பெண்களின் கவனத்துக்கு....!

Published By: Digital Desk 7

04 Aug, 2022 | 11:04 AM
image

ண்மையிலேயே இது நல்ல மாற்றம். ஆம். 50 வயதுக்கு மேற்பட்ட தனியாக வசிக்கும் பெண்கள் இப்பொழுது தங்களுக்கு துணை தேவை என திருமண விளம்பரங்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் பல காலமாக இருந்துவரும் வழக்கம், இப்பொழுதுதான் நம்மவரிடத்தில் பரவி வருகிறது...

இளம் வயதில் துணையின் அருமை பெரிதாகத் தெரியாது. முதுமை வரும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தளர்வு வரும்போது கட்டாயம் துணை தேவைப்படும். ஆரம்பத்திலிருந்தே தனிமையில் இருந்தவர்களுக்குக் கூட முதுமையில்தான் துணை தேவை என தோன்ற ஆரம்பிக்கும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு அதன் அருமை தெரியும். முன்பு சமூகம் ஏதாவது சொல்லுமோ என பெண்கள் தயங்கினார்கள். ஆண்கள் மட்டும் 60 வயதிலும் மறுமணம் புரிந்தார்கள்.

இப்பொழுது பொருளாதார ரீதியாக பெண்கள் தன்னிறைவு அடைந்து வருவதால் மனதளவில் அவர்களும் தன்னம்பிக்கையுடன் திகழ்கிறார்கள். இதன் வெளிப்பாடுதான் இப்பொழுது 50 - 60 வயதுள்ள பெண்கள் தங்களுக்கான மறுமணம் குறித்து அளிக்கும் விளம்பரங்கள். இதை வரவேற்கவேண்டியது சமூகத்தின் கடமை.

Emotional Sharing என்பது எல்லா உயிரினங்களுக்கும் தேவை.

குழந்தைகளுக்கு வேலை கிடைத்து திருமணமானதும் தங்கள் குடும்பத்தை கவனிக்கவே முற்படுவார்கள். அப்போது முதுமையில் இருப்பவர்கள் தனிமையை உணர்வார்கள். சிரித்துப் பேசவும் அழுது அரற்றவும் அவர்களுக்கு துணை தேவை.  

தவிர முதுமையில் தனியாக இருக்கும் சிலர் மருந்து - மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சரியான நேரத்தில் உணவருந்த மாட்டார்கள். தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மாட்டார்கள். இவை எல்லாம் துணை கிடைக்கும்போது மாறும். இப்படி துணை தேடும் வயதானவர்களை அவர்களது உறவினர்களும் நண்பர்களும் கேலி, கிண்டல் செய்யக்கூடாது. இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்... 

இன்று 50 - 60 வயதில் துணை தேடும் பெண்களில் பலர், வசதி படைத்தவர்களாக...அதிக பென்ஷன் வாங்குபவர்களாக... சொத்து இருப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒருவேளை பணத்துக்காக வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்..தெரியுமா?

படித்த நகர்ப்புறங்களில்தான் இது மாதிரியான துணை தேவை என்பதை பார்க்கிறோம். அவர்கள் இயற்கையாகவே எச்சரிக்கையோடு இருப்பார்கள். அப்படியிருந்தாலும் வரும் நபரிடம், சொத்து பற்றிய முழு விபரங்களை சொல்லாமலிருப்பது நல்லது. அதுபோலவே வருபவர் பெயரில் உடனே உயில் எழுதக்கூடாது. இது பொதுவான தற்காப்பு.

காலார நடக்க, சேர்ந்து டீ குடிக்க, சிரித்துப் பேசியபடி சாப்பிட, கதை அடிக்க தேவைப்படும் இந்த உறவில் பெரிய அளவில் குற்றம் நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடக்காதபடி தெரிவு செய்வது நல்லது...!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right