அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : கருத்துக் கணிப்பில் யார் வெற்றி : முடிவு வெளியானது

Published By: MD.Lucias

07 Nov, 2016 | 01:07 PM
image

*நாளை தேர்தல் 

*14 கோடி பேர் பதிவு

*4கோடி பேர் முன்னதாக வாக்களிப்பு

*ஒபாமாவும் முன்னதாக வாக்களிப்பு

*இறுதி கட்ட பிரசாரம் 

*சர்ச்சையில் வேட்பாளர்கள்  

*பாலியல் சர்ச்சை

*தேர்தல் முறை...

*மக்களின் வாக்குகளை மாத்திரம் போதாது (Electoral College)

*தேர்தல் ஆணையம் கிடையாது

*உதிரிக் கட்சிகள்

*தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதிகள்

*270 தேர்வாளர் குழு வாக்குகள் அவசியம்

*ராஜிநாமா செய்த ஒரே ஜனாதிபதி!

*பாலியல் சர்ச்சையில் சிக்கிய கிளிண்டன்

*ஜனாதிபதியான நடிகர்!

*சர்ச்சையை ஏற்படுத்திய தேர்தல்

*முன்னதாக வாக்களிப்பதில் சாதனை

*முக்கியத்துவம் இல்லாத துணை ஜனாதிபதி பதவி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட கருத்துக் கணிப்பில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பைவிட 5-7 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக கருத்துக் கணிப்புகளில் ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

43 சதவீத வாக்காளர்களின் ஆதரவோடு டிரம்ப் பின்தங்கியுள்ளார். எனினும், இதுவரை யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யாத வாக்காளர்களை டிரம்ப் ஈர்த்துவிட்டால், அவர் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெறவும் வாய்ப்பு உள்ளது.

நவம்பர் முதலாம் திகதி தொடர்க்கம் 4ஆம் திகதி வரை  வொஷிங்டன் போஸ்ட் மற்றும் ஏபிசி நியூஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ஹிலாரி 48 சதவீத வாக்குகளும், டிரம்ப் 43 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். 

இதேவேளை 'மெக்கிளாட்சி மாரிஸ்ட்' கருத்துக்கணிப்பில்  ஹிலாரிக்கு 44 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 43 சதவீத உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை தேர்தல் 

 உலகமே அதிகம் எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனால் வேட்பாளர்களான ஹிலாரி, டிரம்ப் இருவரும் உச்சக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். 

14 கோடி பேர் பதிவு

இந்த தேர்தலில் 14 கோடியே 63 இலட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்காக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 

அவர்களில் 69 சதவீதம் பேர் கட்டாயம்; இந்த தேர்தலில் வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர். 

4கோடி பேர் முன்னதாக வாக்களிப்பு

ஏற்கனவே சுமார் 4 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.

ஒபாமாவும் முன்னதாக வாக்களிப்பு

 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் தற்போதைய ஜனாதிபதி ஒபாமா, ஏற்கனவே தனது வாக்கை செலுத்திவிட்டார்.

 இருப்பினும் அவர் யாருக்கு வாக்களித்தார் என வெளியிட மறுத்து விட்டார்.

இறுதி கட்ட பிரசாரம் 

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 

கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்தாலும், இருவருக்கும் இடையேயான ஆதரவு மாறப்பட்ட நிலையிலேயே உள்ளது.

எனவே வாக்காளர்களை இறுதிக்கட்டமாக கவருவதில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஹிலாரி தனது பிரசாரத்துக்கு பொப் பாடகிகள் பியான்சே, கேத்தி பெர்ரி ஆகியோரை பயன்படுத்தி வருகிறார். டிரம்ப், நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இல்லை என்பதால் அவர் தனது குடும்பத்தினரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2016

பல்வேறு சறுக்கல்கள் இருந்தாலும், உலகிலேயே இராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரரீதியாக வல்லரசாகத் திகழும் நாடு அமெரிக்கா. 

அந்நாட்டில் ஜனாதிபதியாக இருப்பவர், அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட்டுப்பட்டவர் அல்ல. எந்த வடஷயத்திலும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு. 

அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் எளிதல்ல. தேசத்துரோகம், கொள்ளை உள்ளிட்ட மோசமான குற்றங்களுக்காக வேண்டுமானால், அவர் மீது நாடாளுமன்றம் விசாரணை நடத்தி பதவிநீக்க முடியும். 

வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. தனது ஒரு கையெழுத்தால் ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றும் வலிமை அவருக்கு உண்டு. 

உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவானதிலும், ஜப்பான் முதல் ஈராக் வரை பல நாடுகள் பேரழிவைச் சந்தித்ததிலும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் பங்கே அதிகமானது.

