அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்

Published By: Digital Desk 5

08 Aug, 2022 | 09:07 AM
image

சி.அ.யோதிலிங்கம்

தமிழ் அரசியலைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கிய பேசுபொருளாகியுள்ளன. ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்கவுரை, இரண்டாவது ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டமைப்பின் சந்திப்பு. இரண்டுமே தமிழ் மக்களைப் பொறுத்தவரை பெரிய நம்பிக்கைகள் எவற்றையும் கொடுக்கவில்லை. 

ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் இரண்டு விடயங்களை முக்கியமாக குறிப்பிட்டார். ஒன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுத்தல், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெறுதல் என்பனவாகும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது என்பதனால் இரண்டையும் அவர் கூறியிருக்கலாம். 

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்று பொத்தம் பொதுவாகக் கூறினாரே தவிர தீர்வு எவ்வாறான தீர்வு, அதற்கான வழி வரைபடம் என்ன என்பது பற்றி தெளிவாக எதனையும் கூறவில்லை. சர்வதேச அபிப்பிராயத்தை திரட்டுவதற்கு அரசியல் தீர்வு பற்றியும் பேசவேண்டியது அவசியம் என்பதால் ஒரு சடங்கிற்காகக்கூட அவர் கூறியிருக்கலாம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசியல் தீர்வின் உள்ளடக்கமும், வழிவரைபடமும் முக்கியம். அரசியல் தீர்வு என்ற பெயரில் 13ஆவது திருத்தத்தை தமிழ் மக்களது தலையில் கட்ட முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அரசியல் தீர்வை இலங்கை என்ற அதிகாரக் கட்டமைப்புக்குள் சாத்தியமாக்குவதற்கு தென்னிலங்கையில் ஒரு அரசியல் கலாசார மாற்றம் தேவை. அது சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முன்னர் சிங்கள அரசியல் கட்சிகளிடம் உருவாக வேண்டும்.

சிங்கள தேசத்தில் கலாசார மாற்றத்திற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யாது வெறுமனவே சடங்கிற்கு அரசியல் தீர்வு அவசியம் எனக்கூறுவது ஏமாற்றுத்தனம். குறைந்தபட்சம் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளைக் கூட வலுவாகக் காட்டியிருக்கலாம். தமிழர்களின் உடனடியான பிரச்சினைகளுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கியிருக்கலாம். ஆனால் அவ்விதமாக எதுவும் வழங்கப்படவில்லை.

பொருளாதார நெருக்கடித்தீர்விற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவது என்பது முழுக்க இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியிலேயே தங்கியுள்ளது. இது விடயத்தில் நம்பிக்கையான உத்தரவாதங்கள் இல்லாமல் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து ஒத்துழைப்புக்குமென எதிர்பார்க்க முடியாது.

குறிப்பாக தமிழ் மக்கள் அரச அதிகாரக்கட்டமைப்புடன் இல்லை. அதற்கு வெளியேதான் நிற்கின்றனர். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் தமிழ் மக்கள் அக்கட்டமைப்பு வெளியே தள்ளப்பட்டனர். அவர்கள் உள்ளே வரவேண்டுமாயின் இலங்கைத் தேசியம் ஒன்று கட்டமைக்கப்படல் வேண்டும். அந்தத் தேசியத்திற்குள் தமிழ் மக்களிற்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இது உறுதிப்படுத்தாதவரை தமிழ் மக்கள் வெளியேதான் நிற்கப்போகின்றனர். 

சுமந்திரன் இவற்றிற்கான உத்தரவாதங்கள் எதுவுமில்லாமல் அதிகாரக் கட்டமைப்புடன் கலப்பதற்கான முயற்சிகளைச் செய்தார். ஒவ்வொருதடவையும் அவர் தோல்வியினையே தழுவினார்.  சிங்கள தேசத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான விடயங்கள் பல ஜனாதிபதியின் உரையில் வந்திருக்கின்றன. காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் அரசியல் நிலைப்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக ஒரு தோற்றமும் உரையில் தெரிகின்றது. 

ஒரு பக்கத்தில் போராட்டக்காரர்களை ஒடுக்கிக்கொண்டு அவர்களது நிலைப்பாடுகளை உள்வாங்குவது போன்ற தோற்றத்தைக் கொடுப்பதும் ஒருவகைத் தந்திரம் தான். முன்மொழியப்பட்டுள்ள தேசியவேலைத்திட்டமும் தேசியசபையும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை மட்டும் உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ளன.  காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பாராளுமன்றுக்கு வெளியே போராட்டத்தை நடாத்துபவர்களுக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் பங்கு கொடுக்கப்படல் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். 

அதேநேரம், மக்கள் சபை சுயாதீனமாக அமைப்பாக இருக்கும் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். இவற்றிற்கு மேலதிகமாக பாராளுமன்ற மேற்பார்வையாளர் குழு, போராட்டக்காரர்களைப் பாதுகாக்கும் செயலணி என்பவை பற்றியும் கூறப்பட்டடிருக்கின்றது. 22ஆவது திருத்தம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துழைப்புத் தரும்படியும் கேட்கப்பட்டுள்ளது.

முழு இலங்கைத்தீவையும் ஜனநாயகப்படுத்துவதற்கு முன் நிபந்தனை ஒடுக்கப்படும் தேசிய இனங்களை அவர்களின் அடையாளங்களுடன் அதிகாரக்கட்டமைப்பில் உள்வாங்குவதே. இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படாமல் எந்த ஜனநாயக முன்மொழிவுகளைக் கொண்டு வந்தாலும் அதுவொருபோதும் ஜனநாயகத்தைக் கொண்டுவராது. 

“இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்கும் எந்தத் தேசிய இனமும் தானும் விடுதலையடையப்போவதில்லை” என்ற  கால்மாக்ஸின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கதாகும் 

இரண்டாவது விடயம் ஜனாதிபதி, கூட்டமைப்பு சந்திப்பாகும். இதுவிடயத்தில் வழமையான தவறுகளைக் கூட்டமைப்பு இந்தத் தடவையும் விட்டிருக்கின்றது. தற்போதைய நெருக்கடி தொடர்பான கோட்பாட்டுப் பார்வை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அறவே இருக்கவில்லை.

எந்த ஒரு செயற்பாட்டிற்கும் கோட்பாடு வெளிச்சம் அவசியமானதாகும். செயலுக்கு வழிகாட்டுவது கோட்பாடு தான். இந்த நெருக்கடி என்பது சிங்கள தேசத்தின் லிபரல் பிரிவு, இனவாதப்பிரிவு, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள், இந்தியா, சீனா, அமெரிக்கா என்பவற்றின் நலன்களுக்கிடையிலான மோதலினால் ஏற்பட்டதாகும். எனவே இந்த நெருக்கடி மைதானத்தில் தமிழ் மக்களுக்கும் கௌரவமான இடம் இருக்கின்றது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வகட்சி தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்க கூட்டமைப்பு பூரண ஆதரவை வழங்கும் என்று சம்பந்தன் கூறியதாக சுமந்திரன் திருவாய் மலர்ந்திருக்கின்றார். இந்த முடிவினை சம்பந்தன் எத்தனை பேருடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்தார். குறைந்தபட்சம் பங்காளிக்கட்சிகளுடனாவது கலந்தாலோசித்தாரா? தான் மட்டும் தனித்து முடிவெடுப்பதற்கு இது சம்பந்தனின் சொந்த குடும்ப பிரச்சினையா? 

தேசிய வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாமல் எவ்வாறு ஆதரவளிக்க முடியுமம். தேசிய வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் தந்தால் நாம் ஆதரவளிப்போம் எனக் கூறுவதே பொருத்தமானதாக இருந்திருக்கும்.

சந்திப்புக்குச் செல்வதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி ஒரு தீர்மான வரைபை வரைந்து அதன் அடிப்படையில் உரையாடலை நடாத்தியிருக்க வேண்டும். எழுத்திலான வரைபை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஜனாதிபதி அவற்றை நிறைவேற்றாவிட்டால் அந்த வரைபு குறைந்த பட்சம் வரலாற்று ஆவணமாகவாவது எஞ்சியிருக்கும்.

அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கு இது பொருத்தமான காலம் அல்ல. ஏனைய விவகாரங்களை மட்டும் பேசுவோம் என்று  செல்வம் அடைக்கலநாதனும் சிர்த்தார்த்தனும் கூறியிருந்ததாகவும் அதனால் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவதை குறைத்து ஏனைய விடயங்கள் பேசப்பட்டதாகவும் தகல்கள் உள்ளன. தற்போது பொருத்தமான காலம் இல்லை என்றால் எப்போது பொருத்தமான காலம் வரும்? 

சிறிதரன் தன்னளவில் தயாரிப்புக்களுடன் சென்றார் அது பற்றி துறைசார் புலமையாளர்களின் ஆலோசனைகளையும் பெற்றிருந்தார். நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்காமல் இருத்தல், இடைக்கால நிர்வாக சபை ஒன்றை உருவாக்குதல் போன்ற முன்மொழிவுகளை முன்வைத்தார். அதற்கும் சாதகமாக பதில்கள் எவ்றையும் ஜனாதிபதி கூறவில்லை.

உண்மையில் ஜனாதிபதி பதவியேற்று ஒரு சில மாதங்களுக்குள் ஏதாவது நடைமுறைப்படுத்திகால் சரி இல்லையென்றால் எதுவும் நடக்காது என்பதே! வரலாற்று அனுபவம். எனவே தமிழ்த்தரப்பு அழுத்தம்  திருத்தமாக ஒரு மாதத்திற்குள் உடனடிப்பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், அரசியல் தீர்வு காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக கால அட்டவணை உருவாக்கப்படல் என்பதை அழுத்தமாக முன்வைத்திருக்க வேண்டும் அவை இடம்பெறவில்லை.

ஒரு தேசிய இனத்தின் சுயமரியாதையைக் கூட இவர்கள் கணக்கெடுக்கவில்லை வெறும் அடிமைக்கூட்டங்கள் போல நடந்திருக்கின்றனர். மனோகணேசனிடம் இருக்கும் சுய மரியாதை கூட இவர்களிடம் இல்லாதது கவலைக்குரியது. போதாதற்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தமை பற்றி விவாதம் வேறு நடந்திருக்கின்றது. கூட்டமைப்பிலுள்ள ஒற்றுமையின் சீத்துவத்தை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

முன்னணியினர் எல்லாவற்றிலும் இருந்தும் ஒதுங்கியிருத்தல் என்ற முடிவை எடுத்துள்ளனர். இது இலகுவான அரசியல் வழி. அரசியல் களங்களில் தமிழ் மக்களின் விவகாரத்தை உரத்துக்கூறி பேரம்பேச முடியாவிட்டால் எதற்கு மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

மொத்தத்தில் 2009இற்குப் பின்னரான 13 வருட காலத்தை தமிழ் மக்களின் அரசியலைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் மிக மோசமாக நாசப்படுத்தி விட்டனர். இனிமேலும் இவர்களை நம்பி எந்தவிதமான பயனுமில்லை. அனைத்தையும் புதிதாக உருவாக்குவது பற்றி யோசிப்பதே ஆரோக்கியமானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right