உடலில் ஏற்படும் ஆறாதப்புண்களே புற்றுநோயின் முதற்புள்ளி என்பார்கள். அதனால் எப்பகுதியில் புண்கள் வந்தாலும் அதனை அலட்சியம் செய்யாது அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். அதே தருணத்தில் உடலின் உள் பகுதியில் புண் ஏற்பட்டால், அதனை பல அறிகுறிகள் மூலம் கண்டறியவேண்டும். அதன் பின் அதற்குரிய சிகிச்சையை மேற்கொண்டு புண்ணை குணப்படுத்திடவேண்டும். அப்படி கவனிக்கத் தவறிவிட்டால் அவை ஆறாமல் புற்றுநோய்க்கு வித்திடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எம்முடைய ஆசன வாய் பகுதிக்கு சற்று உள்ளே இருப்பது தான் மலக்குடல். ஆங்கிலத்தில் இதனை Rectom என்று குறிப்பிடுவார்கள். பெருங்குடலின் இறுதிப்பகுதி இது தான் என்றாலும் குடல் புற்று நோய் தாக்கப்படுவது இப்பகுதியில் தான். இதற்கு பல காரணங்கள் இருப்பினும், நாம் சாப்பிடும் உணவு முறைகளே இதனை தோற்றுவிக்கின்றன. அதிக காரம் அல்லது அதிக கொழுப்புள்ள உணவு, நார் சத்தற்ற உணவு, விற்றமின் அல்லது தாதுப் பொருள்களற்ற உணவு என பல வகையான உணவுகளை நாம் தொடர்வதால் மலக்குடல் பகுதியில் புற்றுநோய் தோன்றுகிறது.

சர்க்கரை மற்றும் உயர் குருதி கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாரம்பரியத்தில் 15 சதவீதத்தினருக்கு இவ்வகையான புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மலச்சிக்கல், மலம் கழிக்கும் போது மலத்துடன் இரத்தம் சேர்ந்து வருதல், தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டோ ஏற்படும் அடி வயிற்று வலி, மலம் கழித்த பின் அவ்விடத்தில் இனங்கண்டறிய இயலாத ஒரு வித வலி ஆகியவை இருந்தால் உடனே மருத்துவர்களை அணுகி, முறையாக மருத்துவ பரிசோதனையை செய்து கொண்டு மலக்குடல் புற்றுநோயா? அல்லது வேறு ஏதேனும் உபாதையா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். இவற்றை அலட்சியப்படுத்தினால் வேகமாக கட்டிகள் வளர்ந்து மலக்குடலை அடைத்துவிடும், அதனுடன் வேறு பகுதிகளுக்கும் பரவிவிடும் தன்மை கொண்டது.

இதனை மருத்துவர்கள் எண்டாஸ்கோப்பி மூலம் கட்டியை கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வார்கள். இத்தகைய சிகிச்சையின் போது ஒரு சிலருக்கு மலக்குடலை அவ்விடத்திலிருந்து அகற்றி வெளியே வேறொரு இடத்தில் பொருத்துவதுமுண்டு. இது அனைவருக்கும் ஏற்படும் என்று சொல்ல இயலாது. புற்று நோய் கட்டி இடும்பு எலும்புக்குள் இருந்தால், அதனை லேப்ராஸ்கோப்பி மூலம் கண்டறிந்து எளிதாக அகற்றிவிடலாம். வேறு சிலருக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சையளித்து கட்டுக்குள் வைத்திருப்பார்கள். இதனை முழுமையாக குணப்படுத்தவேண்டும் என்றால் அதனை எளிதில் கண்டறிந்தால் சாத்தியம். அதற்கு மாற்றாக இதனை முற்றிலும் தடுப்பதற்கான பல வழிமுறைகள் உள்ளன. அதனை பின்பற்றினால் போதுமானது.

நாம் நார் சத்து அதிகமுள்ள உணவுகளை தொடர்ந்து தினமும் சாப்பிடவேண்டும். அத்துடன் பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள் ஆகியவற்றை அன்றாடம் சேர்த்துக்கொள்ளவேண்டும். கொழுப்பு சத்து மற்றும் காரம் குறைவாக உள்ள உணவுகளையே சாப்பிட வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆண் மற்றும் பெண்கள் என இருபாலாரும் ஆண்டுக்கொரு முறை குடல் பரிசோதனையை செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் மலக்குடல் புற்று நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு முற்றாக தவிர்க்கலாம்.

டொக்டர் C பழனிவேல் M.D,

தொகுப்பு  அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்