சர்ச்சையில் வேட்பாளர்கள்  

 முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மிகவும் பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. 

இரு முக்கிய வேட்பாளர்களுமே சர்ச்சையில் சிக்கியுள்ளனர் என்பதும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்.

முன்பு அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்கள் தங்கள் பதவிக் காலத்தில்தான் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர். 

ஆனால், இப்போது, ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவருமே குற்றச்சாட்டுகளுடனும், சர்ச்சைகளுடனும்தான் தேர்தலையே சந்திக்கின்றனர்.

பாலியல் சர்ச்சை

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது பல பெண்கள் அடுக்கடுக்காக பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர். 

ஊழல்

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்பு வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அலுவலகப் பயன்பாட்டுக்கு தனிப்பட்ட இ-மெயிலைப் பயன்படுத்திய சர்ச்சையை எ.ப்.பி.ஐ. விசாரணை செய்து வருகின்றனது.

ஜனாதிபதியாக ஹிலாரி தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெறுவார். 

இப்போதைய சூழ்நிலையில் வெற்றி வாய்ப்பில் டிரம்ப்பைவிட ஹிலாரி ஒருபடி முன்னே இருக்கிறார் என்று பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பழைமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் ஜனநாயகத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதத்தில் ஹிலாரியின் கையே ஓங்கியது. 

மேலும், சர்ச்சைக்குரிய பேச்சுகளும், பல பெண்கள் கூறிய குற்றச்சாட்டுகளும் டிம்ரப்புக்கு சிறிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. 

எனினும், வாக்குப்பதிவின்போது காற்று யார் பக்கம் வேண்டுமானாலும் வீச வாய்ப்புள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்ப்பது வழக்கமான நிகழ்வுதான்.

தேர்தல் முறை...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் என்பது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகும். 

ஒவ்வொரு லீப் ஆண்டிலும் நவம்பர் மாதத்தில் வரும் முதல் திங்கள் கிழமைக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு நாளை 8-ஆம் திகதி தேர்தல் நடைபெறகிறது.

மக்களின் வாக்குகளை மாத்திரம் போதாது (Electoral College)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்தால் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்படுபவர் நாடு முழுவதும் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் மட்டும்போதாது.

மாகாண ரீதியில் தேர்வாளர் குழுவின் (Electoral College) வாக்குகளை அதிகம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். 

228 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரசியல் சட்டப்படி மாகாண அளவிலான தேர்வாளர் குழு மூலமாகவே ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

எனினும், இந்தத் தேர்வாளர் குழு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால், மாகாண வாரியாக மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள்தான் ஜனாதிபதியாகவும்  துணை ஜனாதிபதியாகவும் தெரிவாக முடியும்.

அமெரிக்காவின் 50 மாகாணங்கள், மத்திய அரசின் ஆட்சிக்கு உள்பட்ட தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றில் இருந்து 538 தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பல்வேறு மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் தேர்தல் முடிந்த பிறகு வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமைக்கு அடுத்து வரும் திங்கள்கிழமை அந்தந்த மாகாணத் தலைநகரங்களில் கூடுவார்கள். 

51 இடங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டம் நடக்கும். வாக்குச் சீட்டு மூலம் ஜனாதிபதிக்காகன  வாக்கை தேர்வாளர்கள் அளிப்பார்கள். 

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே நடைமுறையில் துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுவார். 

பெரும்பாலான மாகாணங்களில் அதிக வாக்குகளை (சில மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான) ஒரு வேட்பாளர் பெற்றால், அந்த மாநிலத்தின் அனைத்து தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார். ஒரு சில மாகாணங்களில் மட்டுமே விகிதாசார முறைப்படி தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தேர்தல் ஆணையம் கிடையாது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை நடத்த தனியாக நாடு தழுவிய அளவில் தேர்லை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

அமெரிக்காவைப் பொருத்தவரை தேர்தலை நடத்தும் பொறுப்பு மாகாணங்களிடம்தான் உள்ளது. அந்தந்த மாகாண சட்டத்துக்கும், மத்திய அரசியல் சட்டத்துக்கும் உள்பட்டு வெவ்வேறு முறைகளில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுகிறது.

அமெரிக்காவில் கலிபோர்னியா, நியூயோர்க் உள்ளிட்ட மாகாணங்களில் ஜனநாயகக் கட்சி பலமாக உள்ளது. டெக்ஸாஸ், அலபாமா உள்ளிட்ட சில மாநிலங்கள் குடியரசுக் கட்சியின் கோட்டையாக உள்ளது. 

எனவே, இந்த மாநிலங்களில் அந்தந்த கட்சிகள் தேர்வாளர் குழுவுக்குத் தேவையான பெருவாரியான வாக்குகளைப் பெற்றுவிடும். 

