக்கக்கூடிய ஆற்றல் படைத்ததாக அல்கொய்தா மாறியிருக்கிறது. 

எனவே, அல்-சவாஹ்ரியின் மரணத்தின் மூலம் அல்கொய்தாவை பலவீனப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஓழித்து விட்டதாக ஆர்ப்பரிக்க முடியாது என்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22