அதே நேரத்தில் காலங்காலமாக இரு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்களை அதிகம் கொண்ட ஃபுளோரிடா, கொலராடோ, மிச்சிகன், விஸ்கான்சின், ஒஹையோ உள்ளிட்ட 11 மாகாணங்களில்தான் (ஸ்விங் ஸ்டேட்ஸ்) வாக்குகளைப் பெற கடும் போட்டி நிலவி வருகிறது.

உதிரிக் கட்சிகள்

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும்தான் முக்கியப் போட்டி என்றாலும், மாகாண அளவில் செயல்படும் பல்வேறு சிறிய கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளனர்.

இந்தத் தேர்தலிலும் சுதந்திரக் கட்சி, பசுமைக் கட்சி, அரசமைப்புக் கட்சி மற்றும் சுயேச்சைகள் சிலர் ஜனாதிபதி பதவிக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிடுகின்றனர். 

அமெரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி உட்பட சுமார் 35-க்கும் அதிகமான கட்சிகள் அங்கு உள்ளன. நகர அளவில் செயல்படும் கட்சிகளும் அங்கு உள்ளன.

தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதிகள்

அமெரிக்க ஜனாதிபதி , துணை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டுமென்றால் மூன்று முக்கிய அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும்.

1) அமெரிக்காவில் பிறந்த அந்நாட்டுக் குடிமகனாக இருக்க வேண்டும்.

2) 35 வயது நிறைவு அடைந்திருக்க வேண்டும்.

3) 14 ஆண்டுகளாவது அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும்.

இப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபோது அவர் அமெரிக்காவில் பிறந்த குடிமகன் அல்ல என்று சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டாலும், இறுதியில் ஒபாமாவுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.

ஒபாமா பிறந்த ஹவாய் தீவுகள் கடந்த 1959-ஆம் ஆண்டுதான் அமெரிக்காவின் 50-ஆவது மாகாணமாக இணைக்கப்பட்டது.

270 தேர்வாளர் குழு வாக்குகள் அவசியம்

கடந்த 1964 முதல் நாடு முழுவதும் 538 தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மாகாணங்களில் நடக்கும் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜனாதிபதி யார் என்பது முடிவாகிவிடும்.

ஏனெனில், எந்த வேட்பாளருக்கு அதிக தேர்வாளர் உள்ளனர் என்பதும் அப்போதே தெரிந்துவிடும். 

மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 270 வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

எந்த வேட்பாளரும் 270 வாக்குகளைப் பெறாவிட்டால் ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் பொறுப்பை நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை ஏற்கும்.

நடைமுறையில் இரு வேட்பாளருக்கு மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது இரு வேட்பாளரும் சரியாக 269 வாக்குகளைப் பெற்றாலோதான் இந்த நிலை ஏற்படும். 1800-ஆம் ஆண்டுகளில் இரு முறை மட்டுமே நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை மூலம் ஜனாதிபதி தேர்வு நடைபெற்றுள்ளது.

ராஜிநாமா செய்த ஒரே ஜனாதிபதி!

அமெரிக்காவில் இப்போது நடைபெறுவது 58 ஆவது ஜனாதிபதி தேர்தலாகும். 228 ஆண்டுகால அமெரிக்க ஜனநாயகத்தில் இதுவரை ஒரே ஒரு ஜனாதிபதிக்கு மாத்திரமே பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

அமெரிக்க வரலாற்றில் கரும்புள்ளியாக இப்போது வரை நீடிக்கும் வோட்டர்கேட் முறைகேட்டில் சிக்கி பதவியை ராஜிநாமா செய்தவர் அமெரிக்காவின் 37-ஆவது ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன். 

ஊழல், முறைகேடுகளுக்கு பின்னால் ஆங்கிலத்தில் "கேட்' என்ற அடைமொழி (உதாரணமாக "கோல்கேட்' - நிலக்கரிச் சுரங்க முறைகேடு) சேர்க்கப்படக் காரணமாக இருந்ததும் வோட்டர்கேட் முறைகேடுதான்.

1972-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சி சார்பில் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நிக்ஸன், எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைமையகம் அமைந்த "வோட்டர் கேட்' அலுவலகத்தில் இரகசியமாக கேட்டும் கருவிகளைப் பொருத்தி, அவர்களின் தேர்தல் உத்திகளை அறிந்து கொண்டார் என்பது நிக்ஸன் மீதான குற்றச்சாட்டு. 

1974-ஆம் ஆண்டில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது குற்றத்தை நிக்ஸன் ஒப்புக் கொண்டார்.

 எனினும், பதவியை ராஜிநாமா செய்ய அவர் முன்வரவில்லை. எனினும் சொந்தக் கட்சியில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பை அடுத்து அவர் பதவி விலகினார். இந்த ஊழலை முதலில் வெளிக்கொண்டு வந்தது "வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் சர்ச்சையில் சிக்கிய கிளிண்டன்

இதன் பிறகு பெரிய சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் ஆவார். மோனிகா லெவின்ஸ்கி பாலியல் விவகாரத்தில் சிக்கிய கிளிண்டன் மீது பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தாலும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஜனாதிபதியான நடிகர்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (525 தேர்வாளர் குழு வாக்குகள்), மிக அதிக வயதில் (69) ஜனாதிபதியானவர் என்ற பெருமைக்குரியவர் ரொனால்ட் ரீகன். 

ஏழைக் குடும்பத்தில் பிறந்த ரீகன் தொலைக்காட்சி நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் ஹொலிவுட் நடிகராக முன்னேறினார். 

இடைநடுவே இராணுவத்திலும் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு அரசியலில் நுழைந்து குடியரசுக் கட்சியில் இணைந்து கலிபோர்னியா மாகாண ஆளுநராக உயர்ந்து, இறுதியாக வெள்ளை மாளிகையை அடைந்த சிறப்புக்குரியவர் ரொனால்ட் ரீகன். 

1981 முதல் 1989 வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரீகன் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன், இராணுவத்தையும் பலப்படுத்தினார். அமெரிக்காவில் ஒலிம்பிக் போட்டியை நடத்திய முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் ரீகனையே சாரும்.

சர்ச்சையை ஏற்படுத்திய தேர்தல்

நேரடியாக மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், தேர்வாளர் குழுவின் 270 வாக்குகள் கிடைக்காவிட்டால் ஜனாதிபதியாக முடியாது என்பதற்கு கடந்த 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அண்மைக்காலத்தில் சிறந்த உதாரணமாக அமைந்தது. 

குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் - ஜனநாயகக் கட்சி சார்பில் அல்-கோர் ஆகியோர் களம் கண்ட 2000-ஆம் ஆண்டு தேர்தலில் நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 47 சதவீத வாக்குகளை ஜோர்ஜ் புஷ் பெற்றார். 

அதே நேரத்தில் அல்-கோருக்கு 48 சதவீத வாக்குகள் கிடைத்தன. எனினும் ஃபுளோரிடா மாகாண தேர்வாளர் குழு வாக்குகளை சர்ச்சைக்குரிய விதத்தில் புஷ்ஷிடம் அல்-கோர் இழந்தார். இதன் மூலம் 271 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்று ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியானார்.

முன்னதாக வாக்களிப்பதில் சாதனை

அதிகாரப்பூர்வ தேர்தல் நாளுக்கு முன்னதாகவே வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைச் செலுத்த அமெரிக்க ஜனநாயகத்தில் பல மாகாணங்களில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ஃபுளோரிடா, ஜோர்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட 27 மாகாணங்களிலும், கொலம்பியா மாவட்டத்திலும் தேர்தலுக்கு 5 முதல் 4 நாள்களுக்கு முன்பே இருந்தே பொதுமக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். இதற்காக சிறப்பு வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு 2012-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 3.23 கோடி பேர் தங்கள் வாக்குகளை முன்கூட்டியே செலுத்தியது சாதனையாக இருந்தது. 

இந்த ஆண்டில் தேர்தலுக்கு 3 நாள்களுக்கு முன்னதாகவே (நவம்பர் 4) 3.5 கோடி பேர் தங்கள் வாக்குகளை முன்னதாகவே செலுத்தி புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.

முக்கியத்துவம் இல்லாத துணை ஜனாதிபதி பதவி!

அமெரிக்க துணை ஜனாதபதி யார்? என்று பொது அறிவுப் புலிகளிடம் கேட்டால் கூட சில விநாடிகள் யோசித்துதான் பதிலளிக்க முடியும். ஏனெனில், ஜனாதிபதிக்கு நேர் எதிராக முக்கியத்துவம் இல்லாத பொறுப்பாகவே அமெரிக்க துணை ஜனாதபதி பதவி உள்ளது. 

ஜனாதபதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது அவர் இறந்துபோனாலோதான் துணை ஜனாதிபதி முழு அதிகாரம் பெற்று ஜபாதிபதியாவார். 

இதை தவிர செனட் அவையை நடத்தும் பொறுப்பு துணை ஜனாதிபதிக்கு உண்டு. துணை ஜனாதிபதியாக  இருப்பவர் காலையில் எழுந்தவுடன், "ஜனாதிபதி நலமாக இருக்கிறாரா?' என்று கேட்டுத் தெரிந்து கொண்டு மீண்டும் உறங்கச் சென்றுவிடலாம் என்றும் நகைச்சுவையாகக் கூறப்படுவது உண்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17